சீமானுக்கு பெரியார் தேவைப்படுகிறார்... நறுக்கென்று பதிலளித்த ஆர். பார்த்திபன்!
சீமான் அரசியல் நடத்துவதற்கும் பெரியார்தான் தேவைப்படுகிறார் என்று நடிகரும் இயக்குநருமான ஆர். பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நடிகரும் இயக்குநருமான ஆர். பார்த்திபன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " புதிதாக ‘54ஆவது பக்கத்தில் ஒரு மயிலிறகு’எனும் திரைப்படத்தை தயாரிக்கிறேன். இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற உள்ளது. அதனால், புதுச்சேரி அரசின் ஒத்துழைப்பைக் கோரி சுற்றுலாத் துறை அமைச்சரைச் சந்தித்தேன். புதுச்சேரி அரசு என்ன செய்து தர முடியுமோ, அதைச் செய்து தரும் எனக் கூறியுள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகன் நான்தான். இது காதலை மையமாகக் கொண்ட ஒரு படம்.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். முதல்வராக ஆசைப்படலாம். அது ஒன்றும் தவறு இல்லை. ஆனால், அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்தும்போது பல தடைகள் நிச்சயம் இருக்கும். அரசியலில் ஆட்சியைப் பிடிப்பது என்பது பெரிய விஷயம். ஆகவே நடிகர் விஜய் அவருக்கு ஏற்படும் தடைகளைத் தாண்ட வேண்டும். அதுதான் உண்மையான தலைவருக்கு அழகு . எப்போதும் ஆளும் கட்சியை விமர்சித்தால்தான் அடுத்த இடத்துக்கு வர முடியும். எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோர் அதைத்தான் செய்தனர். ஆளும் கட்சியை எதிர்த்துதான் வர வேண்டும். நடுநிலையோடு இருப்பேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. இவற்றையெல்லாம் நான் பொதுவாக ரசிக்கின்றேன்.
இதையும் படிங்க: கோட்-2ம் பாகம் உறுதி... அரசியலுக்காக சினிமாவை விட்டு விலகும் தீர்மானத்திற்கு தீ வைத்த விஜய்..!
நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் அல்ல. எனவே, விஜய் அழைத்தாலும் அவரது கட்சியில் சேர மாட்டேன். என்னுடைய அரசியல் நோக்கம் என்பது ஏற்கனவே இருப்பது இல்லாமல் வேறொரு மாற்றம் ஏற்பட வேண்டும். அதுதான் அரசியலில் நல்ல விஷயம். அது என்னால் செய்ய முடியுமா என்றால் இல்லை. இப்போது என் கவனம் முழுவதும் சினிமா மீது மட்டும்தான். நடிகர் விஜய் இரண்டு மேடைகளில்தான் பேசியுள்ளார். அதில் அவர் கொஞ்சம் கூட தவறு இல்லாமல் பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அரசியல் என்றாலே பேச்சுதான். அதற்கு விஜய் தகுதியாக இருக்கிறார். அவருக்கு கூடும் கூட்டம் அவரது கட்சிக்கு வாக்காக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பெரியாரை நம் சமுகத்தில் ஒதுக்கவோ நீக்கவோ முடியாதவர். அவரை எதிர்ப்பதற்கு பின்னால் வேறு அரசியல் இருக்கலாம். பெரியார் நமக்கு எப்போதுமே பெரியார்தான். அதில் சிறிய கருத்து வேறுபாடுகூட கிடையாது. சீமான் தற்போது பெரியாரை விமர்சித்து வருகிறார். அவர் அரசியல் நடத்துவதற்குக்கூட பெரியார்தான் தேவைப்படுகிறார். அந்தளவுக்குப் பெரியாரின் தாக்கம் உள்ளது” என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இது தளபதி பொங்கல்.... "ரூட்" க்ளியர் ஆகிடுச்சு...