தேர்தலுக்கான ஆயுதமாகத்தான் மொழிப்போர் விஷயத்தை திமுக கையில் எடுத்துள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
கோவையில் அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டன. ஆனால், முதல்வருக்கு தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரிவதில்லை. பாலியல் குற்றங்களை முதல்வரும், காவல்துறையும் வேடிக்கைதான் பார்க்கிறார்கள். பெண்களுக்குப் பாதுகாப்பிலாத இந்த ஆட்சியைப் பார்த்து அவமானமாக உள்ளது.
அதேபோல தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கமும் அதிகரித்து விட்டது. நாங்கள் குழந்தைப் பருவத்தில் இருக்கும் போது பள்ளிக்கு வெளியில் கம்மர்கட்டு விற்பார்கள், ஆனால், தற்போது கஞ்சாதான் விற்பனை செய்யப்படுகிறது.

தருமபுரி மாவட்ட திமுக செயலாளர் பகிரங்கமாக கலெக்டரையும், காவல்துறை அதிகாரி குறித்தும் பேசியிருக்கிறார். இது முதல்வருக்கு தெரிந்ததுதான். ஆனாலும் நடவடிக்கை இல்லை. தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அனைத்து கட்சியினரும் எதிர்பார்க்கிறார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவினரைச் சேர்க்க வேண்டும். சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருந்தும் முதல்வர் செயல்படாதது கோழைத்தனமானது.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக முதல்வர் கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாமக கலந்து கொள்ளும். இந்த விஷயத்தில் மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். கோவையில் மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா தொகுதி மறு சீரமைப்பு குறித்து தெளிவாகப் பேசவில்லை. பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் தொகை உயர்ந்துள்ளது. எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் மறுசீரமைப்பு சீராக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: அதிரடியாக மாறிய கூட்டணி... உறுதியானது அதிமுக+ பாமக+ தவெக+ நாதக இணைப்பு… திகிலில் ஸ்டாலின்..!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கல்வி நிதி வழங்க மாட்டோம் எனக் கூறுவது சரியல்ல. புதிய கல்விக் கொள்கையை ஏற்பதும், ஏற்காததும் மாநில அரசின் உரிமை. இந்தியை கற்றுக் கொள்ளலாம். ஆனால், மத்திய அரசு திணிக்கக் கூடாது. அதே நேரத்தில் தமிழுக்கு திமுக என்ன செய்தது? தமிழ் படிக்காமல் பட்டம் பெறலாம் என்கிற நிலைதான் தமிழ்நாட்டில் உள்ளது. இது மிகவும் வெட்கக்கேடானது. தேர்தலுக்கான ஆயுதமாகத்தான் மொழிப்போர் விஷயத்தை திமுக கையில் எடுத்துள்ளது. பாமக-வின் கொள்கை என்பது ஒரு மொழிக் கொள்கைதான்" என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கலெக்டர், எஸ்.பி.யை மிரட்டுவது தான் திராவிட மாடலா? முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பும் அன்புமணி..!