×
 

விஜய்யை பாஜக வளைத்தால்... விஜய்யை மறைமுகமாக எச்சரிக்கும் கே.பி. முனுசாமி..!

சுயநலமாக பாஜக விஜய்யை தன் வசம் இழுத்துக் கொண்டால், என்ன நடக்கும் என்பது பாஜகவின் வரலாற்றை திரும்பி பார்த்தால் தெரியும் என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். 

கிருஷ்ணகிரியில் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுகவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் செங்கோட்டையன். 1987இல் எம்ஜிஆர் மறைந்தபோது ஜெயலலிதா தலைமையில் செயல்பட்ட முக்கிய தளபதிகளில் ஒருவர்.  கட்சியில் செங்கோட்டையன் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தவர். அதிமுக பல்வேறு சோதனைகளை எதிர்கொண்ட போதெல்லாம் கட்சியில் தொய்வில்லாமல் பணியாற்றிவர். இந்த இயக்கத்திற்காக கடைசி வரை நிச்சயமாக உறுதுணையாக இருப்பார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. செங்கோட்டையனுக்கு ஜெயலலிதா என்ன மரியாதையைக் கொடுத்தாரோ அதே மரியாதையை எடப்பாடி பழனிசாமியும் கொடுத்து வருகிறார்.

ஓ. பன்னீர்செல்வம் நிபந்தனை இன்றி அதிமுகவில் இணைய தயார் என்று கூறியிருக்கிறார்.  அதே நேரத்தில் மற்றொருபுறம் இரட்டை இலை சின்னம் தொடர்பாக நீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்கிறார். இதில் ஏன் இரட்டை மனநிலை, இரட்டை நாக்கு? இரட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதில் எங்களுக்கு எந்தப் பயமும் கிடையாது. அதிமுகவை பொறுத்தவரை ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலான எம்எல்ஏக்கள், எம்பிக்கள், கட்சியின் அதிகாரமிக்க பொதுக் குழு உறுப்பினர்கள் இங்குதான் இருக்கிறார்கள். எனவே அதிமுக சின்னம் குறித்த பயம் எங்களுக்கு இல்லை.

இதையும் படிங்க: எடப்பாடி குறித்து கிடுக்கிடுப்பிடி கேள்வி... செய்தியாளரிடம் மழுப்பிய செங்கோட்டையன்...! 

தேவையற்று சிலர் வெறு வாயில் அவலை மெல்லுவது போல் பேசக் கூடாது என்பதற்காகதான் நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை கேட்டு மனுதாக்கல் செய்தோம். எந்தச் சூழ்ச்சியாலும் அதிமுக சின்னத்தை முடக்க முடியாது. கண்டிப்பாக இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி சட்ட முறைப்படி வெல்வார். ஆனால், திமுகதான் ஏதாவது ஒரு வகையில் அதிமுகவின் பலத்தை குறைக்கவும் ஒற்றுமையை குலைக்கவும் சதி செய்து வருகிறது.

நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதால் கூட்டம் அதிகமாக சேரும். அதனால் மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. இது முழுக்க முழுக்க அவரது பாதுகாப்புக்காக என்பதால் அதைப் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், மகிழ்ச்சி. மாறாக சுயநலமாக பாஜக அவரை தன் வசம் இழுத்துக் கொள்ளுமேயானால், என்ன நடக்கும் என்பது பாஜகவின் வரலாற்றை திரும்பி பார்த்தால் உங்களுக்குத் தெரியும். எந்த ஒரு மாற்று அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துகளைக் கேட்டு கட்சியை நடத்த வேண்டிய இடத்தில் அதிமுக இல்லை. அதிமுக கட்சி விவகாரம் பற்றி ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட டிடிவி தினகரன் பேசுவதற்கு எந்தத் தார்மீக உரிமையும் இல்லை.” என்று கே.பி. முனுசாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'அதிமுகவில் இணைய வேண்டுமா..? 6 மாதங்கள் அமைதியாக இருங்கள்...' - ஓ.பி.எஸுக்கு நிபந்தனை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share