நேரடி திரைப்படங்களுக்கு இணையாக ஓடிடி தளங்களில் வெளியாகும் இணையத்தொடர்கள் உலக அளவில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. Money Heist, Squid Game, Game of Thrones, Peaky Blinders என்று ஏராளமான தொடர்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். அதற்கு இணையாக இந்தியாவில் இணையத்தொடர்கள் வருகிறதா என்றால், இப்போதுதான் ஒன்றிரண்டு அவ்வாறான இடத்தை பிடித்து வருகின்றன. Sacred games, Delhi Crime, Paatal Lok, kaala pani, Black Warrent போன்ற தொடர்கள் இந்தியைத் தாண்டி பல மொழி ரசிகர்களாலும் பார்க்கப்பட்டன. அந்த வரிசையில், தற்போது இந்தியில் வெளியாகி உள்ள டப்பா கார்டெல், நெட் பிளிக்ஸ் தளத்தில் அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.

புனே நகரில் சமூக அடுக்கில் 5 வெவ்வேறு படிநிலைகளில் உள்ள பெண்கள் எதிர்பாராத விதமாக ஒன்று சேர்ந்து போதைப்பொருள் கடத்தல் தொழிலை செய்ய நேரிடுகிறது. அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் என்ன என்பது தான் இந்த தொடரின் ஒருவரிக் கதையாக கொள்ளலாம். இதில் ஷப்னா ஆஸ்மி, ஜோதிகா, நிமிஷா சஜயன், ஷாலினி பாண்டே, அஞ்சலி ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க ஜிஸ்சு சென்குப்தா, கஜராஜ் ராவ் ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். ஹிதேஷ் பாட்டியா இயக்கி உள்ள இத்தொடரை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மொத்தம் 7 எபிசோடுகள் உள்ள இந்த தொடர் பார்க்க ஆரம்பித்தது முதல், இறுதிக்கட்டம் வரை நம்மை உறைய வைத்து விடுகிறது. இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுத்து முதல்பாகத்தை முடித்துள்ளது சிறப்பு.
இதையும் படிங்க: விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்..!

இந்தியாவின் உன்னதமான நடிகைகளில் ஒருவர் ஷப்னா ஆஸ்மி. பேரலல் சினிமா உலகில் இன்றளவும் அவர் நிகழ்த்திய சாதனைகளை வேறொருவர் முறியடிக்கவில்லை என்பதே உண்மை. 74 வயதான நிலையிலும் டப்பா கார்ட்டல் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி உள்ளார். கண்களாலும், முக பாவனைகளாலும், வசன உச்சரிப்புகளாலும் இளம் நடிகைகளுக்கு பாடம் எடுக்கும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் ஷப்னா ஆஸ்மி. அதேபோன்று அலட்சியமான உடல்மொழியோடு ஜோதிகாவின் நடிப்பும் அட்டகாசமாக உள்ளது. இந்த தொடரின் ஆல்ரவுண்டர் என்றால் அது நிமிஷா சஜயன் தான். வீட்டு வேலை செய்யும் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி அவர் வரும் காட்சிகள் எல்லாம் அடி தூள் ரகம். மென்மை உருவான தோற்றத்தோடு ஷாலினி பாண்டே அசத்துகிறார் என்றால், தடாலடி ஓரினச் சேர்க்கையாளர் வேடத்தில் அஞ்சலி ஆனந்த் அதகளம் செய்கிறார்.

மொத்தத்தில் இந்த சீசனில் வெளிவந்துள்ள இணையத்தொடர்களில் டப்பா கார்ட்டெல் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது எனலாம். இதன் பாதிப்பில் பன்மொழி கதாநாயகர்கள், நாயகிகளை ஒருங்கிணைத்து மேலும் பல தொடர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கலாம்.
இதையும் படிங்க: ஓடிடியில் கலக்கும் மம்மூட்டி மகன்...! பிச்சுக்கிட்டு ஓடும் 'லக்கி பாஸ்கர்'..!