×
 

சூடுபிடித்த தனுஷ் கால்ஷீட் விவகாரம்.. தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.16 கோடி கேட்டு கடிதம்!!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரான ஆர்.கே. செல்வமணி, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன் நிறுவனத்தின் கலைச்செல்வி கதிரேசனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் சமீபத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். இது இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இதை அடுத்து அவர் தற்போது இட்லி கடை என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார்.படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படும் நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி இட்லி கடை படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தங்களிடம் கடந்த ஆறு வருடங்களுக்கு முன், முன்பணம் பெற்றுக்கொண்டு இன்று வரை கால்ஷீட் தரவில்லை என்ற தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் குற்றச்சாட்டை முன்வைத்தார். இது பெரும் பிரச்சனையாக வெடித்தது. இந்த நிலையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரான ஆர்.கே. செல்வமணி, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன் நிறுவனத்தின் கலைச்செல்வி கதிரேசனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்ட அட்வான்ஸ் தொகை தொடர்புடையாதாக கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வரும் பிரச்னை குறித்து விரிவாக எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அன்புள்ள சகோதரி கலைச்செல்வி கதிரேசன் அவர்களுக்கு, வணக்கம், நீங்கள் எனக்கு 31.3.2025 அன்று எழுதிய கடிதம், இன்றைய தினம் சமூக வலைத்தளங்களிலிருந்து, என் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பி பெற்றுக் கொண்டேன்.

எனக்கு எழுதப்பட்ட கடிதம் என்றால் என் விலாசத்திற்கு, நீங்கள் எனக்கு அனுப்பி இருக்கலாம் அல்லது என் விலாசம் தங்களுக்கு தெரியாது என்றால், தங்கள் ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரும், தங்களின் வாழ்க்கை துணைவரும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நெடுநாள் நிர்வாகியுமான தங்கள் கணவர் ஃபைவ் ஸ்டார் கதிரேசனுக்கு நன்கு தெரியும். சில முறை என் வீட்டிற்கு கூட வந்துள்ளார். அவரை கேட்டு எனக்கு அனுப்பி இருக்கலாம். ஆயினும் தங்கள் நோக்கம், "இந்த -கடிதம்" எனக்கு அனுப்பப்பட்டதல்ல, என் பெயர் தாங்கி, யாருக்கு நீங்கள் அனுப்ப விரும்பினீர்களோ, அவர்களுக்கே அனுப்பி உள்ளீர்கள் என்றே நினைக்கிறேன். எனவே அதுபோலவே இந்த கடிதத்தையும் நான் அனுப்புகிறேன்.

30.9.2024 அன்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தாங்கள் தனுஷ்ஷிடம் கால்ஷீட் கேட்டு நீங்கள் புகார் அளிக்கவில்லை. தாங்கள் சில வருடங்களுக்கு முன்னால் தனுஷ்க்கு 3கோடி அட்வான்ஸ் கொடுத்ததாகவும், அதை இப்போது அவர் 16 கோடியாக திருப்பி தர வேண்டும் என்பது தான் தாங்களும், தங்கள் கணவரும் அளித்த புகார். 3 கோடி அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, 16 கோடி கேட்பது நியாயம் இல்லை என நடிகர் சங்கத்தின் சார்பில் தெரிவித்த போது, நாங்கள் வட்டிக்கு வாங்கி, பணம் கொடுத்துள்ளோம். எனவே வட்டி எல்லாம் சேர்த்து இந்த நாள் வரை 16 கோடி ஆகிறது. எனவே தனுஷிடம் ரூபாய் 16 கோடி வாங்கி தர வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை.

நாம் வட்டி கடை நடத்தவில்லை, சங்கம் நடத்துகிறோம். எனவே இது சரியல்ல என நடிகர் சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் கணவர் கதிரேசன் நிலையை சம்மேளனமும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் அவர்களுக்கு எடுத்து கூறி 3 கோடிக்கு மேலாக ஒரு தொகையை பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்தோம்.

இதையும் படிங்க: எப்படி உங்களால மனசாட்சியில்லாம பேச முடியுது.. நடிகர் மீது தயாரிப்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!!

நடிகர் சங்கம் நிர்வாகிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் ஆலோசனை செய்து அதிகபட்சம் 3 கோடிக்கு இரண்டு மடங்காக 6 கோடி வரை பெற்று தர முடியும் என தெரிவித்தனர். அதை ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராகிய கதிரேசன் ஏற்கவில்லை. கதிரேசன் என்னுடைய நெடுநாள் நண்பர் என்பதாலும், தனுஷ் அவர்கள் என்னுடைய நண்பரின் மகன் என்ற முறையிலும், எனக்கும் நன்கு நட்புள்ளது என்பதின் அடிப்படையிலும், தனிப்பட்ட முறையில் இதற்கு மேல் ஏதாவது பெற்று தர முடியுமா என முயற்சிக்கிறேன் என தெரிவித்தேன்.

மேலும் படப்பிடிப்பு குழுவினர் இரண்டு நாட்களுக்கு மேலாக தேனியில் காத்திருக்கின்றனர்.  படப்பிப்பு நடத்தாமல், சம்மேளன தொழிலாளர்கள் காத்திருப்பதாலும், தயாரிப்பாளருக்கும் நஷ்டம், எங்கள் சம்மேளன உறுப்பினர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது என்பதை சம்மேளன தலைவராக நான் தெரிவித்தேன். இரண்டு மடங்கு பணம்: பிரச்சனை முடியாமல் படப்பிடிப்பை தொடங்க கூடாது என உங்கள் கணவர் தெரிவித்தார்.

இனிமேல் படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என்றால் அந்த படத்தின் தயாரிப்பாளரான உங்கள் உறுப்பினரை அழைத்துப் பேசி, நிறுத்திக் கொள்ளுங்கள். சம்மேளனம் ஆகிய நாங்கள் இனியும் படப்பிடிப்பை நிறுத்த இயலாது என்று தெரிவித்தேன். நடிகர் சங்கத்தின் சார்பில் வந்திருந்த நாசர் மற்றும் பூச்சி முருகன் உட்பட நடிகர் சங்க நிர்வாகிகள், இரண்டு மடங்குக்கு மேல் கேட்பது நியாயம் இல்லை என்றாலும், சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி இதற்கு மேல் ஏதாவது அதிக தொகை பெற்று தர முடியுமா என பேசி பார்க்கிறோம் என்று சொல்லி சென்றார்கள்.

பிரச்சனை சுமூகமாக முடிய வேண்டும் என்பதால் அக்டோபர் 30 க்குள் இந்த பிரச்சனையை நியாயமாக முடித்து தர சம்மேளனம் முயற்சி செய்யும். சம்மேளனத்துக்கும் பல்வேறு அழுத்தங்கள் உள்ளன .எனவே உடனே படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என சம்மேளனத்தின் சார்பில் நாங்கள் தெரிவித்தோம். இனியும் தொடர்ந்து படப்பிடிப்பை நிறுத்தி வைக்க இயலாது.

படப்பிடிப்பை உடனே தொடங்க வேண்டும் என நடிகர் சங்கமும், சம்மேளனமும் அளித்த வேண்டுகோளையும், உறுதியையும் ஏற்று தயாரிப்பாளர்கள் சங்கம் படப்பிடிப்பை நடத்த அனுமதித்தனர். படப்பிடிப்பை நிறுத்தியது தயாரிப்பாளர்கள் சங்கம். நிறுத்தப்பட்ட படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்றால் நீங்கள் குறிப்பிட விரும்புகின்ற மேலிடம் முடிவெடுத்தால், நிறுத்த உத்தரவிட்டுள்ள "தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கோ" அல்லது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளராக உள்ள "உங்கள் கணவர் கதிரேசன்" அவர்களுக்குதானே உத்தரவிட்டிருக்க வேண்டும்? ஏற்கனவே படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்ற எங்களுக்கு ஏன் உத்தரவு இட போகிறார்கள்.

புதிய பிரச்சனையை உருவாக்க மோடி முதல் டிரம்ப் வரை மேலிடத்து உத்தரவு என நீங்கள் யாரையாவது கொண்டு வர முயற்சிக்கலாம். நடந்தது இவ்வாறு இருக்க ஏதோ மேலிடத்து உத்தரவு என்ற புதிய அரசியலை புகுத்த முயற்சித்து உள்ளீர்கள். திரைப்பட சங்கங்களில் ஏற்கனவே பல்வேறு அரசியல் நடக்கின்றது.

நீங்களும் உங்கள் பங்கிற்கு ஒரு புதிய அரசியலை புகுத்தாதீர்கள். நடிகர் சங்க நிர்வாகிகள் அளித்த உறுதி படி நடிகர் சங்கம் சார்பில் நாசர், பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் போன்ற 5 நிர்வாகிகள் சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர் மற்றும் தனுஷ்ஷிடம் பேசி ரூபாய் 7 கோடி வரை பெற்று தரலாம் சம்மதமா?" என கேட்டார்கள். ஆனால் அதற்கும் உங்கள் கணவர் கதிரேசன் சம்மதிக்கவில்லை. தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி ராமசாமி , இன்னொரு செயலாளர் ராதாகிருஷ்ணன் என்னிடம், "நீங்கள் தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி அதிகபட்சம் என்ன பெற்று தர முடியுமோ, அதற்கான முயற்சியை செய்யுங்கள்" என வேண்டுகோள் விடுத்தார்கள். ஏற்கனவே நாங்கள் அக்டோபர் 30 க்குள் ஒரு நல்ல நியாயம் பெற்று தருவோம் என உறுதி அளித்தாலும், முரளி மற்றும் .ராதாகிருஷ்ணன் அவர்களின் வேண்டுகோளை ஏற்றும் சம்மந்தப்பட்டவர்களிடம் தொடர்ந்து பேசி வந்தோம்.

அதன் பயனாக 8 கோடி வரை பெற இயலும் என்ற நிலையை எய்தினோம். இறுதியாக தனுஷ் அவர்கள் "அண்ணா இந்த தொகை நியாயம் இல்லை என்றாலும் உங்களுக்காகவும், தயாரிப்பாளர்கள் சங்க வேண்டுகோளுக்காகவும் மட்டுமே நான் இதற்கு சம்மதிக்கிறேன். இதற்கு மேல் ஒரு ரூபாய் கூட வழங்க நான் தயாராக இல்லை வேண்டுமானால் அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லட்டும், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கண்டிப்புடன் கூறி விட்டார். இதை நான் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் என அனைவரும் இருக்கும் போது நாங்கள் தெரிவித்தோம்.

ஆனால் அப்போது தங்கள் கணவர் கதிரேசன் இதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியாக 15 கோடி தந்தால் மட்டுமே ஒப்புக் கொள்வேன் என்று கூறிவிட்டார். இதில் நியாயம் இல்லை என்று நாங்களும், நடிகர் சங்கமும் நினைத்ததால் இனி இந்த பிரச்சனையில் தலையிட இயலாது என்று தங்கள் கணவரிடமும், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளிடமும் தெரிவித்துவிட்டோம்.

தங்களை போல தங்கள் கணவரின் வேதனைக்கு சாட்சி கூற நீங்கள் வந்ததை போல நீங்கள் படும் மன உளைச்சலுக்கு சாட்சியம் சொல்ல உங்கள் பக்கத்து வீட்டு அம்மாவை அழைத்து வந்ததை போல, மேற்கண்ட கடிதத்திற்கு புதிதாக சாட்சியம் சொல்ல நான் யாரையும் அழைத்து வர வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நான் மேலே கூறிய அனைத்தும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இருக்கும் போது நடந்த உண்மை ஆகும்.

எனவே நடந்த அனைத்திற்கும் அவர்களே சாட்சியம். அன்புள்ள சகோதரியே! நடந்ததில் சிறு பகுதியை மட்டுமே தங்களுக்கு, கடிதமாக எழுதி உள்ளேன். நட்பு கருதியும், நாகரிகம் கருதியும் பல விஷயங்களை நான் எழுத விரும்பவில்லை என்றும் எப்போதும் நட்புடனே இருக்க விரும்புகிறேன். எங்களை துண்டாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பல விமர்சன வலிகளுக்கு மத்தியில் மகன்களுடன் கொஞ்சி விளையாடிய நயன்தாரா...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share