×
 

டாஸ்மாக் தலைமை அலுவலகம்- திமுக எம்.பி நிறுவனத்தில் ED ரெய்டு..! செந்தில் பாலாஜிக்கு செக்..?

திமுக எம்.பி. ஜெகத் ரட்சகனுக்கு சொந்தமான சென்னை பாண்டி பஜாரில் உள்ள நிறுவனத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், சென்னை எழும்பூர், தாளமுத்து நடராஜர் மாளிகையில் அமைந்துள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வரும் மதுவிலக்குத்துறைக்கு உட்பட்ட டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ரெய்டு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


 
இன்று காலை முதல் கேரளாவில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் கரூரில் மூன்று இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கரூர் ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் சுப்பிரமணி என்பவரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வருகிறது. அதேபோல் காந்திபுரத்தில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த் என்பவர் வீட்டிலும், கரூர் காயத்ரி நகரில் உள்ள சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் என்பவர் வீட்டிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது.

இவர்கள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் என்றும் கூறப்படுகிறது. துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் நான்கு குழுக்களாக பிரிந்து அமலாக்கத்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் திமுக எம்.பி. ஜெகத் ரட்சகனுக்கு சொந்தமான சென்னை பாண்டி பஜாரில் உள்ள நிறுவனத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதையும் படிங்க: குடிமகன்களுக்கு குஷி..! ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வருகிறது காலி பாட்டில்களை திரும்ப பெரும் திட்டம்

 

சென்னை எழும்பூர், தாளமுத்து நடராஜர் மாளிகையில் அமைந்துள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது தொடர்பாக பேசிய அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர், "தமிழ்நாட்டில் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. இந்த முறைகேட்டில் துறையின் அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியின் நண்பர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில்தான் கரூரில் மூன்று இடங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.

இப்போது மேற்கொள்ளப்படும் சோதனைகளில் கிடைக்கும் ஆதாரங்கள் அடிப்படையில் புதிய வழக்குகள் தொடரப்படும் என்று தெரிகிறது.முன்னதாக செந்தில் பாலாஜி கடந்த 2011- 2015 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த போது, அந்தத் துறையில் வேலை அளிப்பதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share