‘டீலிமிட்டேஷன்’ என்றால் என்ன..? திமுக ஏன் பதறுகிறது..? காரணம் என்ன.? கேள்விகளும் பதில்களும்..!
தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வதற்கு திமுக ஏன் எதிர்க்கிறது என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு (டீலிமிட்டேஷன்) குறித்து மத்திய அரசு பேசும்போது கடும் எதிர்ப்புத் தெரிவிக்கும் திமுக கட்சி, எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல் குறித்து விவாதிக்க, புதன்கிழமையன்று (மார்ச் 05) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியுள்ளது.
தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வதற்கு ஏன் திமுக எதிர்க்கிறது, ஏன் பதற்றம் அடைகிறது, தொகுதி மறுசீரமைப்பு என்றால் என்ன என்பது குறித்து இந்த கட்டுரை அலசுகிறது.
டீலிமிட்டேஷன் என்றால் என்ன?
டீலிமிட்டேஷன் என்பது ஒவ்வொரு மாநிலத்தின் எல்லைக்கு உட்பட்டு மக்களவை, சட்டப்பேரவை தொகுதிகளை எண்ணிக்கை மறுசீரமைப்பு செய்வதாகும். இந்த செயல்முறையை டீலிமிட்டேஷன் கமிஷன் செய்து வந்தது. இந்த ஆணையத்தை நாடாளுமன்றம் அமைக்கும். கடந்த 1951, 1961, மற்றும் 1971ம் ஆண்டுகளில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் டீலிமிட்டேஷன் நடந்தது. 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டு, 543 மக்களவை தொகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டது. அப்போது நாட்டின் மக்கள் தொகை 54.80 கோடி. அதன்பின், பலதசமங்களாக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மாற்றப்படவில்லை.
இதையும் படிங்க: பதவி பறிபோகும் அபாயம்... தடுப்புச் சுவர் எழுப்பி அறிவாலயத்திற்கே அதிர்ச்சி கொடுக்கும் திமுக மா.செ..!
பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நிலை வந்தபோது, மக்கட்தொகையை மட்டும் வைத்து தொகுதிகளை கூட்டிக் குறைப்பது மக்கட்தொகைக் குறைப்பில் கவனம் செலுத்திய மாநிலங்களை வஞ்சிப்பதாகும் என்ற கருத்து வலுபெற்றதால் ஒதுக்கிவைக்கப்பட்டது. பின் வாஜ்பாய் காலத்திலும் இதே குழப்பத்தால் 2026 வரை ஒதுக்கிவைக்கப்பட்டது. அதன் பின் கொரோனா தொற்றால் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்காமல் போனது, இப்போது தொகுதி மறுசீரமைப்பு எனும்போது மீண்டும் பிரச்சினை கிளம்பியுள்ளது.
தொகுதி மறுசீரமைப்பில் சிக்கல்கள் என்ன?
கடந்த 50 ஆண்டுகளாக நாட்டில் மக்கள் தொகை பெருக்கம் சமநிலையற்ற வகையில் அதிகரித்துள்ளது. அதாவது தென் மாநிலங்களில் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் மக்கள்தொகை கடுமையாக அதிகரித்தது. ஆனால், கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரப்பிரதேசத்தில் மக்கள்தொகைக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசு அறிவுரைப்படி தென் மாநிலங்கள் மக்கள்தொகைக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுத்ததால் மக்கள் தொகை வடமாநிலங்கள் அளவுக்கு உயரவில்லை.
தற்போது மக்களவைத் தொகுதி 543 ஆக இருக்கும்போது மறுசீரமைப்பில் மக்கள் தொகை அடிப்படையில் நடந்தால் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கிய தென் மாநிலங்களான தமிழகம்(-8), கேரளா(-8), ஆந்திர, தெலங்காவில்(-8), கர்நாடகா(-2) ஆகிய மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை தற்போது இருக்கும் அளவைவிட குறைக்கப்படும். அதாவது தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள் இருந்தால் அது 31 ஆகக் குறைக்கப்படும், கேரளாவில் 12 ஆகவும், ஆந்திரா,தெலங்கானாவில் 34 ஆகவும், கர்நாடகத்தில் 26ஆகவும் குறைக்கப்படும்.
ஆனால் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை முறையாகச் செய்யாத வடமாநிலங்களான உத்தரப்பிரேதசத்தில் 11 தொகுதிகள் அதிகரிக்கப்பட்டு 91ஆகவும், பீகாரில் 10 தொகுதிகள் உயர்த்தப்பட்டு 50ஆகவும் அதிகரிக்கப்படும். ராஜஸ்தானில் 6 தொகுதிகள் அதிகரிக்கப்பட்டு 31 ஆகவும், மத்தியப்பிரதேசத்தில் 33 ஆகவும் உயர்த்தப்படும்.
ஆனால், விகிதாச்சாரத்தின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால் 848 தொகுதிகளாக உயர்த்தப்படும். அப்போது தமிழகத்துக்கு 39 தொகுதிகளில் இருந்து 49 தொகுதிகளாக உயர்த்தப்படும். கேரளாவில் உயர்த்தப்படாது, கர்நாடகாவில் 41 ஆகவும், தெலங்கானா, ஆந்திராவில் 54 ஆகவும் அதிகரிக்கப்படும். ஆனால், உ.பியில் 143 தொகுதிகளாகவும், பீகாரில் 79, ராஜஸ்தானில் 50 தொகுதிகளாகவும், மத்தியப் பிரதேசத்தில் 52 தொகுதிகளாகவும் அதிகரி்க்கப்படும். விகிகாசரத்தின் அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால் இந்த 4 மாநிலங்களில் மட்டும் 150 தொகுதிகள் உயர்த்தப்படும். அதேசமயம், தென் மாநிலங்களில் கேரள, கர்நாடக, தமிழகம், ஆந்திரா,தெலங்காவில் சேர்த்து 35 தொகுதிகள்தான் உயர்த்தப்படும்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் பேசுகையில் “ தொகுதி மறுசீரமைப்பில் எந்த மாநிலத்திலும் தொகுதி எண்ணிக்கை குறைக்கப்படாது, ஆனால், விகிதாசாரத்தின் அடிப்படையில் தென் மாநிலங்கள் உள்பட அனைத்து மாநிலங்களிலும் உயர்த்தப்படும். விகாதாச்சாரம் என்பது ஏற்கெனவே இருக்கும் முறையிலா அல்லது மக்கள் தொகை அடிப்படையிலான என்பது தெரியவில்லை.
மேலும், பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றுக்கு விகிதாசாரத்தின் அடிப்படையில் தொகுதிகள் குறையும், பலன் அடையாது. இது அரசியலமைப்புச்சட்டத்தின் அடிப்படை கூறான கூட்டாட்சித் தத்துவத்துக்கே விரோதமாகும். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியபோதிலும், விகிதாசார பிரதிநிதித்துவத்தையும், அதன் மூலம் அரசியல் முக்கியத்துவத்தையும் இழக்கும் தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் இது ஏமாற்றத்தை அளிக்கும். மக்களவைத் தொகுதிகளில் 24% வகிக்கும் தென் மாநிலங்கள் பங்கு 5% மாகக் குறையும்.
தீர்வு என்னவாக இருக்கும்?
ஜனநாயகம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆள்வதாகும். இதன் பொருள், 'ஒரு குடிமகன் - ஒரு வாக்கு - ஒரு மதிப்பு' என்ற பரந்த கொள்கையுடன் அரசாங்கம் பெரும்பான்மையினரால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. 1976 ஆம் ஆண்டு முதல் மக்கள்தொகை கட்டுப்பாட்டின் நலனுக்காக தொகுதி மறுசீரமைப்பு பணி ஒத்திவைக்கப்பட்டதிலிருந்து, இந்தக் கொள்கை நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபை 1913லிருந்து எண்ணிக்கை 435 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது, மக்கள் தொகை அதிகரித்து 9.4 கோடியிலிருந்து 2024ல் 34 கோடியாக உயர்ந்தும் உயர்த்தப்படவில்லை. ஒரு எம்.பியின் முக்கிய பணி என்பது, மத்திய பட்டியலில் இருக்கும் விஷயங்களில் சட்டம் இயற்றுவதும் மத்திய அரசை பொறுப்புக்கூற வைப்பதாகும். ஆனால் மத்திய அரசின் பெரும்பாலான திட்டங்கள் மாநில அரசுகளால் செயல்படுத்தப்படுகின்றன. கடந்த 50 ஆண்டுகளாக 543 மக்களவை எம்.பி.க்களைக் கொண்டு நடத்தப்படுகிறது,ஆனால், மக்கள் தொகை மட்டும் 55 கோடியிலிருந்து 145 கோடியாக அதிகரித்துவிட்டது. இப்போதுள்ள நிலையில் சென்றால் இந்தியாவின் மக்கள் தொகை 15% உயர்ந்து 165 முதல் 170 கோடியாக அதிகரிக்கும்.
இந்தக் காரணிகளைக் கணக்கில் கொண்டு, 543 எம்பிக்களோடு நிறுத்தப்படலாம். இது பல்வேறு மாநிலங்களிலிருந்து பிரதிநிதித்துவத்தில் தற்போதைய நிலையை உறுதிசெய்து கூட்டாட்சி கொள்கையை நிலைநிறுத்தும்.
தென் மாநிலங்கள் முதல் மாநில மற்றும் தேசிய கட்சிகளின் எம்.பி.க்கள் மற்றும் தலைவர்கள், வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தங்கள் பிரதிநிதித்துவம் அரசியல் நலனைப் பாதுகாப்பதற்காக நாடாளுமன்றத்திடம் உச்சவரம்பைக் கோருவது தங்கள் பொறுப்பாகக் கருத வேண்டும். ஜனநாயக பிரதிநிதித்துவத் தேவையை நிவர்த்தி செய்வதற்காக, ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள்தொகைக்கு ஏற்ப சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம்.
திமுக ஏன் பதறுகிறது?
மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சிறப்பாக தமிழகம், கேரளா, கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய தென் மாநிலங்கள் செய்துள்ளன. ஆனால், தற்போது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்புச் செய்தால், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டைக் கடைபிடித்த தென் மாநிலங்களுக்கு தொகுதிகள் குறையும், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தாத இந்தி பேசும் மாநிலங்களுக்கு தொகுதி எண்ணிக்கை அதிகரிக்கும்.
மக்களவைத் எம்பிக்களில் தென் மாநிலங்களில் இருந்து மட்டும் 129 எம்.பிக்கள் செல்கிறார்கள், அதாவது 24 சதவீதத்தை தென் மாநிலங்கள் கையில் வைத்துள்ளன. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால் தமிழகத்துக்கான தொகுதிகள் உள்பட தென் மாநிலங்களுக்கான தொகுதிகள் சிறிய அளவில்தான் உயரும். நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் எம்.பி.க்கள் சதவீதம் 24 லிரிருந்து 19ஆகக் குறையும்.
வடமாநிலங்களான பீகார், உ.பி. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசத்தில் தொகுதிகள் எண்ணிக்கை கடுமையாக அதிகரி்க்கும். நாடாளுமன்றத்தில் பிரதிநிதத்துவம் என்பது தென் மாநிலங்களுக்குக் குறைந்து, வடமாநிலங்கள் குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களுக்கு 60 சதவீதமாக அதிகரிக்கும். தென் மாநிலங்கள் அரசியல் செல்வாக்கை, ஆதிக்கத்தை நாடாளுமன்றத்தில் இழக்கும், அதேசமயம், இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு உயரும், கொள்கை உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிப்பார்கள்.
மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரிவருவாயில் தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா பெரும்பங்களிப்பு செய்கிறார்கள். ஆனால், குறைவாக பங்களிப்பு செய்துவிட்டு பீகார், உ.பி. 250 முதல் 230 சதவீதம் வரை பெறுகிறார்கள்.
இதையும் படிங்க: அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தவர்கள் தமிழகத்தின் பகைவர்கள்... பாஜக, நாதக கட்சிகளை போட்டுத் தாக்கிய திமுக!