×
 

திருத்தணி காய்கறி சந்தைக்கு மீண்டும் காமராசர் பெயர்.. பாமக தலைவர் அன்புமணி மகிழ்ச்சி..!

திருத்தணி காய்கறி சந்தைக்கு மீண்டும் காமராசர் பெயர் வைக்கப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

திருத்தணியில் காய்கறி சந்தையின் பெயரை மாற்றும் முடிவு கைவிடப்படுவதாகவும், அதற்கு பதிலாக பழைய பெயரான காமராசரின் பெயரிலேயே சந்தை செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் விடுத்துள்ள செய்தி வருமாறு...

திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.3.02 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ள காய்கறி சந்தைக்கு கலைஞர் நூற்றாண்டு சந்தை  என்று பெயர் சூட்டும் திட்டம் கைவிடப்படுவதாகவும்,  ஏற்கனவே இருந்த வந்த பெருந்தலைவர் காமராசரின் பெயரால்  பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி  என்று அழைக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.

இதையும் படிங்க: எதிர்ப்புக்கு பணிந்தது திமுக அரசு.. திருத்தணி மார்க்கெட்டுக்கு காமராஜர் பெயர்.. தமிழக அரசு அறிவிப்பு!

திருத்தணியில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் காய்கறி சந்தைக்கு பெருந்தலைவர் காமராசரின் பெயரை நீக்கி விட்டு, கலைஞர் நூற்றாண்டு காய்கறி அங்காடி என்று பெயர் சூட்ட திமுக அரசு திட்டமிட்டது. இந்த முடிவை கடுமையாக எதிர்த்த நான்,  தமிழ்நாட்டுக்கு அடையாளம் தேடித் தந்த பெருந்தலைவரின் பெயரை நீக்கக்கூடாது என்றும், அவ்வாறு நீக்கினால் மிகப்பெரிய அளவில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தேன். அதைத் தொடர்ந்து தமிழக அரசு இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், புகழுக்கும்  காரணமாக இருந்த காமராசர் போன்ற தலைவர்களின் பெயர்கள் எங்கு சூட்டப்பட்டிருந்தாலும், அதன் பெயரை நீக்கும் அல்லது மாற்றியமைக்கும் அரசியலை தமிழக அரசு செய்யக்கூடாது.  அரசின் திட்டங்களுக்கும், கட்டிடங்களுக்கும்  ஏற்கனவே சூட்டப்பட்டுள்ள தலைவர்களின் பெயர்கள் நீடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த பதிவில் அன்புமணி கூறியுள்ளார்..

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், கர்மவீரர் காமராசர், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பெயர்களில் விமானநிலையங்கள், ரயில் நிலையங்கள், மணிமண்டபங்கள் மட்டுமல்லாது ஊர்களின் பெயர்களும், வீதிகளின் பெயர்களும் என ஏராளமாக உள்ளன. திமுக, அதிமுக மாறிமாறி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தங்கள் கட்சியின் தலைவர்களின் பெயர்களை அவர்கள் சூட்டி மகிழ்வது வழக்கம். ஆனால் ஒருசிலரது பெயர்களை மாற்றி சூட்டும்போது எல்லா தரப்பிலும் இருந்தும் எதிர்ப்புகள் வரும். அப்படியான ஒரு பெயர் தான் காமராசர். தமிழ்நாட்டின் கல்விக்கண் திறந்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான அவரது பெயர் நீக்கம் செய்யப்படுமானால் அது தமிழனத்திற்கே செய்யும் தீங்காக போய் முடியும். அப்படியான ஒரு தீங்கு நிகழாமல், எதிர்ப்பரசியல் மூலம் பாமக, காமராசரின் பெயரை நிலைநாட்டி உள்ளது பாராட்டுக்குரிய ஒன்று..

இதையும் படிங்க: காமராஜர் பெயரில் கை வைத்த திமுக.. கூட்டணி கட்சிக்கு எதிராகப் போராட்டம் அறிவித்த கதர்ச்சட்டைகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share