தேசிய கல்வி கொள்கையின் ஓர் அங்கமான பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையாததால், கல்வி நிதி வழங்க முடியாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான கூறியது தமிழகத்தில் சர்ச்சையானாது. இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் பேசிய தர்மேந்திர பிரதான், “நாங்கள் அனைவருக்காகவும் பாடுபடுகிறோம்.இந்த முறையில் பாகுபாடு காட்டியதாக அரசை குற்றம் சாட்ட முடியாது. திமுக எம்.பி.க்கள் ஜனநாயகத்துக்கு விரோதமாக, நாகரிகமற்ற முறையில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். தமிழக முதல்வர் மாணவர்கள் விஷயத்தில் அரசியல் செய்கிறார் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்'' என தர்மேந்திர பிரதான் கூறியபோது, எதிர்க்கட்சிகள் அவையில் கடும் கோஷங்களை எழுப்பின.

பின்னர் ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் அவை கூடியபோது பேசிய தர்மேந்திர பிரதான், ''திமுகவினர் நேர்மையற்றவர்கள். அவர்கள் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது உறுதியாக இல்லை. அவர்கள் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள். மொழித் தடைகளை உருவாக்குவது மட்டுமே அவர்களின் வேலை. அவர்கள் அரசியல் விளையாடுகிறார்கள்.அவர்கள் ஜனநாயக விரோதமானவர்கள், நாகரிகமற்றவர்கள்.
நிதியாண்டு முடிவடைய இன்னும் 20 நாட்கள் உள்ளன. தமிழகத்துடன் நாங்கள் நடத்தி வரும் விவாதங்களின்படி, இந்த விஷயத்தை திறந்த மனதுடன் பரிசீலிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.
இதையும் படிங்க: இந்தி எதிர்ப்பு போராட்டம்.. வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு சென்றால்... எச்சரிக்கும் தொழில் அமைப்பு!

இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசு தயாராக இருந்த ஒரு காலம் இருந்தது. எம்.பிக்கள் வந்து எங்களைச் சந்தித்தனர். தமிழக கல்வி அமைச்சருடன் எங்களிடம் வந்தனர். இப்போது இந்த விஷயத்தில் ஒரு தென்னிந்தியாவில் கர்நாடகாவை உதாரணமாகக் காட்ட விரும்புகிறேன். அவர்கள் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்” என்று தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். தர்மேந்திர பிரதான் கருத்துக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் தர்மேந்திர பிரதானை கண்டித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இன்று நாடாளுமன்றத்தில், தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை அநாகரீகமாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் அவர்கள் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. வாக்களித்து தேர்ந்தெடுத்த ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களை குறித்துதான் இவ்வகையில் பேசி உள்ளார்.
நாடாளுமன்ற மாண்பை பற்றி சிறிதும் தெரியாதவர்கள் பா.ஜ.க.வினர், சிறுபான்மையின நாடாளுமன்ற உறுப்பினரை அவர் சார்ந்த மதம் குறித்து பா.ஜ.க. உறுப்பினர் அவதூறாக பேசும்போது, பா.ஜ.க.வின் மூத்த மந்திரிகள் நாடாளுமன்றத்தில் அதை ரசித்து, சிரித்து கொண்டிருந்தார்கள், இவர்கள்தான் ஜனநாயகம் குறித்து தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து பேசுகின்றனர்.
பா.ஜ.க.வினர் கொண்டுவரும் அனைத்து மக்கள் விரோத திட்டங்களை, தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்பதால் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வாய்க்கு வந்தததை பேசுகின்றனர். இவற்றையெல்லாம் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள், உரிய நேரத்தில் தகுந்த பதிலடியை கொடுப்பார்கள்” என்று செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: லெப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல திரும்புற கதையெல்லாம் வேண்டாம் அன்ணாமலை.. பங்கம் செய்த காங்கிரஸ் எம்.பி.!