மெகா NDA கூட்டணி அமைகிறது...எடப்பாடி மன மாற்றத்தின் பின்னணியில் நடந்தது என்ன? அட இந்த கட்சிகள் எல்லாம் வருகிறதா?
பாஜகவுடன் கூட்டணியே இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து கூட்டணி பற்றி முடிவெடுக்க வேண்டிய நிர்பந்தம் என்ன? அமையப்போகும் மெகா கூட்டணியில் இணையும் கட்சிகள் குறித்த கூடுதல் விவரங்களை பார்ப்போம்.
2017 ஆம் ஆண்டு சசிகலா எடப்பாடி பழனிசாமி கையில் கட்சியை கொடுத்துவிட்டு சிறைக்கு சென்றவுடன் சில மாதங்களிலேயே சசிகலா, டிடிவி தினகரன் விரட்டப்பட்டு ஓபிஎஸ் மேலிருந்து திணிக்கப்பட்டார். அதன் பின்னர் ஆட்சியைக்காப்பாற்றிக்கொள்ள பாஜக இழுத்த இழுப்புக்கெல்லாம் எடப்பாடியும் அதிமுகவும் போகும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் முத்தலாக் மசோதா, சிஏஏ உள்ளிட்ட மசோதாக்களை ஆதரிக்கும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டதால் திமுக அதை அறுவடை செய்தது.
ஒரு கட்டத்தில் அதிமுகவை அடிமைக்கட்சி என்கிற அளவுக்கு கொண்டுச் சென்றார்கள். 2021 தேர்தலில் அதிமுக தலைமையில் NDA kஊட்டணி அமைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. அதன் பின்னரும் அதிமுகவிற்கு குறிப்பாக NDA க்கு பெரும் தோல்வி எல்லாம் கிடைக்கவில்லை. திமுகவுக்கும் பெருவெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் அண்ணாமலை அதிமுகவுக்கு எதிராக விமர்சிக்க ஆரம்பித்தவுடன் மோதல் ஆரம்பித்தது.
இதையும் படிங்க: அதிமுக+பாஜக+நாதக கை கோர்க்கும் மெகா கூட்டணி..! திமுகவை ஒழித்தே ஆக வேண்டும்.. அமித் ஷா அஜெண்டா..!
2024 மக்களவை தேர்தலில் அதிமுக தனித்து விடப்பட்டது. திமுக அண்ணாமலையை உயர்த்தி பிடித்து அதிமுகவை காலி செய்தது. இதனால் NDA கூட்டணிக்கு கிடைக்கவேண்டிய 15 தொகுதிகள் வரை கூட்டணி இழந்தது. பின்னர் மோதல் பெரிதானது. எந்நாளும் பாஜகவுடன் கூட்டணி இல்லை குறிப்பாக 2026-ல் கூட்டணியே இல்லை என எடப்பாடி முடிவெடுத்தார். ஆனால் 2026 தேர்தலில் கூட்டணி முக்கியம் என்பது அவருக்கு புரிந்திருந்தது.
எப்படியாவது திமுகவின் தோழமைக்கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி செய்தார். ஆனால் திமுக தோழமைக் கட்சிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டது. தோழமைக் கட்சிகளும் திமுகவை விட்டு விலக மாட்டோம். என்ன ஆனாலும் சரி திமுகவுடன் இருப்போம் என்கிற நிலைப்பாட்டை எடுத்தது. இது அதிமுகவிற்கு பின்னடைவாக இருந்தது. மறுபுறம் புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய் திமுகவை வீழ்த்த அதிமுகவுடன் கைகோர்க்கும் என அதிமுகவில் பெரும்பாலானோர் எதிர்பார்த்து தவெகவை விமர்சிக்காமல் இருந்தனர்.
ஆனால் தவெகவில் உள்ள அதி புத்திசாலிகள் அதற்கு வழி காட்டும் ஸ்ட்ராடஜிஸ்டுகள் தவறான முடிவு எடுத்து, தனித்து நிற்போம் அதிமுக வேண்டாம் என்றெல்லாம் கூறிய நிலையில் இனி தவெகவுடன் கூட்டணிக்கான வாய்ப்பு இல்லை என்கிற முடிவுக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்தார். இந்த நேரத்தில் தான் அதிமுகவில் உள்ள அடுத்த கட்ட தலைவர்கள் அனைவரும் மீண்டும் வருகின்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கவேண்டும். அதிமுக தனித்து நின்றால் ஒன்றுமில்லாமல் போகும். மீண்டும் திமுக அணி ஆட்சியை பிடிக்கும். அதன் பின் அதிமுக சிதறுண்டு போகும் என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் தவெக அல்லது காங்கிரஸ் தலைமையிலான திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எப்படியாவது அதிமுக கூட்டணிக்குள் வந்து விடும் கூட்டணி அமைத்து விடலாம் என்று எடப்பாடி பெரிதும் முயற்சி எடுத்து வந்தார். ஆனால் தவெக தொடர்ந்து நடைமுறை எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டு தாங்கள்தான் பெரிய கட்சி தங்களுக்கு பாதி அளவு தொகுதியில் ஒதுக்க வேண்டும் என்றெல்லாம் பேசி வந்தனர். மறுபுறம் திமுகவும் தவெகவை மிகப்பெரிய கட்சி, விஜய் முதல்வர் பதவி கேட்கிறார், ஆட்சியில் பங்கு கேட்கிறார் என்றெல்லாம் பெரிய அளவில் ஒரு பிரச்சாரத்தை தவெக ஆதரவாளர்கள் போல் கிளப்பிவிட்டனர்.
இவை எல்லாம் தவெகவை அதிமுக பக்கம் செல்லாமல் தடுத்து வந்தது. இந்த நிலையில் இனியும் சும்மா இருந்தால் எதுவும் நடக்காது, நீங்கள் பாஜகவை கூட்டணிக்குள் இணைத்துக் கொண்டு நிற்க வேண்டும், இல்லாவிட்டால் தவெக அல்லது திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை கொண்டு வர வேண்டும். இது இரண்டும் நடக்கவில்லை என்றால் நாங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று அதிமுகவின் முக்கிய தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி நெருக்கத் தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் அது மோதலாக வெடிக்கும் அளவிற்கு சென்றது.
இந்த நிலையில் சுதாரித்துக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, இனியும் திமுகவின் தோழமைக் கட்சிகளையும், தவெகவையும் நம்பி பிரயோஜனமில்லை என்கிற முடிவுக்கு வந்தார். அடுத்த சான்ஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுத்து கூட்டணி தலைவர்களுக்கு தனது சம்மதத்தை தெரிவித்தார். இதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்று பார்த்தால் எடப்பாடி பழனிச்சாமியை பல வகைகளில் சம்மதிக்க வைப்பதற்கான பல வேலைகள் நடந்தன. அதில் முக்கிய பங்கு வகித்தவர் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன் என்று சொல்கிறார்கள்.
மிதுன் தனது தனிப்பட்ட முறையில் எடுத்த சர்வேயில் மீண்டும் NDA கூட்டணி அதிமுக தலைமையில் அமைந்தால், அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்கிற கருத்து பரவலாக வந்தது. இதை எடுத்து தனது தந்தையிடம் இந்த தகவலை சொன்ன மிதுன், ஒன்று NDA கூட்டணி அமைந்தால் திமுகவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்கலாம். ஒருவேளை மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் நீங்கள் தான் முதலமைச்சராக இருக்கப் போகிறீர்கள். இந்த இரண்டில் எது நடந்தாலும் அதிமுகவிற்கு அது சாதகமாக அமையும். இப்போது உள்ள நிலையில் கட்சியை காப்பாற்றுவது முக்கியம். அதற்காக நான் சொல்வதை செய்யுங்கள் என்று வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
மற்றொருபுறம் எடப்பாடி பழனிச்சாமி பெரிதும் மதிக்கும் திருப்பதி கோயிலை சேர்ந்த ஒரு மிகப்பெரிய மனிதரை வைத்து எடப்பாடி பழனிச்சாமி இடம் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அது அதிமுகவிற்கு சிறப்பான ஒரு முன்னேற்றத்தை தரும், ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்ல வைத்தார்கள். தான் எப்போதும் மதிக்கும் ஒருவரே இந்த விஷயத்தை கூறியதால் எடப்பாடி பழனிச்சாமி அதை ஏற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது. இனியும் நாம் தவெக வரும், திமுக கூட்டணி கட்சிகள் வரும் என்ற நம்பிக்கொண்டிருந்தால் அதிமுகவில் தனது தலைமைக்கு சிக்கல் வரும் என்பதையும் எடப்பாடி பழனிச்சாமி உணர்ந்தே இருந்தார்.
இதனால் தனது தோழமை தலைவர்களுடைய வார்த்தை ஏற்றுக்கொண்டு பாஜகவுடன் பேசுவதற்கு சம்மதித்தார். இந்த தகவல் தெரிந்தவுடன் தமிழக பாஜக தலைவர்கள் துள்ளி குதித்துள்ளனர். தமிழகத்தில் ஒரு பெரிய கூட்டணி அமையும், நாம் எதிர்பார்த்தது நடக்கும், பலரும் எம்எல்ஏக்கள் ஆவார்கள் என்று அவர்கள் சந்தோஷப்பட்டு உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி ஓகே சொன்னாலும் இந்த தகவலை அண்ணாமலைக்கு தெரியாமல் பாஜக மேலிடம் வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமித்ஷாவிடம் ஒப்புதல் வாங்கி முதற்கட்ட பேச்சு வார்த்தைக்கு சம்மதம் தெரிவிப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமியை டெல்லி அழைத்துச் சென்றனர் தலைவர்கள்.
எடப்பாடி பழனிச்சாமி உடன் பாஜக கூட்டணியே வேண்டாம் என்று கூறிக் கொண்டிருந்த கே.பி. முனுசாமி, சி.வி சண்முகம் உள்ளிட்ட தலைவர்களும் எஸ்.பி.வேலுமணி, தம்பிதுரை உள்ளிட்டவர்களும் உடனிருந்தனர். டெல்லியில் அமித்ஷாவை சந்தித்ததன் மூலம் மீண்டும் NDA அமைவது உறுதியாகி உள்ளது. இந்த நிலைமையில் தமிழகத்தில் அரசியல் களம் வீட்டில் சூடு பிடித்துள்ளது. இந்த கூட்டணி அமைவதற்கு பெரிதும் பாடுபட்டது, தவெகவில் இணையவிருந்த பின்னர் ஒதுங்கிய ஒரு மூத்த அரசியல்வாதியும், தமாக தலைவர் ஜி.கே.வாசனும் என்கின்றனர்.
NDA தலைமையில் வரப் போகும் காட்சிகள் குறித்த ஒரு சுவாரசிய தகவலும் வெளியாகி உள்ளது. அதில் முக்கியமாக தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு பேசும் மக்களை கவர்வதற்காக பவன் கல்யாண் கட்சியும் NDA கூட்டணியில் தமிழகத்தில் இணைகிறது. அதேபோன்று சீமானிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவரையும் NDA கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி எடுக்கப்படும் என்றும் ஒரு தகவல் தெரிவிக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது. ஒருவேளை சீமான் NDA கூட்டணிக்குள் வராவிட்டால் சீமானும், விஜய்யும் கைகோர்க்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆகவே வருங்காலங்களில் அரசியல் களம் சூடு பிடிக்கும். அது ஆளுகின்ற அரசுக்கு நல்ல செய்தியாக இருக்காது என்பதே தற்போதைய நிலை.
இதையும் படிங்க: அதிமுகவுடன் பாஜக கூட்டணியா? அமித்ஷா டிவீட்டால் பரபரப்பு!!