சீனாவுடன் ஒரு பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் மாலத்தீவு இந்தியாவிற்கு பெரிய தர்மசங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், மாலத்தீவு கடல் பகுதியில் உளவுத்துறை தகவல்களை சேகரிக்க சீனாவுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்த ஒப்பந்தம் மாலத்தீவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்திற்கும், சீனாவின் தென் சீனக் கடல் கடல்சார் நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தானது. சீனாவிற்கும், மாலத்தீவிற்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இந்தியப் பெருங்கடல் பகுதியில், குறிப்பாக லட்சத்தீவில் அமைந்துள்ள இந்திய ராணுவ தளத்திற்கு இந்தியாவின் பதற்றம் அதிகரிக்கக்கூடும்.
மாலத்தீவும், இந்தியாவுடன் இதேபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. ஆனால் 2023-ல் முகமது முய்சு ஜனாதிபதியானவுடன் அதை ரத்து செய்தார். அந்த நேரத்தில், இதேபோன்ற ஒப்பந்தம் குறித்து அவர் நிறைய ஆலோசனைகளை வழங்கியிருந்தார். அதை அவர் இப்போது மறந்துவிட்டிருக்கலாம்.

இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் காரணமாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர்,"இந்த ஒப்பந்தத்தின் கீழ், சீனா கடலில் உபகரணங்களை நிறுவுகிறது. இந்த உபகரணங்கள் நிறைய தகவல்களை சேகரிக்க முடியும். அதற்கு ஈடாக, அவர்கள் மாலத்தீவு அரசிற்கு சில பயிற்சிகளை வழங்குவார்கள்" என்று கூறினார்.
இதையும் படிங்க: இந்தியா - சீனாவுக்கு எதிராக அடித்துச் சொல்லி டிரம்ப் சத்தியப்பிரமாணம்… வரப்போகும் பேரிடி..!
தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாக மாலத்தீவு அரசு அறிவித்தது. இதில் சுற்றுலா, சுற்றுச்சூழல் அமைச்சர் தோரிக் இப்ராஹிம் கையெழுத்திட்டார். ஆனால், மேற்கொண்டு விவரங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை.
தென் சீனக் கடல் கடல்சார் நிறுவனத்துடனான ஒப்பந்தம், காற்று, கடல் நீரோட்டங்கள், ஒலி, உப்புத்தன்மை மற்றும் வெப்பநிலையை அளவிட சீனாவை அனுமதிக்கிறது என்று மூன்று ஆதாரங்களும் தெரிவித்தன. இந்தக் கருவிகள் கடலின் அடிப்பகுதியிலும், கடலின் மேற்பரப்பிலும் நிறுவப்படும். இந்த ஒப்பந்தத்தின் கீழ் மிகவும் கவலையளிக்கும் விஷயம் சோனார் சிக்னல்களைப் பதிவுசெய்து கண்காணிப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது.

இந்த ஒப்பந்தம் சீனா உயிருள்ள, உயிரற்ற பொருட்களின் ஒலிகளைக் கண்காணிக்கவும் அனுமதிக்கிறது. இந்தக் கருவிகள் கடல் மேற்பரப்பில் உள்ள கப்பல்களையும், கடலுக்கு அடியில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல்களையும் கண்டறியும். இதன் மூலம் விமானத்தையும் அதன் உயரத்தையும் கண்டறிய முடியும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் பெறப்பட்ட எந்தவொரு தரவையும் மாலத்தீவு, சீனா இடையேயான பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் மட்டுமே மூன்றாம் தரப்பினருக்கு மாற்ற முடியும். இதன் பொருள், இந்த ஒப்பந்தத்தின் கீழ் மாலத்தீவுகளால் சேகரிக்கப்பட்ட தகவல்களை சீனாவின் ஒப்புதல் இல்லாமல் மூன்றாம் தரப்பினருக்கு அனுப்ப முடியாது. தென் சீனக் கடல் கடல்சார் நிறுவனம் சீனாவின் மிகப்பெரிய கடல் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்று. ஆராய்ச்சி கப்பல்களை வடிவமைத்து கட்டமைத்துள்ளது.
மாலத்தீவுகள் பாதுகாப்பு நிபுணர் ஒருவர், ''சீனாவின் நோக்கம் அதன் நட்பு நாடுகளின் உதவியுடன் அண்டைநாட்டு எதிரிகளை உளவு பார்ப்பதாக இருக்கலாம். சீனா மீதான மிகப்பெரிய குற்றச்சாட்டுகளில் ஒன்று, அது மற்ற நாடுகளை உளவு பார்க்க அதன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது என்பது. மாலத்தீவில் சீனாவிற்கு இந்த வாய்ப்பை வழங்குவது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும்" என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு நிபுணர் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தின் விளைவாக இந்தியா மற்றும் பிற அண்டை நாடுகளுடன் மாலத்தீவு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். "அண்டை நாட்டின் அரசியலில் இது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும். இதை மாலத்தீவுகள் செய்ய வேண்டியதும் இல்லை.இதில் நாம் ஈடுபட வேண்டிய அவசியமும் இல்லை" என்று நிபுணர் கூறினார். கடந்த ஆண்டு தொடக்கத்தில், சீனாவின் மிகவும் சக்திவாய்ந்த ஆராய்ச்சிக் கப்பல் மாலத்தீவு பகுதியிலும் அதைச் சுற்றியும் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் இயங்கியது. அந்தக் கப்பல் திலாஃபுஷி தொழில்துறை தீவுக்கு அருகிலும் நங்கூரமிட்டது.
சீனாவுடன் ஒரு கேள்விக்குரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும், மாலத்தீவின் அருகில் உள்ள நீர்நிலைகள் பற்றிய தகவல்களை மற்ற நாடுகள் சேகரிக்க அனுமதிப்பது குறித்து ஜனாதிபதி முகமது முய்சு முன்னதாக கவலை தெரிவித்திருந்தார். டிசம்பர் 16, 2023 அன்று அவர் கூறினார், "மாலத்தீவின் அண்டை நீர்நிலைகளை வேறொரு நாடு ஆராய்ந்து வரைபடமாக்குவது மாலத்தீவு மக்களின் நலனுக்காக அல்ல.
மாலத்தீவு பெருங்கடலின் வளங்களை ஆராய்வது மாலத்தீவு மக்களின் உரிமை. அது நமது தேசிய பொறுப்பு. இந்தக் காரணத்திற்காக, இந்தியாவுடனான ஹைட்ரோகிராஃபி ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியானபோது, அந்த ஒப்பந்தத்தைத் தொடர விரும்பவில்லை என்று இந்திய அரசிடம் தெரிவித்தோம்."
அண்டை நாடுகளுடனான போட்டிகளுக்கு நடுவில் சிக்கிக் கொள்வதைத் தவிர்ப்பதே எனது கொள்கையாக இருக்கும். இந்தியா-சீனா போட்டி போன்ற உலகளாவிய அதிகாரப் போராட்டத்தில் ஈடுபட மாலத்தீவுகள் மிகச் சிறிய நாடாக உள்ளது. எங்கள் அரசாங்கம் இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடாது" என்று அவர் அக்டோபர் 2023-ல் கூறியடஹி இப்போது, மறந்து விட்டார் போல.
இதையும் படிங்க: இந்தியா- அமெரிக்கா நட்பால் வயிற்றெரிச்சல்... சீனாவின் இறுமாப்பில் விஷத்தை கக்கும் பாகிஸ்தான்..!