வன்முறையின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறப்போகுது.. எச்சரித்த ஓபிஎஸ்..!
தமிழ்நாட்டை அமளிக்காடாக திமுக அரசு மாற்றிவிட்டதாக ஓ பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சுவடு கூட மறையாத நேரத்தில் ஈரோட்டில் இன்னொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பல்வேறு அரசியல் தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வரும் நிலையில், தொடரும் கொலை சம்பவங்கள் ஒரு விதமான நெருடலை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம்.
திருநெல்வேலியில் தொழுகை முடித்து வெளியே வந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் என்பவர் காரில் சென்ற போது ஐந்து பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. ஜான் அவரது மனைவி ஆதிராவிடம் ஈரோடு மாவட்டத்தை நோக்கி காரில் சென்றுள்ளார். நசியனூர் பகுதியில் ஜானின் காரை வழிமறித்த ஐந்து பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அவரை வெட்டிச் சாய்த்தது.
இதையும் படிங்க: பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றுங்கள்.. திமுகவினருக்கு துரைமுருகன் உத்தரவு..!
இச்சம்பவத்திற்கு ஓ பன்னீர்செல்வம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு உட்பட எதுவுமே முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் நண்பகல் 12 மணியளவில் ஈரோடு மாவட்டம் நசியனூர் கோவை-சேலம் நெடுஞ்சாலையில் படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த படுகொலைச் சம்பவம் தமிழ்நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படும் நிலையில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், பட்டப் பகலில் அவர் எட்டி படுகொலை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்தக் கொலையையும், நாள்தோறும் பல கொலைகள் இதுபோன்று நடப்பதையும் பார்க்கும்போது வன்முறையாளர்களின் புகலிடம் தமிழ்நாடு என்ற கருத்திற்கு மாற்றுக் கருத்து இல்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது என கூறியுள்ளார். காவல் துறை என்ற ஒன்று இருக்கிறதா என்று சந்தேகப்படக்கூடிய அளவுக்கு அள தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுப் போய்விட்டது என தெரிவித்துள்ள பன்னீர்செல்வம், இந்த நிலைமை நீடித்தால் வன்முறையில் முதன்மை மாநிலம் தமிழகம் தான் என்ற பெருமையை தமிழகத்திற்கு தி.மு.க. அரசு தேடித் தரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
தமிழ்நாட்டை அமளிக்காடாக மாற்றியிருக்கும் தி.மு.க. அரசின் செயல்பாடுகளை கண்டிப்பதோடு, தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் வன்முறையிலிருந்து காப்பாற்றவும், தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறக்கும் சமூக விரோதச் செயல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: வேலைக்கு வரலனா சம்பளம் இல்ல.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை.. தமிழக அரசு கிடுக்குப்பிடி..!