ஓ... இது அது இல்ல...? 'SK' பட டைட்டில்களில் இப்படி ஒரு பின்னணியா..!
நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மதராசி படத்திற்கான update இன்று வெளிவந்ததை அடுத்து அவர் படங்களின் பெயர் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு..
வாழ்க்கையில் பல கஷ்டங்களையும் எதிர்ப்புகளையும் மீறி தனது திறமைகளை வெளிக்கொண்டு வந்தவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்து வந்தவர் என்று அநேகர் கூறினாலும், கலக்கப்போவது யார்..? என்ற நிகழ்ச்சியில் காமெடி செய்வதோடு பிற நடிகர்களின் குரல்களில் பேசி அசத்துவார். ஒரு அவார்டு நிகழ்ச்சியில் வைரமுத்துவையே அவரது குரலில் "நீங்கள் மட்டும் கள்ளிக்காட்டில் பிறக்காமல் கலிபோர்னியாவில் பிறந்திருந்தால், உங்களை தவிர்க்க முடியாமல் ஹாலிவுட்டிலும் வைத்திருப்பார்கள் ஆறு பாடல்கள்" என பேச, அதற்கு பாராட்டும் வகையில் "என்றைக்குமே அசலை விட நகல் தான் நன்றாக இருக்கும்" என்று கூறி இருப்பார்.
அப்படி இருந்த சிவகார்த்திகேயன் ஆயிரத்திற்கு நடிக்க ஆரம்பித்து இன்று லட்சங்களை தாண்டி கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசம் வைத்து உள்ளார். கொரோனாவில் பல இழப்புகளை பார்த்த மக்கள் கவலையுடன் இருக்கும் பொழுது அனைவரது முகத்திலும் மீண்டும் புன்னகை வரவைத்தது சிவகார்த்திகேயனின் "டாக்டர்" படம். அவ்வை சண்முகியை இந்தக் காலத்தில் மாடலாக காமித்தவர் சிவகார்த்திகேயன். இப்படி பட்ட உழைப்பாளி இன்று தனது 40வது பிறந்த நாளை கொண்டாடி வரும் சூழலில், அவருடைய மதராஸி படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது.
இதையும் படிங்க: பராசக்தி ஹீரோ... அப்ப சிவாஜி இப்ப சிவகார்த்திகேயன்! பிறந்தநாளுக்கு கிடைத்த டபுள் ட்ரீட்..!
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அனைத்து படங்களின் டைட்டிலையும் எடுத்து பார்த்தால் "டைட்டில் உன்னுடையது படம் என்னுடையது" என்பதை போல் உள்ளது. 1968ல் இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் நாகேஷ் நடிப்பில் வெளியான படம் "எதிர்நீச்சல்" அதுவே 2013ல் இயக்குநர் ஆர்.எஸ்.துரைசெந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் "எதிர்நீச்சல்".
அதேபோல் 1992ஆம் ஆண்டு இயக்குநர் கே.ராஜேஷ்வர் இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான திரைப்படம் "அமரன்", அதுவே 2024ம் வருடத்தில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான திரைப்படம் "அமரன்".
1986ல் இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் ரஜினி, அம்பிகா, ஜெயசங்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் "மாவீரன்". அதுவே 2023ல் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் வெளிவந்த படம் "மாவீரன்".
1985ல் இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கமல்ஹாசன், அம்பிகா, மாதவி, சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் "காக்கி சட்டை". அதுவே 2015ல் இயக்குநர் ஆர்.எஸ்.துரைசெந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீ திவ்யா நடிப்பில் வெளிவந்த படம் "காக்கி சட்டை".
1987ல் இயக்குநர் எஸ்.பி.முத்துக்குமரன் இயக்கத்தில் ரஜினிகாந்த், சரத் பாபு, அமலா மற்றும் பல்லவி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் "வேலைக்காரன்". அதுவே 2017ல் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வெளிவந்த படம் "வேலைக்காரன்".
1952ல் இயக்குநர் ஆர்.கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான திரைப்படம் "பராசக்தி". அதுவே தற்பொழுது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர தயாராக உள்ள திரைபடம் "பராசக்தி".
2006ல் இயக்குநர் அர்ஜுனின் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், வேதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் "மதராஸி". அதுவே தற்பொழுது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர தயாராக உள்ள திரைபடம் "மதராஸி".
அன்று நடிகர்களின் குரலை பகிர்ந்தவர்.. இன்று அவர்களின் பட டைட்டிலையும் பகிர்கிறார் என பேசுகின்றனர் நெட்டிசன்கள். பழைய மெட்டுக்கு அனிருத், பழைய பாட்டுக்கு லோகேஷ் கனகராஜ், வரிசையில் பழைய டைட்டில் என்றால் சிவகார்த்திகேயன் என்ற பெயர் வந்துள்ளது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் புதிய அவதாரம்..! பிறந்த நாள் ட்ரீட்டாக வந்தது "மதராஸி"