எடப்பாடியாரின் கூட்டணிப்பேச்சு… 'இது தேவை இல்லாத விஷயம்..' அலட்சியப்படுத்திய அண்ணாமலை..!
அடிப்படையான மக்கள் பிரச்சினை பற்றிப் பேசாமல் இன்னொரு இடத்திற்கு செல்கிறார் என்று தான் அர்த்தம். அதை எப்படி நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியும்?
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கூட்டணி தொடர்பாக பல்வேறு தகவல்களை தெரிவித்திருந்தார். அப்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமையுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-வை வீழ்த்துவதற்கு அ.தி.மு.க தயாராக இருக்கிறது என தெரிவித்தார். எங்களது ஒரே எதிரி தி.மு.க தான் என கூறிய அவர், மற்ற எந்தக் கட்சியும் எங்களுக்கு எதிரி கிடையாது. தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். வாக்குகள் சிதறாமல் அதனை ஒருங்கிணைத்து தி.மு.க-வை வீழ்த்துவது தான் எங்களது முதன்மையான கடமை'' என கூறினார்.
கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கருத்து கேட்கப்பட்டது.
இதையும் படிங்க: நாளை வரை டைம் கேட்ட அண்ணாமலை... அதிமுக, பாஜக கூட்டணிக்கு விஜய் எதிர்ப்பா?
அதற்கு பதில் அளித்த அவர் ''அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். அவரிடம் நீங்கள் ஒரு கேள்வி கேட்கிறீர்கள். அதற்கு அவர் பதில் சொல்கிறார். நாங்களும் ஒரு கட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். கட்சியில் தொண்டராக இருக்கிறோம். எல்லோருடைய நோக்கமும் திமுகவை 2026-ல் வீட்டுக்கு அனுப்புவதாகத்தான் திட்டம். மாற்று கருத்து எதுவும் இல்லை. காலம், சூழல் இன்னும் எட்டு மாத காலம் இருக்கிறது. அப்போது எப்படி கூட்டணி அமையும் என்பது தெரியவரும்.
இன்றைக்கு தமிழகத்தில் ஆக்ரோஷமாக திமுகவை மாற்ற தமிழக மக்கள் துடிக்கிறார்கள். திமுக மீது மக்கள் பெரும் கோபத்தில் இருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினமும் அதிகரித்து வருகிறது. இதையெல்லாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். ஆனால், என்னைப் பொறுத்தவரை இன்றைக்கு இது ஒரு தேவையில்லாத விஷயம் என்பதாகத்தான் நான் பார்க்கிறேன்.
கட்சியை வளர்ப்பதற்கு முக்கியமான நேரமாக இதை பார்க்கிறோம். கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் தேர்தலுக்கான காலமும், அதற்கான சூழலும் வரவில்லை. வரும்போது எல்லாம் பேசுவோம். என்டிஏ கூட்டணி எப்படி இருக்கும் என்பது அப்போது தெரிய வரும். இன்றைக்கு டி.டி.வி. தினகரன் எங்கள் அணியில் இருக்கும் அவர் என்னுடன் பொள்ளாச்சியில் இருந்தார். டி.டி.வி.தினகரன் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது வருகின்ற காலத்திலும் என்டிஏ கூட்டணியில்தான் அமுமுக பயணிக்கும் என்றார். அப்படி என்றால் இந்தக் கூட்டணி வலிமை அடைந்து கொண்டிருக்கிறது.
ஆகையால் தேர்தல் வருகின்ற நேரத்தில் என்.டி.ஏ எப்படி இருக்கும்? யார் யார் கூட்டணி அமைப்பார்கள் என்பதை பேசுவோம். அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பது திருமணத்திற்கு நாம் சென்றால் பெண் யார்? மாப்பிளை யார்? என்று தெரிந்து கொண்டு போகிறோம். எந்த குடும்பம் என்று தெரியும். அனைத்து கட்சி கூட்டம் எதற்கு என்றே தெரியவில்லை. தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் இருக்கும் என்று நாங்கள் சொல்லவே இல்லை.
அதற்கான கமிஷன் அமைக்கவில்லை. எப்போது தொகுதி மறுசீரமைப்பு நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. அனைத்து கட்சி கூட்டத்தில் பெண்களைப் பற்றி, பெண்களின் பாதுகாப்பை பற்றி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால் பாஜக முதல் அனைவரும் கலந்து கொள்வோம். எதுவுமே சொல்லாத நிலையில் கற்பனையாக தொகுதி மறு சீரமைப்பு எனக்கூறி அவர் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த இருக்கிறார்.
கற்பனையாக 'ஒரு கல்யாணத்திற்கு வாருங்கள். பொண்ணு மாதிரி ஒருவர் அமர்ந்திருப்பார். மாப்பிள்ளை மாதிரி ஒருவர் அமர்ந்திருப்பார்'' என்று அழைத்தால் எப்படி? அந்த கூட்டத்திற்கு போவது அனைத்தும் கற்பனையே. தமிழகத்திற்கு 22 தொகுதிகள்தான் வரும் என்று யார் சொன்னது? அதிகாரப்பூர்வமாக சொன்னார்களா? தற்போதுள்ள சூழ்நிலையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் எந்த மாநிலமும் மேலேயும் செல்லாது, கீழேயும் வர மாட்டார்கள்.
முதலமைச்சருக்கு நாங்கள் கேட்கக்கூடிய தொடர் கேள்வி என்னவென்றால் எந்த அடிப்படையில் உங்களுக்கு தகவல் வந்தது? டெல்லியில் இருந்து சொன்னார்களா? 848 சீட் என்று சொல்கிறீர்களே? அதற்கு ஆதாரம் கேட்கிறோம். இந்த விவகாரத்தை வைத்து மு.க.ஸ்டாலின் திசை திருப்புகிறார் என்று தானே அர்த்தம். அடிப்படையான மக்கள் பிரச்சினை பற்றிப் பேசாமல் இன்னொரு இடத்திற்கு செல்கிறார் என்று தான் அர்த்தம். அதை எப்படி நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியும்?'' எனக் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: தேமுதிகவுக்கு எம்.பி சீட்டை மறுத்த எடப்பாடியார்... பிரேமலதாவின் ரியாக்சன் என்ன தெரியுமா?