திருமணங்கள் என்ற அமைப்பே கூடாது என்கிறாரா?... கிருத்திகா உதயநிதி சொல்ல வருவது என்ன?...
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், தமிழ் திரைப்பட இயக்குநருமான கிருத்திகா உதயநிதி எழுதி இயக்கி பொங்கல் பண்டிகைக்காக வெளிவந்திருக்கும் படம் காதலிக்க நேரமில்லை.
ஜெயம் ரவி..., இல்ல இல்ல. அவர் பேரு மாத்திட்டாருல ரவி மோகன், நித்யா மேனன் (மேனன் போடலாமா?..) யோகிபாபு, வினய், டி.ஜே.பானு ஆகியோர் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
காதலானால் ஏமாற்றப்பட்ட வெறுப்பில், திருமணம் செய்து கொள்ளாமல் ஆண் துணை தேவைப்படாமல் மருத்துவ உதவியுடன் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை ஒன்றை பெற்றுக் கொள்கிறார் நித்யா மேனன். திருமணம் செய்து கொள்ளாமல், குழந்தை பெற்றுக் கொள்ளாமல் வாழ்க்கையை ஜாலியாக வாழ வேண்டும் என்று நினைப்பில் இருக்கும் ஜெயம் ரவி. எதிர்பாராத விதமாக இருவரும் வாழ்க்கையில் இணைகிறார்கள் (ஏன், எப்படி என்று சொன்னால் கதையின் சுவாரஸ்யம் கெட்டுப் போய்விடும் என்பதால் அதனை விட்டுவிடுவோம்...) என்பதாக படம் முடிகிறது.
மேல்தட்டு வர்க்கத்தின் வாழ்க்கைச் சூழலில் நடப்பதாக கதை பின்னப்பட்டுள்ளது. உயர்ரக கார், பிராண்டட் ஆடைகள், பயன்படுத்துபவை எல்லாமே ஆடம்பர பொருட்கள் (நித்யா மேனன் பயன்படுத்தும் HAND BAG எல்லாமே குறைந்தபட்சம் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை இருக்கும்)..அழகான தோற்றம் கொண்ட ஜெயம் ரவி, நித்யா மேனனின் காதல் காட்சிகள் க்யூட்டாக இருக்கின்றது.
இதையும் படிங்க: BLACK WARRANT - திகார் ஜெயிலின் கதை.... இணையத்தைக் கலக்கும் புதிய தொடர்....
தமிழ் சமூகம் இப்போதுதான் காதலை பொதுவெளியில் பேசவும், விவாதிக்கவும் தொடங்கி இருக்கிறது. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் நடைமுறைக்கு வந்துவிட்ட ஆண் - ஆண், பெண் - பெண் திருமண பந்தங்களை மிக எளிதாக சமூகத்தில் நடப்பதாக காட்டுகிறார் கிருத்திகா. அவர் வாழும் சமூகத்தில் அவ்வாறு இருக்கிறதா? பொது சமூகத்தில் அப்படி பழகிவிட்டதா? என்ற கேள்விகள் எழாமல் இல்லை. அதேபோன்ற விந்தணுவை சேமித்து எதிர்காலத்தில் பயன்படுத்திக் கொள்ளும் முறை குறித்தும் தீவிரமாக பேசுகிறார்.
கல்வி, சுகாதாரம், உணவு, உறைவிடம் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் முழுமையாக நிறைவேறாத சமூகத்தில் காதல் - காமம் ஆகியவற்றை மட்டுமே பேசுபொருளாக கொண்டு விட்டாரோ இயக்குநர் என்ற கேள்வி எழுகிறது.
அதுமட்டுமல்லாமல் திருமணம் என்பது வெறும் சடங்கு... அதனை செய்து கொள்ளாமல் கூட தம்பதிகளாக வாழலாம்.. குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.. இதுவெல்லாம் பெரிய விஷயம் என்பதாக கதையை நிறைவு செய்கிறார் கிருத்திகா உதயநிதி.
உலக அளவில் இந்திய இனம் தனித்துத் தெரிவிதற்கு குடும்பம் என்ற கட்டமைப்பு தான் பெரிதும் உதவி செய்கிறது. அதில் உள்ள போதாமைகளை பேசலாம், பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்... அதைவிடுத்து திருமணம் என்ற பந்தமே வேண்டாம், ஆண் - பெண் தங்களுக்கு பிடித்த இணையுடன் சேர்ந்து வாழலாம், ஏன் என்று யாருமே கேள்வி கேட்கத் தேவையில்லை என்ற இடத்தை நோக்கி கிருத்திகா உதயநிதி நகர்வதாக தோன்றுகிறது.
திரைப்படமாக பார்த்தால் இனிமையான பாடல்கள், கண்களுக்கு குளிர்ச்சியான காட்சிகள் என படம் நன்றாகத் தான் இருக்கிறது. அதில் பேசுகின்ற பொருள் காலத்தை தாண்டியதாக இருக்கிறதோ எனத் தோன்றுகிறது. சுதந்திரம் என்பது தனித்து நிற்பதல்ல, சேர்ந்து வெற்றி பெறுவது என்பதாகும். காதலிக்க நேரமில்லை படத்தில் கிருத்திகா கூறும் சுதந்திரம் எது என்பதை நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்..
இதையும் படிங்க: 'மதகஜராஜா'வுக்கு வரவேற்பு.. இது ஓர் அதிசயம்.. திக்குமுக்காடும் நடிகர் விஷால்!