காலை வாரிய 'கேம் சேஞ்சர்'.. 'இந்தியன் 3'யை நம்பும் ஷங்கர்.. புதிய அப்டேட்!
'கேம் சேஞ்சர்' படம் வெளியாகிவிட்ட நிலையில், 'இந்தியன் 3' பற்றி இயக்குநர் ஷங்கர் அப்டேட் கொடுத்துள்ளார்.
'இந்தியன் 2' படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கிய 'கேம் சேஞ்சர்' படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. மேலும் வசூலும் இரண்டாம் நாளிலிருந்து டல்லடிக்க ஆரம்பித்துவிட்டது. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருக்கு சரக்குத் தீர்ந்துவிட்டது என்று சோஷியல் மீடியாவில் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், 'இந்தியன் 3' படத்தை ஷங்கர் மிகவும் நம்பியுள்ளார். 'இந்தியன் 2' படம் தோல்வியடைந்தாலும், படத்தின் இறுதியில் காட்டப்பட்ட 'பீரியட்' கதைக் களம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்னவோ உண்மை.
இந்நிலையில், 'இந்தியன் 3' படம் இன்னும் 6 மாதத்தில் வெளியாகும் என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். " 'கேம் சேஞ்சர்’ படம் வெளியாகிவிட்டதால் ‘இந்தியன் 3’யை தொடங்கிவிட வேண்டியதுதான். அப்படத்தின் பணிகளை இப்போது தொடங்கினால் 6 மாதங்களில் திரைக்கு கொண்டு வந்துவிடலாம். ஏனெனில், அப்படத்தில் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் உள்ளன." என்று ஷங்கர் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் 'இந்தியன் 3' பற்றி நம்பிக்கையுடன் இருந்தாலும், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும் ஷங்கருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 'இந்தியன் 2' நஷ்டத்தை உண்டாக்கியதால் மேற்கொண்டு காட்சிகள் தேவையில்லை என்பதில் லைகா உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினையைப் பேசி தீர்த்த பிறகுதான் ‘இந்தியன் 3’ படப் பணிகள் தொடங்கும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியே லைகா ஒத்துக்கொண்டாலும், தற்போது கமல் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் வந்த பிறகுதான் எதையும் தொடங்க முடியும். எனவே, 'இந்தியன் 3' படப் பணிகள் மேலும் தாமதமாகும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சைஃப் அலி கானை கத்தியால் குத்தியவர் அடையாளம் காணப்பட்டார்… சிசிடிவி வீடியோவில் சிக்கிய பரபர காட்சிகள்..!
இதையும் படிங்க: குடும்பஸ்தனாக மாறிய மணிகண்டன்... அட்வைஸ் தந்த ஜி.வி.பிரகாஷ்....