மீண்டும் இணையும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி.. வடசென்னை - 2ஆக இருக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பு...
தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக தற்போதைய காலகட்டத்தில் இருப்பவர் வெற்றிமாறன்...
2007-ம் ஆண்டு பொல்லாதவன் படம் மூலம் கோலிவுட்டில் தடம் பதித்த வெற்றிமாறன், இன்றைய தேதியில் ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்க்கும் மோஸ்ட் வான்ட்டட் இயக்குநராக மிளிர்கிறார். அவரது படம் எப்போது வெளியாகும் என ரசிகர்களும், அவரது படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்து விட மாட்டோமா என நடிகர்களும் எதிர்பார்க்கும் அளவுக்கு கலைநேர்த்தியும், ஒழுங்கும் நிறைந்தவை வெற்றிமாறன் படங்கள்.
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக வாழ்க்கைத் தொடங்கிய அவர், நடிகர் தனுஷ் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். தனது இருசக்கர வாகனத்தை தொலைக்க நேரிடும் ஒரு இளைஞன் எதிர்கொள்ளும் இன்னல்களை அவ்வளவு சுவாரஸ்மாக கூறிய படம் தான் அவரது முதல் படமான பொல்லாதவன். அப்போது ஆரம்பித்தது தனுஷ் - வெற்றிமாறன் வெற்றிக்கூட்டணி.
சேவல் சண்டையை மையமாக வைத்து மதுரை பின்னணியில் 2011-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கிய படம் ஆடுகளம். குருவுக்கும் - சிஷ்யனுக்கும் இடையிலான மெல்லிய போட்டி மனப்பான்மையை, மனித மனத்தின் விகாரங்களை வெளிப்படுத்திய பாங்கு என ஆடுகளம் அற்புதமான திரை அனுபவமாக இருந்தது. அந்த ஆண்டின் சிறந்த இயக்குநருக்கான விருதை ஆடுகளம் படத்திற்காக முதல்முறையாக வென்றார் வெற்றிமாறன்.
இதையும் படிங்க: சந்தானத்தை மீண்டும் காமெடியனா பார்க்கணும்.. சுந்தர்.சிக்கு வந்த ஆசை!
காவல்துறையில் நிகழும் அத்துமீறல்களை தோலுரித்துக் காட்டிய படம் விசாரணை. சந்திரகுமார் எழுதிய லாக்அப் எனும் சிறுகதையை மையமாக கொண்டு அதனை மேம்படுத்தி வெற்றிமாறன் எடுத்த விதம் தமிழக மக்களிடையே என்கவுண்டர் குறித்த விவாதங்களை ஆக்கபூர்வமாக முன்னெடுத்தது. தமிழில் சிறந்த படமாக தேசிய விருதை வென்றது விசாரணை.
தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட படங்களுள் ஒன்றாக வடசென்னை படத்தைக் குறிப்பிடலாம். அரசின் திட்டங்களால் இடப்பெயர்வுக்கு ஆளாகும் அடித்தட்டு மக்களின் வாழ்வியல் எவ்வாறெல்லாம் சிதைகிறது என்பதை ரவுடிகளைக் கொண்டு கதையை நகர்த்திக் கொண்டு போன விதம் பேரனுபவமாக இருந்தது. 3-வது முறையாக தனுஷ் - வெற்றிமாறன் இப்படத்தில் இணைந்தனர். ஒவ்வொரு காட்சியும், பாடலும் தனித்துவம் மிக்கதாக இருந்த இப்படத்தின் 2-ம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
2 மகன்களுக்கு தந்தையாக தனுசை நடிக்க வைத்து அண்டர்ப்ளே என்று சொல்வார்களே அவ்வாறாக தனுசை திரையில் காட்டிய விதத்தில் அசுரன் படம் மண்வாசனை நிரம்பிய ஒன்றாக வெளிவந்தது. இப்படத்திற்காக 2-வது முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார் தனுஷ். அடுத்து பாவ கதைகள் என்ற தொடரில் ஒரு இரவு என்றொரு குறும்படத்தை இயக்கி இருந்தார் வெற்றிமாறன்.
பிறகு நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட சூரியை கதையின் நாயகனாக உருமாற்றி விடுதலை என்றொரு அரசியல் படத்தை இயக்கினார். அரசு, அதிகாரிகள், அதிகாரம், அடித்தட்டு மக்கள் என்ற நான்குபுள்ளியில் வாழ்க்கை எவ்வாறு அலைக்கழிக்கப்படுகிறது என்பதற்கு விடுதலை ஆகச்சிறந்த உதாரணம். அதன் 2-வது பாகத்தில் வாத்தியார் என்றொரு வாழ்நாள் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார் விஜய் சேதுபதி.
விடுதலை - 2 வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்த நிலையில், அதன் தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தங்களது அடுத்த படத்தில் தனுஷ் - வெற்றிமாறன் இணைய உள்ளனர் என்பது தான் அந்த தித்திப்பு தகவல். அது வடசென்னை-2 ஆக இருக்குமா? அல்லது முற்றிலும் புதிய படமாக இருக்குமா என்பது புதிர். எப்படி இருந்தாலும் தலைசிறந்த இரண்டு கலைஞர்கள் மீண்டும் ஒன்றிணைவது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தானே...
இதையும் படிங்க: 'எமர்ஜென்சி' படத்தில், இந்திரா காந்தி வேடத்தில் நடித்த கங்கனா ரனாவத்; பிரியங்காவை சந்தித்து, படம் பார்க்க, அழைப்பு விடுத்தார்