டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 5இல் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தலைநகர் டெல்லியில் தேர்தல் சூடுப்பிடித்து வருகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது. டெல்லி முதல்வர் கல்காஜி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தேர்தலில் செலவிடும் தொகையைத் திரட்டுவதற்கு மக்களை எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளார். இதற்காக முதல்வர் அதிஷி பொதுமக்களிடம் நிதி திரட்டும் பிரச்சாரத்தை (crowd funding campaign) தொடங்கியுள்ளார்.
டெல்லியில் ஆன்லைன் மூலம் பண நன்கொடை செய்யும் லிங்கை வெளியிட்ட அதிஷி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தேர்தலில் போட்டியிட எனக்கு ரூ. 40 லட்சம் தேவை. ஆம் ஆத்மி கட்சி எப்போதும் சாதாரண மக்கள் தரும் சிறிய நன்கொடை பணத்தின் மூலமே தேர்தல்களைச் சந்திக்கிறது. இது கட்சியின் நேர்மையான அரசியல் பணிக்கு உதவுகிறது. கட்சியின் பணிகள் மற்றும் நேர்மையை மக்கள் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று ஆதிஷி தெரிவித்தார்.
இதுதொடர்பாக டெல்லி முதல்வர் எக்ஸ் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில், "கடந்த 5 ஆண்டுகளாக, சட்டப்பேரவை உறுப்பினராக, அமைச்சராக, தற்போது டெல்லியின் முதல்வராக எனக்கு உங்கள் ஆதரவை அளித்துள்ளீர்கள். உங்களின் ஆசீர்வாதமும் ஆதரவும் இல்லாமல் இது எதுவும் சாத்தியமாகியிருக்காது. தற்போது தேர்தல் பிரச்சாரத்தை எதிர்கொள்கிறோம். மீண்டும் எனக்கு உங்களின் ஆதரவு தேவை. தயவுசெய்து எனது கூட்டு நிதிதிரட்டும் பிரச்சாரத்துக்கு நிதி அளித்து உதவுங்கள். வளர்ச்சி மற்றும் நம்பிக்கைக்கான இந்தப் பயணத்தை நாம் ஒன்றிணைந்து தொடர்வோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சிவசேனா (உத்தவ்) கட்சியும் "இந்தியா கூட்டணி"யில் இருந்து விலகல்: மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் டெல்லி அரசியல் களம்.. மும்முனைப் போட்டியில் தலைநகர்...