×
 

திமுக வேட்பாளரை பழி தீர்க்க திட்டம்.... ஈரோடு அஸ்திரத்தை கையில் எடுக்கும் பிரேமலதா விஜயகாந்த்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்றால் தேமுதிக போட்டியிடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்றால் தேமுதிக போட்டியிடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களமான ஆரம்பத்திலேயே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக யாரை வேட்பாளராக களமிறக்கவுள்ளது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. மற்றொருபுறம் ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஒருவேளை ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்தால் தங்களது வேட்பாளரை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தேமுதிகவும் ஒரு அதிரடி முடிவுக்கு வந்துள்ளது. தற்போது அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியா? புறக்கணிப்பா?  - என்ன செய்யப்போகிறார் இபிஎஸ்! 

விஜயகாந்த் ரசிகர் டு திமுக நிர்வாகி: 

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற வேட்பாளராக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வி.சி.சந்திரகுமார் விஜயகாந்தின் தீவிர ரசிகர். அவரது ரசிகர் மன்றங்களை கவனித்து வந்த சந்திரகுமார், விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததும் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். தேமுதிகவில் அரசியல் பயணத்தைத் தொடங்கி, விஜயகாந்தின் தளபதியாக செயல்பட்டு வந்தார். 

2011-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் முத்துச்சாமியைவிட, பத்தாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அந்த தேர்தலில் தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது, அப்போது தேமுதிக கொறாடாவாக செயல்பட்டவர் வி.சி.சந்திரக்குமார். 

2016ஆம் ஆண்டு அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி அமைத்தார். சந்திரகுமார் மற்றும் பார்த்தீபன் போன்ற சிலர் விலகி 'மக்கள் தேமுதிக' என்ற புதிய அமைப்பை தொடங்கினர். அவர்கள் திமுக கூட்டணியை ஆதரித்தனர். சந்திரகுமார் உள்ளிட்ட மூவருக்கு 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட சந்திரகுமார் அதிமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். 

தேமுதிக எடுத்த திடீர் முடிவு: 

2011ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வி.சி. சந்திரகுமார், ஈரோடு கிழக்குத் தொகுதியில் அபார வெற்றி பெற காரணமாக இருந்ததே அவருக்கு தேமுதிகவில் இருந்த செல்வாக்கு தான் எனக்கூறப்படுகிறது. விஜய்காந்தின் தளபதி என்ற காரணத்திற்காகவே அவருக்கு வாக்குகள் குவிந்ததாக தேமுதிக கருதுகிறது. இதற்கு காரணம் தேமுதிகவின் செல்வாக்கு மிக்க தொகுதிகளில் ஒன்றாக ஈரோடு கிழக்கு தொகுதியும் இருப்பது தான். இதனால் தனது மகன் விஜய பிரபாகரனை அத்தொகுதியில் களமிறக்க பிரேமலதா விஜயகாந்த் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதிமுக ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கவுள்ளது என்ற தகவலைக் கேள்விப்பட்டதுமே தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அதிமுக கூட்டணி ஆதரவுடன் தேமுதிக வேட்பாளரை அங்கு களமிறக்கலாம் என பெரும்பாலான நிர்வாகிகள் ஆலோசனை கூறியதாக தெரிகிறது. கேப்டன் விஜயகாந்திற்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிக அளவிலான செல்வாக்கு இருப்பதை சுட்டிக்காட்டிய நிர்வாகிகள், அதிமுக புறக்கணித்தால் அது தேமுதிகவிற்கான நல்வாய்ப்பு என எடுத்துக்கூறியுள்ளனர். மேலும் அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு கிடக்கும் தேமுதிக தொண்டர்களுக்கு இந்த செய்தி உற்சாகம் அளிக்கும் என்றும் கணக்குபோடப்பட்டுள்ளது. இதனால் அதிமுக போட்டியிடவில்லை எண்றால் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது என்றும், வேட்பாளராக தனது மகன் விஜய பிரபாகரனையே நிற்கவைத்து என்றும் பிரேமலதா விஜயகாந்த் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: ‘திராவிடம் என்றால் வயிறு எரிகிறது... அதிமுகவை பார்த்தால் கோபம் வரவில்லை... சிரிப்புத்தான் வருகிறது...’ கோப-தாபத்துடன் முழங்கிய மு.க.ஸ்டாலின்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share