×
 

தொகுதி மறுவரையரை விவகாரம்.. மாநில முதல்வர்களுக்கு கடிதம்... சென்னையில் அடுத்த ஆலோசனை.. ஜெட் வேகத்தில் முதல்வர் ஸ்டாலின்!

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பாக 7 மாநில முதல்வர்களுக்கும் 29 அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக கடந்த 5ஆம் தேதி தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தொகுதி மறுவரையால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களில்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடுத்தகட்ட தொடர்ச்சியாக  மார்ச் 22இல் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க 6 மாநிலங்களின் முதல்வர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

"நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் நம்மை போன்ற மாநில அரசுகளின் உரிமையை நிரந்தரமாக குறைக்கக்கூடிய அச்சுறுத்தலை தற்போது எதிர்கொண்டுள்ளோம். இந்தியாவில் 1952, 1963, 1973-ம் ஆண்டுகளில் நாடாளுமன்ற மக்களவை தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது. எனினும், 1976-ல் மேற்கொள்ளப்பட்ட அரசமைப்பு சட்டம் 42-வது திருத்தத்தின்படி, மக்கள்தொகை கட்டுப்பாட்டை ஊக்குவிக்க, 2000-ம் ஆண்டுக்கு பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு வரை தொகுதி மறுவரையறை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது. மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு தொடர்ந்து நீடித்ததால், 84-வது அரசியலமைப்பு திருத்தம் வாயிலாக 2026-க்கு பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு வரை இது நீட்டிக்கப்பட்டது.



அதன் அடிப்படையில் 2026-ம் ஆண்டுக்கு பிறகு, அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தற்போதுள்ள நிலை பாதிக்கப்படும். மக்கள்தொகையை கட்டுப்படுத்தி, சிறந்த நிர்வாக குறியீடுகளை அடைந்த மாநிலங்களுக்கு, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டால், நியாயமற்ற தண்டனையாக அமைந்துவிடும். தவிர, இதனால் ஏற்படும் ஜனநாயக ஏற்றத்தாழ்வு பல ஆண்டுகளுக்கு நீடிக்கும். நமது மாநில மக்களின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் வாதிடுவது, மாநில வளங்களை பாதுகாப்பது, தேசிய அளவிலான முக்கிய முடிவுகளில் நமது குரலை ஒலிக்கச் செய்வது ஆகிய திறன்களை குறைத்துவிடும்.
நாங்கள் தொகுதி மறுவரையறைக்கு எதிரானவர்கள் அல்ல. தேசிய கடமைகளை முறையாக நிறைவேற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக அமைந்து, அந்த மாநிலங்களின் முன்னேற்றத்தை தடுத்துவிட கூடாது என்றுதான் எதிர்க்கிறோம்.

தற்போது உள்ள 543 மக்களவை தொகுதிகளை மாநிலங்கள் இடையே மறுபகிர்வு செய்வது அல்லது, மொத்த எண்ணிக்கையை 800-க்கு மேல் அதிகரிப்பது ஆகிய இரண்டு சாத்தியமான அணுகுமுறைகளுடன், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படக்கூடும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்கள் இந்த 2 அணுகுமுறையிலும் கணிசமான தொகுதிகளை இழக்க நேரிடும்.
எனவே, சதவீத அடிப்படையில் நமது தற்போதைய பிரதிநிதித்துவத்தை இழக்காமல் தொகுதி மறுவரையறை செய்யப்படுவதை வலியுறுத்த வேண்டும்.



அதற்கு, கூட்டு ஆலோசனை, ஒருங்கிணைந்த விவாதங்கள் அவசியம். தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழுவில் (JAC) சேர தங்களது முறையான ஒப்புதல் வேண்டும். இக்குழுவில் பணியாற்றவும், ஒருங்கிணைந்த செயல் திட்டம் வகுக்கவும் தங்கள் கட்சியில் இருந்து ஒரு மூத்த பிரதிநிதியை நியமிக்க வேண்டும். இந்த ஒருங்கிணைந்த செயல்பாட்டின் முதல்கட்டமாக மார்ச் 22-ம் தேதி சென்னையில் ஒரு தொடக்க கூட்டம் நடத்த உள்ளோம். இத்தருணத்தில் தங்கள் ஒத்துழைப்பை கோருகிறேன். அரசியல் வேறுபாடுகளை கடந்து, நமது கூட்டு நன்மைக்காகவும், வளர்ச்சிக்கான சரியான ஆதாரங்களை பெறுவதற்கும், நாம் தனித்தனி அரசியல் அமைப்புகளாக அல்லாமல், நமது மக்களின் எதிர்காலத்தின் பாதுகாவலர்களாக ஒன்றிணைய வேண்டும்." என் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், பஞ்சாப் முதல்வர்களுக்கும் இந்த மாநிலங்களின்  முன்னாள் முதல்வர்களுக்கும், இந்த 7 மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தெலுங்கு தேசம், ஜனசேனா, பாரத் ராஷ்டிர சமிதி, ஒவைசியின் ஏஐஎம்ஐஎம், மதச்சார்பற்ற ஜனதாதளம், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட  கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உங்க உபதேசம் எங்களுக்கு தேவையில்லை அண்ணாமலை.. கனிமொழி காட்டமான பதிலடி..!

இதையும் படிங்க: தொகுதி மறுவரையறையில் தமிழகத்துக்கு பாதகம்..முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share