தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே வார்த்தை போர் நாளுக்கு நாள் முற்றி வருகிறது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திற்கு சென்று அங்கு பல நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார்.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள மைதானத்தில் நடந்த விழாவில் சுமார் 704.89 கோடி ரூபாய் மதிப்பிலான 62 முடிவுற்ற பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும் 385 கோடி ரூபாய் மதிப்பிலான 178 புதிய திட்டங்களுக்கும் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இது மட்டுமின்றி விழாவில் 44 ஆயிரத்து 690 பயனாளிகளுக்கு ரூபாய் 387 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

நலத்திட்டங்களைத் தொடர்ந்து விழாவில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், மக்கள் முகங்களில் மகிழ்ச்சியை காண முடிவதே திமுக விடியலின் அடையாளம், திமுக அரசு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது. அதுமட்டுமின்றி அறிவிக்காத வாக்குறுதிகளையும் திமுக அரசு செய்து வருகிறது மகளிர் முன்னேற்றத்திற்கு சிறு தடை கூட ஏற்படக் கூடாது என்ற வகையில் எனது அரசு செயல்பட்டு வருகிறது மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
இதையும் படிங்க: தேசிய கல்விக் கொள்கையை அரசியல் ஆக்காதீர்..! முதல்வர் ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்..!
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார் புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்குவோம் என மத்திய அரசு கூறியுள்ளதற்கு, கடும் கண்டனம் தெரிவித்தவர் கல்வியில் அரசியல் செய்வது நாங்களா? நீங்களா?மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என்பது அரசியல் இல்லையா? பல்வேறு மொழிகள் கொண்ட நாட்டை ஒரே மொழி கொண்ட நாடாக மாற்றுவது அரசியல் இல்லையா? புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என்று கூறுவது அரசியல் இல்லையா?

தமிழ்நாட்டில் இருந்து நீங்கள் வாங்கும் வரியை தர முடியாது என்று கூற எங்களுக்கு ஒரே ஒரு நொடி போதும் தேன்கூட்டில் கல் எறிய வேண்டாம், தமிழர்களின் தனித்துவப் போராட்ட குணத்தை பார்க்க ஆசை படாதீர்கள், மாநிலங்கள் வளர்ச்சியால் தான் நாடு பயன்பெறும் மத்திய அரசு மாநில வளர்ச்சியை தடுக்கிறது மாநிலத்திற்கான நிதியை அழிக்க மறுக்கிறது, தேசியக் கொள்கை மூலம் நமது பிள்ளைகள் படிப்பதை தடுக்க முயற்சி நடக்கிறது என மத்திய அரசை கடுமையாக சாடினார்.
நமது வீட்டுப்பிள்ளைகள் மீண்டும் கல்விச்சாலைக்கு வராமல் தடுக்க பார்க்கிறார்கள் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை திணிப்பது அரசியல் இல்லையா இந்தியை வளர்க்க கொண்டுவரப்பட்டதே தேசிய கல்விக் கொள்கையாகும் கொடுத்து பெறுவது தான் கூட்டாட்சியின் தத்துவம் இப்போது இருக்கும் மத்திய அரசு இந்தியாவுக்கே சாபக்கேடு என ஸ்டாலின் கோபம் தெறிக்க பேசினார்.
தாய்மொழியை வளர்க்கப் போவதாக மத்திய கல்வி அமைச்சர் கூறியுள்ளார் தாய்மொழி தமிழை வளர்க்க எங்களுக்கு தெரியும் இந்தி மொழியால் தங்களின் தாய் மொழியை தொலைத்து விட்டு நிற்பவர்களிடம் போய் கேட்டுப்பாருங்கள் உங்களின் சதி திட்டத்தின் ஆபத்து புரியும் நீங்கள் வந்து தான் வளர்க்க வேண்டும் என்று தமிழ் உங்களிடம் கையேந்தி நிற்கவில்லை என முதலமைச்சர் மு க ஸ்டாலின் காட்டமாகவும் ஆவேசமாகவும் பேசினார்
இதையும் படிங்க: அடித்து ஆடும் அண்ணாமலை & கோ.. செம்ம குஷி ஆகிப்போன பி.எல் சந்தோஷ்..!