எடப்பாடி பழனிசாமிக்கு உச்சநீதிமன்றத்தில் காத்திருக்கும் செக்....
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகிய 3 இடங்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார்.
இந்த சூழ்நிலையில் வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தின் கேள்விகளுக்கு ஆளாகிறார் இபிஎஸ்.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார் இபிஎஸ். அப்போது தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களை மறைத்து விட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் புகார் ஒன்றை அளித்தார்.
இதையும் படிங்க: 2026ல் அதிமுகவுக்கு மூடு விழா...! தமிழகத்தில் மதக்கலவரம்...! திகில் கிளப்பும் டிடிவி தினகரன்!
இந்த வழக்கில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார் இபிஎஸ். எடப்பாடி தொகுதியைச் சேராத ஒருவர் அதுவும் எந்தவித தேர்தலிலும் போட்டியிடாத ஒருவர் தொடர்ந்த வழக்கு, விசாரணைக்கு உகந்தது அல்ல என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும் தான் எவ்வித விவரங்களையும் மறைக்கவில்லை என்று இபிஎஸ் வாதிட்டார்.
சேலம் நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக இதே வழக்கில் ஆஜரான சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் கடந்த 22-ந் தேதி தீர்ப்பு வழங்கினார். அதில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த முறையீட்டை தள்ளுபடி செய்த அவர், வழக்கை தொடர அனுமதித்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தள்ளுபடி செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த வழக்கு நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்பது உண்மை. அவரது அரசியல் வாழ்வு இப்போது உச்சநீதிமன்றத்தின் கையில் உள்ளது..
இதையும் படிங்க: கவலை கொள்ளாத தமிழக அரசு! அதிகரித்துவரும் கடன், வருவாய் பற்றாக்குறை!