தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாகவும், குணசித்திர நடிகையாகவும் வலம் வந்த சோனா, தமிழ்த் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமான பெப்ஸி முன்பாக திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஸ்மோக் என்ற பெயரில் வெப்சீரிஸ் ஒன்றை நடிகை சோனா தயாரித்து இயக்கி உள்ளார். பிரபல ஓடிடி தளம் ஒன்றில் அந்த தொடர் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த தொடரின் போது தன்னுடைய மேலாளரால் தாம் மிகவும் பாதிக்கப்பட்டதாக சோனா புகார் கூறியிருந்தார். அந்த புகாரின்மீது பெப்ஸி அமைப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அந்த அலுவலகத்தின் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஆடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது..
சினிமாத்துறையில் 25 ஆண்டுகளாக இருக்கிறேன். படம் தயாரித்துள்ளேன், நடித்துள்ளேன், என்னென்னமோ செய்துள்ளேன். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக என்னை எதுவும் செய்யவிடுவதில்லை. திரைத்துறையைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்று வெளிப்படையாக கூறியதற்காக இவ்வளவு வருடங்கள் என்ன ஒதுக்கி வைத்து விட்டனர். நானும் ஒதுங்கி என் வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன்.
இதையும் படிங்க: காதல் கணவருடன் இறுக்கி அணைத்தபடி நடிகையின் க்யூட் கிளிக்..! ஒரே சிரிப்புதான் மொத்த நியூயார்க்கும் குளோஸ்..!
ஒருகட்டத்தில் நானே படம் ஒன்றை தயாரித்து இயக்க ஓடிடி தளம் ஒன்றுடன் ஒப்பந்தம் மேற்கொண்டேன். அதற்காக பூஜை போட்ட நாள்முதல் என்னை அடிக்கிறார்கள். எல்லாவற்றிலும் பிரச்னை, பிரச்னை. மிரட்டல் விடுத்தார்கள். அவற்றையெல்லாம் தாண்டி, தாண்டி எல்லா பிரச்னையையும் தீர்த்து படத்தையும் முடித்து இவ்வளவு தூரம் வந்துள்ளேன்.

இரண்டாவது கட்ட படபிடிப்பின்போது மேலாளர் ஒருவரை வேலைக்கு சேர்த்தேன். அவர் 5 நாட்களுக்கு நடிகர்களுக்கு சம்பளம் தராமல், என்னிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களிடம் ரசீதில் கையெழுத்து மட்டும் வாங்கி உள்ளார். இரண்டு ஹார்ட் டிஸ்க்கை எடுத்து கேமரா டிபார்ட்மெண்டிடம் கொடுத்துவிட்டு பணம் கொடுத்த பிறகு தந்தால் போதும் என்று இவரே கூறியுள்ளார்.

இந்த விஷயம் தெரிந்தபிறகு ஒரு மாத காலம் அவரிடம் போராடி தோற்று பெப்ஸியில் அந்த நபர் மீது புகார் அளித்தேன். அவர்கள் பஞ்சாயத்து செய்து நான்தான் பணத்தை தரவேண்டும் என்றும், அதுவரை படபிடிப்பு நடத்தக்கூடாது என்று அந்த நபருக்கே ஆதரவாக பேசினர். தயாரிப்பாளர் சங்கத்தில் இதனை முறையிட்டு படபிடிப்பை நான் முடித்துவிட்டேன்.
வெளியீட்டிற்கான வேலைகளை நான் தொடங்கியநிலையில், ஒரு ஹார்ட் டிஸ்க்கை திருப்பித் தர மறுக்கின்றனர். நானும் எவ்வளவோ முயன்றுவிட்டேன். நக்கலாக பேசுகின்றனர். கேவலமா பேசுறாங்க. எந்த குப்பைத்தொட்டியில் கிடக்கிறது என்று தெரியவில்லை, தேடணும் என்கின்றனர். நான் ஒற்றைப் பெண்மணி என்பதால் என்னை அலைக்கழிக்கின்றனர். எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. நான் என்ன தப்பு செய்தேன். எனக்கு நீதி வேண்டும். எனக்கு உதவுங்கள் ..

இவ்வாறு அந்த ஆடியோவில் சோனா கலங்கி பேசியுள்ளார். இந்த விஷயத்தில் பெப்ஸி அமைப்பு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க: நடிகை சமந்தாவின் புதிய காதலர் பாலிவுட் டைரக்டரா..? வதந்திகளை தூண்டும் வைரல் புகைப்படங்கள்..!