இனி கண்ணாடி பாலம் பார்க்க கன்னியாகுமரி போக வேண்டாம், சென்னையிலேயே...
தலைநகர் சென்னைவாசிகளுக்கு 2025-ல் ஒரு புத்தாண்டு பரிசு காத்திருக்கிறது
தமிழ்நாட்டின் முக்கிய நவீன அடையாளங்கள் எல்லாம் முதலில் சென்னையில் தான் தொடங்கப்பட்டன. உதாரணத்திற்கு அதிக உயரமான கட்டிடம் எல்ஐசி கட்டப்பட்டது சென்னையில் தான், உயரம் மற்றும் நீளமான மேம்பாலமான அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டதும் சென்னையில் தான். ஆனால் பாருங்கள் கண்ணாடி இழை பாலம் கன்னியாகுமரியில் திறக்கப்பட்டு விட்டது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
கன்னியாகுமரியின் கடல்பரப்பில் கம்பீரமாக நிற்கும் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டி தமிழ்நாடு அரசால் 3 நாட்களுக்கு வெள்ளி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் இடையே 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கண்ணாடி இழை பாலம் திறக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வு கன்னியாகுமரியின் சுற்றுலாத் துறைக்கு கூடுதல் வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.
நம்ம அண்ணா மேம்பாலத்தை ஒட்டி இருக்குற செம்மொழி பூங்கா 8 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து இருக்கு. (ஐயோ அது அந்தகால ட்ரைவ் இன் ஓட்டலாச்சே, அங்க கார்ல உட்காந்து கிட்டே காபி டிபன் சாப்பிட்ட காலம் எல்லாம் ஞாபகம் வருதே என்று அங்கலாய்ப்பவர்களுக்காக உச் மட்டும் தான் கொட்ட முடியும்.. சரி, இப்போ விஷயத்துக்கு வருவோம்..) அந்த செம்மொழி பூங்கா எதிரில் 6 ஏக்கர் அளவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது தான் கலைஞர் நூற்றாண்டு பூங்கா. இந்த இரண்டையும் பிரிப்பது கதீட்ரல் சாலை.
இரண்டு பூங்காக்களுக்கு இடைப்பட்ட தொலைவு 750 மீட்டர் ஆகும். இந்த இடத்தில் தான் கண்ணாடி பாலம் கட்டப்போறதா தமிழ்நாடு அரசு முடிவு எடுத்து இருக்கு. இந்த தகவலை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிச்சு இருக்காரு. இப்போது செம்மொழி பூங்காவில் இருந்து கிழக்கு நோக்கி சென்று யூ டர்ன் எடுத்து பிறகே கலைஞர் பூங்காவுக்கு செல்ல முடியும். கண்ணாடி பாலம் அமையும் பட்சத்தில் வெறும் 750 மீட்டர் தூரத்திலேயே எதிர்பக்கத்திற்கு சென்று விடலாம்.
மக்களே, கன்னியாகுமரிக்கும் போங்க, கண்ணாடி பாலத்திலும் நடங்க.. ஒரு வருஷம் பொறுத்திருந்தா சென்னையிலேயே கண்ணாடி பாலத்திலும் நடப்பீங்கனு நம்புவோம்..