தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவர் எடுக்கும் ஒவ்வொரு திரைப்படமும் வணிகரீதியாக வெற்றிபெறும் வேளையில் கலைநேர்த்திக்காக கொண்டாடப்படுகின்றன. பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை, விடுதலை-2 ஆகிய 7 படங்களும் வானவில்லின் ஏழு நிறங்கள் போல தமிழ் சினிமாவுக்கு சர்வதேச அரங்கில் புதியதொரு நிறத்தை காண்பித்தது.

அதேபோன்று எழுத்தாளர்களின் படைப்புகளை தனது படத்தின் மூலக்கதையாக வெற்றிமாறன் எடுத்துக் கொள்வது, இலக்கியத்திற்கும் - தமிழ் சினிமாவுக்குமான பாலமாகவும் பார்க்கப்படுகிறது. சந்திரகுமாரின் லாக் அப் நாவல் விசாரணை படமானது. பூமணி எழுதிய வெக்கை நாவல் அசுரன் படமானது. தங்கம் எழுதிய வேங்கைச்சாமி விடுதலை படத்தின் மூலக்கதை என குறிப்பிடப்பட்டது. அந்தவகையில் தமிழ் இலக்கிய உலகின் முன்னோடிகளில் ஒருவராக பார்க்கப்படும் சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் நாவல் ஒரு கல்ட் க்ளாசிக்.
இதையும் படிங்க: மீண்டும் இணையும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி.. வடசென்னை - 2ஆக இருக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பு...

அதனை திரைப்படமாக வெற்றிமாறன் எடுக்கப் போகிறார் என்ற செய்தி இலக்கியம் மற்றும் திரைப்பட ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யா காளையை அடக்குவது போன்ற கிராபிக்ஸ் காட்சிகள் வெளியாகி உற்சாகத்தை இரட்டிப்பாக்கியது.

இந்த சூழ்நிலையில் நடிகர் தனுசை வைத்து வெற்றிமாறன் தனது 9-வது படத்தை இயக்குவார் என ஆர்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. அப்படியெனில் வெற்றிமாறன் எடுக்கப் போகும் 8-வது படம் எதுவென்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கப் போகிறது என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சூர்யா, தற்போது ஆர்.ஜே.பாலாஜி படத்தில் நடித்து வருகிறார். அது முடிந்தவுடன் வாடிவாசல் படத்தில் வெற்றிமாறனுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிவாசல், தனுசுடன் புதிய படம் என அடுத்த 2 ஆண்டுகளில் வெற்றிமாறன் தரப்பில் இருந்து புதிய படைப்புகள் வரவுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: திருமணங்கள் என்ற அமைப்பே கூடாது என்கிறாரா?... கிருத்திகா உதயநிதி சொல்ல வருவது என்ன?...