கூலி படப்பிடிப்பு நிறைவு... அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி திரைப்படத்தின் படபிடிப்புகள் நிறைவு பெற்றுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
அரசியல் சித்து விளையாட்டுக்களை முடித்த பின்னர் முழு மூச்சாக சினிமாவில் பிஸியாகி விட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 2023-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் வெளியாகி ரஜினி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது. தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியின் ப்ளாக் பஸ்டர் படமாக அது அமைந்தது. கடந்த ஆண்டு த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான வேட்டையன் படமும் வசூல் ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.
மறுபுறம் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து மாபெரும் வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அவரும் ரஜினியும் எப்போது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கூலி திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது.
இதையும் படிங்க: சேட்டன்கள் எப்படிதான் இப்படி படம் எடுக்குறாங்களோ.. இணையத்தைக் கலக்கும் ஆசிப் அலியின் ரேகாசித்ரம்..!
அதற்கு ஏற்றார்போல் ஒவ்வொரு மொழியில் இருந்தும் ஒவ்வொரு சூப்பர்ஸ்டார்கள் ரஜினியுடன் நடிக்கிறார்கள் என்ற தகவல்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. தெலுங்கில் இருந்து நாகர்ஜுனா, கன்னடத்தில் இருந்து உபேந்திரா, மலையாளத்தில் இருந்து சௌபின் ஷாகிர் என பட்டையக் கிளப்பும் நடிகர்களின் பட்டியல் வெளியானது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல் இந்தி சூப்பர் ஸ்டார் அமீர்கானும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்ற தகவல் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது, கூலி மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரிக்க வைத்தது.
கூடவே 38 வருடங்களுக்குப் பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் சத்யராஜ் இணைந்து நடிக்கிறார் என்ற செய்தியும் இரட்டிப்பு விருந்தாக அமைந்துள்ளது. இவர்கள் மட்டுமல்லாது ஸ்ருதிஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்க பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். ரஜினி என்றாலே இப்போதைய காலகட்டத்தில் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் தானே.. ஆம், அவர்தான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் கூலி படத்தின் ஷுட்டிங் நிறைவு பெற்றுவிட்டதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளது. இதன்மூலம் வருகிற ஆகஸ்ட் மாதம் அல்லது தீபாவளியன்று கூலி திரைப்படம் வெளியாக வாய்ப்பு உள்ளது. இதனிடையே 120 கோடி ரூபாய் கொடுத்து கூலி படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கி உள்ளதாம். இந்த தேதிவரை தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்றால் அது ரஜினிதான் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.
கூலி திரைப்படத்தை முடித்துக் கொடுத்து விட்டு ஜெயிலர்-2 படத்தில் பிஸியாகி விட்டாராம் சூப்பர்ஸ்டார். கூலி படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தில் ரஜினியின் அலப்பறையைக் காண அவரது ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
இதையும் படிங்க: தண்ணீர் கேட்ட சிறுவன்.. 10 லட்சம் செலவு செய்த ராகவா லாரன்ஸ்... ஊரே கையெடுத்துக் கும்பிட வைத்த ஒரு நொடி செயல்...!