“நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை” - எதிர்பாராத வரவேற்பால் திக்குமுக்காடிப் போன அஜித்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு நடிகர் அஜித் குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அஜித் குமார் ரேஸிங் என்ற கார் பந்தய அணியை உருவாக்கியுள்ள அஜித் குமார், துபாயில் நடைபெறும் 24ஹெச் சீரிஸில் பங்கேற்றார். இந்த போட்டியில் அவரது அணி 3வது பிடித்ததையடுத்து, அஜித்திற்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
குறிப்பாக இந்த போட்டியை நேரில் காண ஏராளமான தல ரசிகர்கள் துபாய் மைதானத்தில் குவிந்தனர். விண்ணை பிளந்த தல அஜித் முழக்கத்தால் நெகிழ்ந்து போன அஜித், போட்டியை பார்க்க எனது ரசிகர்கள் இவ்வளவு பேர் வருவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், Unconditionally I Love them அவர்களை நான் அளவுகடந்து நேசிக்கிறேன் என மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு நடிகர் அஜித் குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்பான அனைவருக்கும் வணக்கம்! துபாய் கார் பந்தய ரேஸின் போதும் நிகழ்வுக்கு பின்னரும் இப்போதும் எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லாம் வல்ல இறைவன், எனது குடும்பத்தினர், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை.
இதையும் படிங்க: 'மதகஜராஜா'வுக்கு வரவேற்பு.. இது ஓர் அதிசயம்.. திக்குமுக்காடும் நடிகர் விஷால்!
இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார்ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது. இந்த பயணம் என்னைப் பற்றியது மட்டுமல்ல! உங்களைப் பற்றியதும்தான். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்கள்! நன்றி!” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சந்தானத்தை மீண்டும் காமெடியனா பார்க்கணும்.. சுந்தர்.சிக்கு வந்த ஆசை!