கத்தியால் குத்தப்பட்ட பிறகு தனது தந்தை சைஃப் அலிகானை அவரது மூத்த மகன் இப்ராஹிம் அவசர அவசரமாக ஆட்டோவில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து:
இன்று அதிகாலை 3 மணி அளவில் மும்பை பாந்த்ராவில் உள்ள சைஃப் அலிகானின் வீட்டிற்குள் திருடன் நுழைந்துள்ளான். வீட்டில் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்த சைஃப், வெளியே வந்து திருடனைப் பிடிக்க முயன்றுள்ளார். அப்போது திருடன் சைஃப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 6 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட சைஃப் அலிகான், அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது கண் விழித்துள்ளார். அறுவை சிகிச்சை முடிந்ததாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் குழுவும் உறுதி செய்துள்ளது.
இதையும் படிங்க: சைஃப் அலிகான் உடல் நிலை எப்படியுள்ளது? - மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

இதனிடையே, திருடனால் கத்தியால் குத்தப்பட்ட தனது தந்தையை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க அவரது மூத்த மகன் இப்ராஹிம் ஆட்டோவில் அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஆட்டோவில் ஹாஸ்பிட்டலுக்கு சென்ற சைஃப் அலிகான்:
திருடன் கத்தியால் குத்தியதில் சைஃப் அலிகானின் முதுகுத் தண்டிற்கு அருகே 2 மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் ரத்தம் அதிக அளவில் வெளியேறியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த சைஃப் அலிகானின் மூத்த மகனான இப்ராஹிம், அப்பாவின் நிலையைப் பார்த்து ஆடிப்போயுள்ளார்.

அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால் அந்த நேரத்தில் வீட்டில் இருந்த ஒரு கார் கூட தயாராக இல்லை என்பதை பார்த்த அவர், சற்றும் யோசிக்காமல் உடனடியாக தனது தந்தையை ஒரு ஆட்டோவில் ஏற்றியுள்ளார். அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சைஃப் அலிகானை அனுமதித்திருக்கிறார். இச்சம்பவம் பாலிவுட் திரையுலகில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சைஃப் அலிகானிடம் இல்லாத காரா?
பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர தம்பதியாக சைஃப் அலிகான், கரீனா கபூர் தம்பதி வலம் வருகின்றனர். கரீனா கபூர் பாலிவுட் படங்களிலும், சைஃப் அலிகான் பாலிவுட்டைக் கடந்து தென்னிந்திய சினிமாக்களிலும் பிசியாக நடித்து வருகின்றனர். கார் பிரியரான சைஃப் அலிகானிடம் இல்லாத ஹைஹெண்ட் கார்களே கிடையாது எனலாம். அந்த அளவிற்கு ஃபோர்டு மஸ்டாங் முதல் ஹவுடி வரை அத்தனை பிராண்ட் கார்களையும் வைத்துள்ளார்.

அமெரிக்காவிலிருந்து புதிய ஃபோர்டு மஸ்டாங்கை இறக்குமதி செய்த முதல் பிரபலங்களில் இவரும் ஒருவர். ரேஞ்ச் ரோவர் வோக், மெர்சிடிஸ் எஸ் கிளாஸ், ஆடி ஆர்8, லேண்ட் ரோவர் டிஃபென்டர், ஃபோர்டு மஸ்டாங் GT என அனைத்து வகையான விலையுயர்ந்த சொகுசு கார்களையும் வைத்துள்ளார். ஆனால் அவசரத்திற்கு உடனடியாக எதையும் எடுக்க முடியாமல், ஆட்டோவின் உதவியால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டது பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: பிரபல நடிகருக்கு 6 இடங்களில் கத்திக்குத்து …இந்தியா முழுவதும் அதிர்ச்சி..! இன்று அதிகாலை 3 மணிக்கு நடந்த படுபயங்கரச் சம்பவம்…!