×
 

எம்புரானுக்கு எதிராக மல்லுக்கட்டும் தமிழக விவசாயிகள்.. முல்லைப்பெரியாறு அணை குறித்து இஷ்டத்துக்கு பேசுவதா..?

எம்புரான் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படாதது ஏன் என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் எதிர்ப்புக் காரணமாக எம்புரான் படத்தில் 17 காட்சிகளுக்கு கத்திரி போடப்பட்டுள்ளது. ஆனால், தமிழக விவசாயிகளின் கோரிக்கைக்காக சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படாதது ஏன் என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து ப்ருத்விராஜ் இயக்கத்தில் வெளிவந்த எம்புரான் திரைப்படம் ரிலீசான நாள்முதல் ஒரே சமயத்தில் வசூலையும், சர்ச்சைகளையும் வாரிக் குவித்து வருகிறது. குஜராத் கலவரத்தில் தொடர்பு உடைய நபரின் பெயரை வில்லன் கதாபாத்திரத்திற்கு வைத்ததும், அதுதொடர்பான காட்சிகளை படத்தில் பயன்படுத்தியதற்கும் இந்துத்துவ அமைப்புகள் சார்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என பல்வேறு வலதுசாரி அமைப்புகள் நெருக்கடி கொடுத்தன. வலதுசாரி அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக எம்புரான் படத்தில் இருந்து 17 காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க: என் மகன் மட்டும் பலிகடாவா..? எம்புரான் விவகாரத்தில் பிருத்விராஜ் தாயார் ஆதங்கம்..!

ஒருகட்டத்தில் படத்தில் இடம்பெற்ற ஒருசில காட்சிகளுக்காக, தான் மன்னிப்புக் கோருவதாக கதாநாயகனான மோகன்லால் வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும் சர்ச்சைக்குரிய ஒருசில காட்சிகள் படத்தில் இடம்பெற்றது தனக்குத் தெரியாது என்றும் கூறியிருந்தார். இதற்கு இயக்குநர் ப்ருத்விராஜின் தாயார் மல்லிகா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விஷயத்தில் தன்னுடைய மகனை மட்டும் பலிகடா ஆக்குவதா என அவர் கொந்தளித்தார். படத்தின் நாயகனான மோகன்லாலுக்கு தெரிந்தே எல்லா காட்சிகளும் எடுக்கப்பட்ட நிலையில், இப்போது அவர் கைகழுவுவது சரியான செயல் அல்ல என்று சாடினார். மேலும் நூற்றுக்கணக்கானோர் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் தன்னுடைய மகனை மட்டும் பலிகடா ஆக்குவதா என அவர் வேதனை தெரிவித்து இருந்தார். 

இதனிடையே தமிழக விவசாயிகள் சங்கமும் எம்புரான் படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளது. வலதுசாரிகள் எதிர்ப்புக்கு 17 இடத்தில் கத்திரி போடத்தெரிந்த படக்குழுவினருக்கு, தமிழக விவசாயிகளின் கோரிக்கைக்காக ஒரு இடத்தில் கூட கத்திரி போட முடியவில்லையா? என்பதே அவர்களின் ஆதங்கம்.

அதாவது, முல்லைப் பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய வசனம் படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த அணை உடையும் அபாயம் என்றும், அதனால் கேரளா பாதிக்கப்படுவது போலவும் வசனங்கள் இருந்தன. அறிவியல்பூர்வமாக அந்த அணை சோதனைக்கு உட்படுத்தப்பட்டும், தொடர்பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் போதிலும் உண்மைக்கு மாறான தகவலை எம்புரான் படம் பதிவு செய்துள்ளது என்பது தமிழக விவசாயிகளின் குற்றச்சாட்டு.

ஒன்று படக்குழு அந்த காட்சிகளை தணிக்கை செய்து வெளியிட வேண்டும்.. இல்லையெனில் தமிழ்நாட்டில் அந்த காட்சிகள் படத்தில் இடம்பெறக்கூடாது இதுவே எங்கள் கோரிக்கை என்கிறது தமிழக விவசாயிகள் சங்கம். இல்லையென்றால் விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளது. 

எல்லா பக்கத்தில் இருந்தும் எதிர்ப்புகளை சம்பாதித்து வருகிறது எம்புரான். தமிழக விவசாயிகளின் கோரிக்கையையும் படக்குழு செவிசாய்க்கும் என்று நம்புவோமாக..

இதையும் படிங்க: ரூ.100 கோடியை தாண்டிய எம்புரான் வசூல்.. அசத்தும் மோகன்லால் - ப்ருத்விராஜ் கூட்டணி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share