ஆடு, ஓநாய் குறித்து இபிஎஸ்-யிடம் கேளுங்கள்... செங்கோட்டையன் பாய்ச்சல்...!
ஆடு, ஓநாய் பற்றி எடப்பாடி பழனிசாமியிடமே கேளுங்கள் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என கோவத்துடன் பேசினார் செங்கோட்டையன்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா, அதிமுக தொண்டர்களால் மாநிலமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செங்கோட்டையன் கலந்து கொண்டார்.
ஜெயலலிதாவுன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த செங்கோட்டையன், கூடியிருந்த அதிமுக தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அப்போது பேசிய அவர், வழக்கமாக ஜெயலலிதா பிறந்தநாளின் போது சென்னை செல்வது வழக்கம் என்றும் இம்முறை அந்தந்த பகுதி மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக கொண்டாடுகிறோம் என்றார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்த இபிஎஸ்.. இந்த முறையும் செங்கோட்டையன் மிஸ்ஸிங்...!
அப்போது அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட சில வரிகள் யாரைக் குறிக்கிறது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த ஆடு, ஓநாய் பற்றி அவரிடமே கேளுங்கள் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என கோவத்துடன் பேசினார் செங்கோட்டையன்.
"பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் கழகத்தைக் காட்டிக் கொடுக்க தயாராக இருந்த திரைமறைவு பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? களைகளும், பயிர்களும் ஒன்றுபட்டு வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா?....""
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட இந்த வரிகள் மறைமுகமாக செங்கோட்டையனை குறிப்பதாக பலரும் பேசினர். சமீபத்தில் இபிஎஸ்-க்கு எதிராக களமாடும் செங்கோட்டையனைத்தான் ஓநாய் என்றும், களை என்றும், துரோகி என்றும் குறிப்பிடுவதாக அரசியல் நோக்கர்கள் கூறினர்.
இதுபற்றிய கேள்விக்குத் தான் செங்கோட்டையன் கோபம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து கோபியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியிலும் செங்கோட்டையன் பங்கேற்றார். அங்கு பேசியபோது, 2026-ல் அதிமுக ஆட்சி மலரும் என்றும் அப்போது போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என்று கூறினார். தனது பேச்சின் போது எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்ட செங்கோட்டையன், கவனமாக இபிஎஸ் பெயரை தவிர்த்து விட்டார்.
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்காமலும், எடப்பாடி பழனிசாமியின் பெயரை உச்சரிக்காமலும் வலம் வரும் செங்கோட்டையனின் அரசியல் கணக்கு என்ன என்று உறைந்து போயுள்ளனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
இதையும் படிங்க: கூட்டணி இருக்கும்போது 'வேட்டு' அணி எதற்கு..? எடப்பாடியார் போட்ட சபதம்..!