மும்பையின் பரபரப்பு மிக்க பகுதிகளில் முக்கியமானது பாந்த்ரா. திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் என வசதி மிக்கவர்கள் அதிகம் குடியிருக்கும் பகுதி இது. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பிரபல இந்தி நடிகர் சையப் அலிகான் தனது மனைவி கரீனா கபூர் மகன் தைமூர் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் அவரது வீட்டிற்குள் திருடன் ஒருவன் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளான். சத்தம் கேட்டு விழித்து வந்த சையப் அலிகான், திருடனை பிடிக்க முயல அவன் தன் கையில் வைத்திருந்த கத்தியால் சையப் அலிகானை குத்தி உள்ளான். அவர் வலியால் கத்த பயந்துபோன திருடன் தப்பித்து ஓடியுள்ளான்.

இந்த சம்பவம் குறித்து பாந்த்ரா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சையப் போன்ற மிகப்பிரபலங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்குள் திருடனால் எப்படி நுழைய முடிந்தது? பாதுகாப்பு மிக்க வாசற்கதவுகளை தாண்டி எப்படி உள்ளே வர முடிந்தது? போன்ற கேள்விகளை எழுப்பி போலீசார் விசாரித்து வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் உதவியுடன் திருடனின் உருவத்தை கண்டறிந்து பழைய குற்றவாளியா? தவறுதலாக உள்ளே நுழைந்து தாக்க முயன்றானா? போன்ற கோணங்களில் விசாரணை சூடுபிடித்துள்ளதாம். கொள்ளை முயற்சியின் போது இந்த தாக்குதல் நடந்ததா? கொலை முயற்சியா என்பது போன்றும் விசாரணை நடந்து வருகிறது. மும்பை குற்றப்பிரிவு காவல்துறையும், பாந்த்ரா போலீசாரும் இணைந்து இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கும்ப மேளாவுக்கு வந்த ‘ஐஐடி பாபா’! மும்பையில் ஏரோ ஸ்பேஸ் படித்து துறவியானவரின் கதை...

முன்னதாக சையப் அலிகான் மும்பையின் பிரபல லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சையப் அலிகான் உடலில் 6 இடங்களில் கத்திக்குத்து உள்ளதாம். அதுவும் முதுகுத் தண்டு அருகில் உள்ள காயம் மிகவும் ஆழமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நரம்பியல் நிபுணர் நிதின் டாங்கே, அழகு சிகிச்சை நிபுணர் லீனா ஜெயின், மயக்க மருந்து நிபுணர் நிஷா காந்தி ஆகியோர் சையப் அலிகானுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனராம். மயக்கம் தெளிந்த பின்னரே சையப் அலிகானின் உடல்நிலை குறித்து கூற முடியும் லீலாவதி மருத்துவமனையின் தலைமை உயர் அதிகாரி நிரஜ் உத்தமணி தெரிவித்துள்ளார்.
நடிகர் சல்மான் கானுக்கு மட்டும் தான் அடிக்கடி கொலைமிரட்டல் இ-மெயில்கள் வந்து கொண்டிருக்கும். எனவே அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த சர்ச்சையிலும் இதுவரை சிக்கிக் கொள்ளாத சையப் அலிகானுக்கு நிகழ்ந்துள்ள இந்த கத்திக்குத்து பாலிவுட் நடிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படிங்க: ரூ.12 லட்சம் கோடி காலி! பாதாளத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் வீழ்ச்சிக்கு 5 காரணங்கள் என்ன?