டெல்லியில் ஆட்சியை பிடித்த பாஜகவின் அடுத்த அதிரடி: மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்ற புதிய வியூகம்
டெல்லியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அடுத்த அதிரடியாக, விரைவில் நடைபெற இருக்கும் மாநகராட்சி மேயர் பதவியையும் கைப்பற்ற புதிய வியூகம் அமைத்து பாஜக செயல்பட்டு வருகிறது.
சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியின் 11 ஆண்டுகால ஆட்சியை பாஜக முடிவுக்கு கொண்டு வந்தது. ஆம் ஆத்மியின் பலம் 62 தொகுதிகளில் இருந்து 22 ஆக குறைந்துவிட்டது.
இந்த வெற்றியை அடுத்து மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவியையும் கைப்பற்றுவதற்கு பாஜக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் மாநகராட்சி தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் 250 உறுப்பினர்களைக் கொண்ட மன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலம் பெற்று இருந்தது. பாரதிய ஜனதா கட்சி 104 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் 9 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. மற்ற மூன்று கவுன்சிலர்கள் சுயேச்சைகள்.
ஆம் ஆத்மிக்கு பெரும்பான்மை பலம் இருந்தாலும் இரு கட்சிகளும் உறுப்பினர்களை இழுப்பதில் ஆர்வம் காட்டி வந்தனர். வழக்கமான கவுன்சிலர்களை தவிர 14 எம்எல்ஏக்கள் (டெல்லி சட்டமன்றத்தில் அவர்களின் பிரதிநிதித்துவ விகிதத்தில் கட்சிகளிலிருந்து பரிந்துரைக்கப் பட்டவர்கள்) நாடாளுமன்ற மக்களவை எம்பிக்கள்7 பேர் (அனைவரும் பாஜக) மற்றும் மூன்று மாநிலங்களவை எம்பிக்கள் (தற்போது அவர்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சி சேர்ந்தவர்கள்) மேயர் வாக்காளர் தொகுதியில் இடம் பெற உள்ளனர்.
இதையும் படிங்க: ஆணவத்தால் அழிந்த ஆம் ஆத்மி.. வார்த்தைகளை அள்ளி வீசிய மாணிக்கம் தாகூர்..!
முந்தைய மேயர் தேர்தல்களின் போது பாஜகவுக்கு ஒரே ஒரு நியமன எம்எல்ஏ மட்டுமே இருந்தார். டெல்லி சட்டமன்றத்தில் அவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்திருப்பதால் வரவிருக்கும் மேயர் தேர்தல்களின் போது மேயரை தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களின் ஒரு பகுதியாக இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
டெல்லியின் துணைநிலை ஆளுநர் சக்சேனா தலைமை அதிகாரியை நியமிக்காததால் கடந்த 2023 மேயர் தேர்தல் எட்டு மாதங்கள் தாமதமானது. இறுதியாக கடந்த ஆண்டு நவம்பரில் தேர்தல் நடைபெற்ற போது ஆம் ஆத்மி கட்சியின் மகேஷ் குமார் கீச்சு வெறும் 3 வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற முடிந்தது. ஆம் ஆத்மி கட்சியின் எட்டு வாக்குகள் பாஜகவுக்கு சென்றதால் இந்த இழுபறி நிலைமை ஏற்பட்டது.
எம்எல்ஏக்களை போல் கட்சி தாவல் தடைச் சட்டம் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு பொருந்தாது. இதனால் அவர்கள் தொடர்ந்து கட்சி மாறி வருகிறார்கள். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே மாநகராட்சி கவுன்சிலர்களின் எண்ணிக்கை பாஜகவில் 120 ஆக உயர்ந்து விட்டது. ஆம் ஆத்மி கட்சியின் எண்ணிக்கை 121 ஆக குறைந்துவிட்டது.
இந்த நிலையில் இந்த தேர்தல் வெற்றி மூலம் மாநகராட்சி நியமன உறுப்பினர்கள் பாஜகவுக்கு அதிகரிக்கும் என்பதால் இந்த முறை மேயர் பதவியை கைப்பற்றுவதற்கு பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது.
இதையும் படிங்க: தேசத்திற்கான பின்னடைவு..! இந்தியா கூட்டணியே விழித்துக் கொள்..! அலறும் திருமா