×
 

திடீர் ட்விஸ்ட்.. 'பராசக்தி' படத் தலைப்பை யாரும் பயன்படுத்தக் கூடாது.. நேஷனல் பிக்சர்ஸ் அறிவிப்பால் சிவகார்த்திகேயன் படத்துக்கு சிக்கல்.!

'பராசக்தி' படத்தின் தலைப்பை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று 1952இல் இப்படத்தைத் தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிக்க, சுதா கொங்கராவும் இயக்கும்,  சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.இப்படத்துக்கு 'பராசக்தி'என்று சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில்வி ஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்திற்கு தமிழ் மொழியை தவிர மற்ற மொழிகளில் ‘பராசக்தி’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனவே, படத்தின் தலைப்பு யாருக்கு என்கிற கேள்வி எழுந்தது. இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் தங்களுக்கான தலைப்பு உரிமையை வெளியிட்டன. ஆனால்,  இரண்டு தரப்பும் நேரில் சந்தித்து பேசி, சமரசம் ஆகிவிட்டதாக தகவல் வெளியானது. இந்த சூழலில் ’பராசக்தி’ என்ற தலைப்பை யாரும் பயன்படுத்தக்கூடாது என சிவாஜி நடிப்பில் 1952இல் வெளிவந்த ’பராசக்தி’ படத்தை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து ட்விஸ்ட் கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: “அதெல்லாம் முடியாது... எங்களுக்கு இத மாத்தியே ஆகனும்” - அடம்பிடிக்கும் திமுகவினர்... அசைந்து கொடுப்பாரா உதயநிதி?

இதுதொடர்பாக நேஷனல் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில், மு. கருணாநிதி வசனத்தில், சிவாஜி கணேசன் அறிமுகமான, 1952ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பராசக்தி. இந்தத் திரைப்படத்தை நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் எங்களுடைய தாத்தா பெருமாள் முதலியார் தயாரித்தார். ஏ.வி.எம் நிறுவனம் சில ஏரியாக்களின் விநியோக உரிமையை மட்டுமே பெற்றிருந்தது.



அந்தத் திரைப்படத்தில் சிவாஜி கதாநாயகனாக நடிக்க வைப்பதை ஏவிஎம் நிறுவனத்தின் ஏவி.மெய்யப்ப செட்டியார் ஆட்சேபனை தெரிவித்தார். பெருமாள் முதலியார் பிடிவாதமாக சிவாஜியை  கதாநாயகனாக நடிக்கவைத்தார். தன்னுடைய இறுதிக்காலம் வரை, நடிகர்திலகம் சிவாஜி, தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் என்ற வகையில், ஒவ்வொரு பொங்கல் நாளன்றும் வேலூர் வந்து பெருமாள் முதலியாரிடம்  ஆசிபெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அத்தகைய, எங்களின் தாத்தாவுடைய பெருமைமிகு தயாரிப்புதான் "பராசக்தி".

பொன்விழா, வைரவிழா கண்டிருக்கும் இந்தத் திரைப்படம் நூறாண்டு ஆனாலும் அதன் தாக்கம் குறையாது என்ற அளவிற்கு, அந்தத் திரைப்படத்தில் மு.கருணாநிதியின் கனல் தெறிக்கும் வசனங்களும், சிவாஜியின் உணர்ச்சிகரமான நடிப்பும், மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
விரைவில் வெள்ளிவிழா (75வது ஆண்டு) காண இருக்கும் வேளையில், பராசக்தி திரைப்படத்தை டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட நாங்கள் (நேஷனல் பிக்சர்ஸ்) திட்டமிட்டு அதற்கான பணியைத் தொடங்கவிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிவிப்பதில் பெருமைப்படுகிறோம்.



இந்தத் தருணத்தில், எங்களுக்கு முழு உரிமையான பராசக்தி திரைப்படத்தின் பெயரைப் வேறு யாரும் தங்களுடைய திரைப்படத் தலைப்பாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ட்விஸ்ட்டால் தற்போது ’பராசக்தி’ தலைப்பு பிரச்சினை பேசுபொருளாகவும், ஒரே தலைப்புக்கு பட நிறுவனங்கள் மோதும் சூழல் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: சக்தி திருமகனமாக மாறிய விஜய் ஆண்டனி... சிவகார்த்திகேயனுக்காக பராசக்தியை விட்டுக் கொடுத்தாரா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share