×
 

விடாமுயற்சியோடு உயிர் காக்கும் சேவை... ஒன்றிணைந்த தல - தளபதி ஃபேன்ஸ்!

மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதற்காக விஜய் - அஜித் ரசிகர்கள் ஒன்றிணைந்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 

மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதற்காக விஜய் - அஜித் ரசிகர்கள் ஒன்றிணைந்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 

சமீப காலமாக அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தமிழகத்தில் உயர்ந்து வருகிறது. அந்த நோயைக் குணப்படுத்த செலுத்த வேண்டிய ஒரு ஊசியின் விலை கோடிகளைத் தாண்டுவதால் ஏழை பெற்றோர்கள் சொல்ல முடியாத சோகத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலோடு கன்னியாகுமரியைச் சேர்ந்த விஜய் ரசிகரும், தமிழக வெற்றிக் கழக பிரமுகருமான கிளேட்வின் சென்னை வரை நடைபயணம் மேற்கொண்டு, நிதி திரட்டி வருகிறார். 

விஜய் ரசிகரின் இந்த நல்லெண்ண சேவையை சோசியல் மீடியா மூலமாக அறிந்து கொண்ட அஜித் ரசிகர்கள், தாங்களும் அந்த குழந்தைகளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என முடிவெடுத்துள்ளனர். செங்கல்பட்டைச் சேர்ந்த 6 மாத குழந்தை வருணிகா, கோவையைச் சேர்ந்த 3 வயது குழந்தை லிதிஷ்கா, கடலூரைச் சேர்ந்த 3 வயது குழந்தை கிருத்திக் ராஜ், பொள்ளாச்சியைச் சேர்ந்த 4 வயது உதய தீரன் ஆகிய 4 குழந்தைகளின் மருத்துவ செலவிற்கான 72 கோடி ரூபாயை தாங்கள் திரட்டித் தருவதாக அஜித் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். 

இதையும் படிங்க: விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்து - மன்னிப்பு கேட்ட அஜித்; ஆரவ் பகிர்ந்த தகவல்!

இதற்காக அஜித்தின் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகியுள்ள இன்று முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டத்திற்காக கட்அவுட், பேனர் வைக்கும் செலவுகளை தவிர்த்து, அதற்கான தொகையை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவ செலவிற்கு வழங்கியுள்ளனர். 

இதுகுறித்து தெரிவித்துள்ள அஜித் ரசிகர்கள், “நீங்க எப்ப வாழப்போறீங்க” என அஜித் கூறிய வார்த்தையை ஏற்று நாங்கள் வாழ்வதோடு, பிறருக்கும் பயனுள்ள வழியில் வாழ திட்டமிட்டுள்ளோம். அதற்காக விஜய் ரசிகர்கள் கிளேட்வின் உடன் இணைந்து அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவ செலவிற்காக நிதி திரட்ட முடிவெடுத்துள்ளோம்” என்றனர். 

இத்தோடு மட்டுமின்றி அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விவரங்களை விஜய் ரசிகரிடம் இருந்து பெற்று, சம்பந்தப்பட்ட குழந்தையின் புகைப்படம் மற்றும் ஜிபே எண்ணை விடாமுயற்சி டிக்கெட்டிலேயே பிரிண்ட் செய்துள்ளனர். இதனை எம்.எஸ்.எம். என்ற தியேட்டர் நிர்வாகமும் மனித நேயத்தோடு அனுமதித்து, வழக்கமாக வழங்கும் டிக்கெட்டிற்கு பதிலாக அஜித் ரசிகர்கள் கொடுத்த டிக்கெட்டை விற்பனை செய்ய முன்வந்துள்ளது. மேலும் தியேட்டர்கள் முழுவதும் விடாமுயற்சி பேனர்களுக்கு பதிலாக அஜித் புகைப்படத்தையும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் போட்டோ, கியூஆர் கோட் மற்றும் ஜிபே அடங்கிய பேனர்களை அஜித் ரசிகர்கள் வைத்துள்ளார். 

எம்.எஸ்.எம்.  தியேட்டர் முழுவதும் உதவி கோரும் பேனர்களை வைக்கவும், 30 விநாடிகளுக்கு குழந்தைகளின் விவரம் அடங்கிய குறும்படம் ஒன்றினை கட்டணம் இல்லாமல் ஒளிபரப்பவும் தியேட்டர் உரிமையாளர் தவமணி ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிஞ்சு குழந்தைகளின் உயிரைக் காப்பதற்காக விஜ - அஜித் ரசிகர்கள் மேற்கொண்டு வரும் இந்த விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி பெற வேண்டும் என சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

இதையும் படிங்க: துபாய் ரேஸ் கார் விபத்து எதிரொலி -  அஜித் தரப்பு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share