×
 

அவுரங்கசீப் சமாதியை இடிக்க கோரி போராட்டம்.. போர்க்களமான நாக்பூர்.. திரைப்படத்தால் எழுந்ததா சர்ச்சை..?

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ள முகலாய மன்னர் அவுரங்கசீப் சமாதியை இடித்து அகற்றக்கோரி இந்து அமைப்புகள் போராட்டம் நடத்திய நிலையில் கலவரம் வெடித்தது. நாக்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியின் வரலாறு ‘சவ்வா’ எனும் பெயரில் திரைப்படமாக வெளியானது. இதில் சம்பாஜி மன்னர், முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் எத்தகைய கொடுமைகளை அனுபவித்தார் என்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றது.

இப்படம் பெரும் அதிர்வலைகலை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இப்படம் தொடர்பான விவாதம் மகாராஷ்டிர சட்டசபையில், தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுந்தது. சட்டசபையில் பேசிய சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஹாஸ்மி, அவுரங்கசீப் நடவடிக்கையை பாராட்டியதுடன், அவரது புகழ் வாழ்க என கோஷம் எழுப்பினார். இதனால் மார்ச் 26 வரை சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

முகலாய மன்னர்களிடமிருந்து மகாராஷ்டிராவை மீட்ட  பேரசர் சத்திரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியின் பெயர் கொண்ட சம்பாஜி நகரில் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் சமாதி உள்ளது. மன்னர் சம்பாஜியை கொன்ற முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் சமாதியை  இடித்து அகற்ற வேண்டும் என மகாராஷ்டிராவில் இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்தன. இதற்கு அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸும் ஆதரவு தெரிவிக்கும் விதமாக பேசி இருந்தார்.

இதையும் படிங்க: #BIGBREAKING: நாக்பூரில் வெடித்த பெரும் வன்முறை; தீ வைத்து எரிக்கப்பட்ட வாகனங்கள்; போலீசார் குவிப்பு

இதனிடையே விஸ்வ இந்து பரிஷத் மாநிலச் செயலாளர் கிஷோர் சவான், பஜ்ரங் தளத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் நிதின் மகாஜன் ஆகியோர் அவுரங்கசீப் சமாதி அகற்றப்படவில்லை என்றால் அயோத்தியில் பாபர் மசூதியை கரசேவையில் இடித்தது போல் அவுரங்கசீப் சமாதியை அகற்றுவோம் என்று தெரிவித்தனர். இதற்காக, விஎச்பி, பஜ்ரங்தளம் சார்பில் மகாராஷ்டிராவில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக நாக்பூரிலும் போராட்டம் நடந்தது. அப்போது நாக்பூர் மகால் பகுதியில் அமைந்துள்ள சத்ரபதி சிவாஜி சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எதிர்த்ததாக வதந்தி பரவியது.

இந்த வதந்தியால் முஸ்லீம்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.  இதனால் நாக்பூரில் மகால், கோட்வாலி, கனேஷ்பேத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முஸ்லீம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஜ்ரங் தளம் கட்சியினருக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றாமான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து இரு பிரிவினரிடையே பயங்கர மோதல் வெடித்தது. வாகனங்களுக்கு தீவைத்து கொளுத்தப்பட்டன.

போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த மோதலில் 15 போலீசார் உட்பட 20 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்து அமைப்புகள் நடத்திய போராட்டம் குறித்து பரவிய வதந்தியே இந்த மோதலுக்கு காரணம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். 

வன்முறையை தடுப்பதற்காக போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தடியடி நடத்தி கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். இந்த சம்பவத்தில் ஒன்பது பேர் காயம் அடைந்தனர். மேற்கொண்டு வன்முறை பரவாமல் தடுக்க நாக்பூரில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல கோட்வாலி, கணேஷ்பேத் பகுதிகளிலும் வன்முறை அரங்கேறியது. இதனிடையே பஜ்ரங் தளம் கட்சியினர், தாங்கள் குரானை எரிக்கவில்லை என்றும், ஆர்ப்பாட்டத்தில் அவுரங்கசீப்பின் உருவ பொம்மையை மட்டுமே எரித்ததாக கூறினர். 

வன்முறையை தொடர்ந்து மகாராஷ்டிரா முதலமைச்சர், தேவேந்திர பட்னவிஸ், பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். நாக்பூர் தொகுதி எம்.பி.,யும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, வன்முறை சம்பவங்களுக்கு வதந்தி பரவியதே காரணம் என்று தெரிவித்துள்ளார். நாக்பூரில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க, போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். நகரின் முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் சமாதிக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இதனிடையே சத்ரபதி சம்பாஜிநகர் குல்தாபாத்தில் உள்ள அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி, புனே, கோலாப்பூர், நாசிக், மாலேகான் மற்றும் அஹில்யாநகர் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகள் இன்று போராட்டத்தை அறிவித்துள்ளது.

இந்துத்துவா அமைப்புகளுக்கு உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் இரு பிரிவுகளும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சி மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதையும் படிங்க: முகலாய அரசர் அவுரங்கசீப்பை புகழ்ந்த எம்எல்ஏ அபு ஆஸ்மி சஸ்பெண்ட்... மகாராஷ்டிரா சபாநாயகர் நடவடிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share