×
 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாதக வேட்பாளர் அறிவிப்பின் பின்னணி என்ன?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஏற்கனவே மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளரை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளதன் பின்னணி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணமடைந்ததையடுத்து அத்தொகுதிக்கு பிப்ரவரி 5 அன்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், தேர்தலைப் புறக்கணிக்கப்பதாக அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இதுவரை சுயேட்சைகள் 9 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்துள்ளது. வேட்பாளராக மா.கி. சீதாலட்சுமி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். ஏற்கெனவே 2019 மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியிலும், 2024 மக்களைவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிட்டுள்ளார்.

முக்கியமான கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளாரை அறிவித்துள்ளது. எனவே, இந்த இடைத்தேர்தலில் திமுக நாம் தமிழர் கட்சி இடையே முக்கியமான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021 சட்டமன்றத் தேர்தலில் 11,629 வாக்குகளையும், 2023 இடைத்தேர்தலில் 10,827 வாக்குகளையும் நாம் தமிழர் கட்சி பெற்றது. முக்கிய கட்சிகளின் தேர்தல் புறக்கணிப்பால், இந்த முறை இடைத்தேர்தலில் கூடுதலாக நாம் தமிழர் கட்சி வாக்குகளைப் பெறும் என்று அக்கட்சி நம்புகிறது.

இதையும் படிங்க: சொன்னதை செய்து காட்டிய சீமான்; தலைகீழாக மாறிய ஈரோடு கிழக்குத்தொகுதி களநிலவரம்! 

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருப்பதால், சீதாலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் சீதாலட்சுமி வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டதில் இன்னொரு பின்னணி காரணமும் கூறப்படுகிறது. கடந்த கால தேர்தல்களில் கடைசி நேரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகி கட்சி தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள். எனவே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் புதிய வேட்பாளர் அறிவிக்கப்பட்டால், ஆளுங்கட்சி வேட்பாளரை வளைக்கும் வாய்ப்பு இருப்பதாக நாம் தமிழர் கட்சி கருதுவதால், ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்ட சீதாலட்சுமியை சீமான் தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

 

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைதேர்தல்...வாய்ப்பை தவறவிட்ட அதிமுக...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share