தொகுதி மறுசீரமைப்பை மேலும் 25 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க வேண்டும்.. கூட்டு நடவடிக்கைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக் குழுவில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ள மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு முயற்சிக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று பேசினர். நாட்டிலேயே முதலாவது நபராக இந்த பிரச்னையை அடையாளம் கண்டு இதற்கு தீர்வு காண முயலும் மு.க.ஸ்டாலினுக்கு கூட்டு நடவடிக்கைக் குழு பாராட்டு தெரிவித்தது. மேலும் அவர்கள் தந்த கருத்துக்களின் அடிப்படையில் கூட்டத்தின் முடிவில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்களின் விவரம் வருமாறு...
ஜனநாயகத்தை மேம்படுத்த, வலுப்படுத்த மத்திய அரசு மேற்கொள்ளும் எந்தவொரு எல்லை மறுவரையறையானாலும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். மாநிலங்கள் மற்றும் இன்னபிற பங்குதாரர்களின் கருத்துகளை கேட்டறிந்து அவற்றின் பங்களிப்புடன் அது செயல்படுத்தப்பட வேண்டும்.
இதையும் படிங்க: எகிறி அடிக்கும் ஸ்டாலின்... தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழுவின் அடுத்த கூட்டம் எங்கு தெரியுமா?
அரசியல் சட்டத்திருத்தம் 42, 84 மற்றும் 87 ஆகியவற்றின் நோக்கமே, நாட்டின் மக்கள்தொகையை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்ட மாநிலங்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதே ஆகும். அதனால் தான் 1971-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின்படியே அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதிகள் நீடிக்கும் என்றும் அதுவரை மறுவரையறை செய்ய வேண்டாம் என்று அந்த சட்டத்திருத்தங்கள் வலியுறுத்தின.
மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் இவற்றால் தண்டிக்கப்படக் கூடாது. இதற்காக மத்திய அரசு புதிய சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
மேற்காணும் விதிகளுக்கு மாறாக மத்திய அரசு ஏதேனும் முயற்சிகளை மேற்கொண்டால், பாதிக்கப்படும் மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து கூடி, யுக்திகளை வகுத்து செயலாற்ற வேண்டும் என கூட்டு நடவடிக்கைக் குழு கேட்டுக் கொள்கிறது.
கூட்டு நடவடிக்கைக் குழுவில் இடம்பெற்று மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுதொடர்பாக கடிதம் ஒன்றை எழுதி, நடப்புக் கூட்டத்தொடரிலேயே பிரதமரிடம் அளிக்க வேண்டும்.
அதேபோன்று கூட்டு நடவடிக்கைக் குழுவில் இடம்பெற்று மாநிலக் கட்சிகள், தங்களின் சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றி அதனை மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
இதுவரை நடந்த தொகுதி மறுவரையறைகள் எவ்வாறு நடைபெற்றன, நடத்தப்பட உள்ள தொகுதி மறுவரையறை எதனை அடிப்படையாக கொண்டுள்ளது போன்ற வரலாற்றையும், தகவல்களையும் கூட்டு நடவடிக்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள மாநில மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். இதன்மூலம் பொதுமக்களின் ஆதரவினை திரட்ட வேண்டும்.
இதையும் படிங்க: கூட்டுக்குழுவில் தரமான சம்பவம்… தாய்மொழிக்கு முக்கியத்துவம்: தலைவர்களை அசத்திய மு.க.ஸ்டாலின்!