குடை கொடுப்பதெல்லாம் மன்ற செயல்பாடு...எப்போது அரசியல்வாதியாக மாறப்போகிறார் புஸ்ஸி ஆனந்த்
தவெக பொதுச் செயலாளர் பொதுமக்களை சந்திப்பதில்லை என்ற குற்றச்சாட்டை போக்க சாலையில் வியாபாரிகளுக்கு குடை வழங்கி பொதுவெளிக்கு வந்துள்ளார் புஸ்ஸி ஆனந்த். இது அவர் இன்னும் ரசிகர் மன்ற மனோபாவத்திலிருந்து மாறவில்லை என்பதையே காட்டுகிறது என விமர்சனம் எழுந்துள்ளது.
நடிகர் விஜய் அரசியலில் குதிப்பேன் என்று அறிவித்து முதலாண்டு முடிந்துள்ளது. நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்த பொழுது விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. அதில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் கட்சிக்கும் முக்கிய பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டனர். அதில் முக்கியமானவராக விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவராக இருந்த புஸ்ஸி ஆனந்த் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆக்கப்பட்டார். விஜய்யின் அறிவிப்பு, தான் கடைசி கட்ட படப்பிடிப்பை முடித்தவுடன் அரசியல் பாதைக்கு நேரடியாக வருவேன் என்பதாகும்.
அவர் அறிவித்தபடி படப்பிடிப்புக்கு சென்றார். அவருக்கு அடுத்த நிலையில் கட்சியை வழிநடத்த புஸ்ஸி ஆனந்த் நியமிக்கப்பட்டார். புஸ்ஸி ஆனந்த் பொதுச் செயலாளராக ஆக்கப்பட்டதிலிருந்து அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் ஒரு அரசியல் கட்சியின் பொதுச் செயலாளர் என்கின்ற தரத்துக்கு உயரவில்லை என்பது பெரும்பாலானோர் வாதமாக அமைந்துள்ளது. காரணம் மக்கள் இயக்கம் மன்ற செயல்பாடுகள் என்பது வேறு அரசியல் கட்சியாக செயல்படுவது என்பது வேறு. அரசியல் கட்சியாக செயல்பட ஆரம்பித்தால் தினம், தினம் மக்கள் பிரச்சனையில் தங்களது கருத்தை முன் வைக்க வேண்டும். கட்சியின் நிலைப்பாட்டை முன்வைத்து மக்களுக்காக பேச வேண்டும். பொதுமக்கள் நலன் காக்கும் விஷயங்களில் கட்சியை போராட்டத்தில் ஈடுபடுத்த வேண்டும்.
இதையும் படிங்க: இதை விஜயிடமே சொல்லி விட்டேன்… திமுகவுக்கு இதுதான் வழக்கம்… மிகப்பெரிய அபாயம்..! எச்சரித்த பிரேமலதா..!
மாநிலம் முழுவதும் மக்களுக்கு எதிரான பிரச்சனைகளை கையில் எடுத்து மக்களுக்காக தன்னுடைய கட்சி அணிகளை போராட்டத்தில் ஈடுபடுத்த வேண்டும். தொடர்ந்து மக்களிடம் கட்சியை கொண்டு செல்லும் விதத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்புகளை பொதுச்செயலாளர் என்ற முறையில் புஸ்ஸி ஆனந்த்தும் மற்ற நிர்வாகிகளும் சந்திக்க வேண்டும். தமிழகம் முழுவதும் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர் ஆக உள்ளவர்கள் பயணம் செய்து கட்சி அணியினரை சந்தித்து அரசியல் குறித்தும் கட்சியின் நிலைப்பாடுகள் குறித்தும் கட்சியின் நிர்வாகிகள் நியமனம் குறித்தும், ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
தலைவர் விஜய் படப்பிடிப்பில் உள்ளதால் கட்சியின் நிலைப்பாட்டை பத்திரிகையாளர்கள் மூலம் பொதுமக்களிடம் கொண்டு செல்ல முக்கியமான இடத்தில் இருப்பவர் புஸ்ஸி ஆனந்த். ஆனால் அவர் இதுவரை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு கூட நடத்தியது இல்லை. அவர் அரசியலே பேசியது இல்லை. அறிக்கைகள் வருவது எல்லாம் விஜய்யின் கையெழுத்து விட்ட அறிக்கைகளாக வெளி வருகிறது. ஒரு முக்கிய கட்சியின் பொதுச் செயலாளர் தமிழகத்தின் அரசியல் பற்றி எவ்வித கருத்தும் இல்லாமல் இருப்பதும், கட்சியின் அரசியல் நிலைபாடுகளை பொதுமக்களிடமும் தனது கட்சி தொண்டர்களும் கொண்டு செல்லாமல் இருப்பதும் வினோதமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
கட்சியின் நிர்வாகிகள் நியமனத்தில் மெத்தனமாக இருப்பதும் தவெகவிற்கு பெருத்த பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்த நேரத்தில் புஸ்ஸி ஆனந்த் செயல்படாமல் இல்லை அவர் செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறார் என்று அவரது கட்சியில் உள்ளவர்கள் எதிர்வாதம் வைத்தனர். இதுகுறித்து விசாரித்த பொழுது புஸ்ஸி ஆனந்த் நல திட்ட பணிகளில் அதிக கவனம் செலுத்துவதும் தவெகவை ஒரு மக்கள் இயக்கம் போல் ரசிகர் மன்றம் போலவே நடத்த நினைப்பதும் அவரது அரசியல் அறிவின் தரத்தை உணர்த்தியது.
அரசியல் கட்சியாக தவெக நகர தொடங்கி விட்டவுடன் அதற்கு ஏற்ப தன்னுடைய நிலைப்பாட்டையும், தன்னுடைய செயல்முறையும் புஸ்ஸி ஆனந்த்தும் மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர் இன்னும் ரசிகர் மன்ற மனப்பான்மையிலிருந்து வெளிவரவில்லை என்று தவெகவில் உள்ளவர்களின் கருத்தாக உள்ளது. அதே போன்று ரசிகர் மன்றத்தின் தலைவராக தன்னைத் தவிர வேறு யாரும் விஜய்யை நெருங்கிவிடக்கூடாது, தன்னைத் தவிர மக்கள் இயக்கம் வேறு யார் தலைமையில் செயல்படக்கூடாது, தன்னைத் தவிர வேறு யாரும் சிந்தித்து விடக்கூடாது என்பதில் புஸ்ஸி ஆனந்த் உறுதியாக இருந்தார். மன்ற செயல்பாட்டில் அவ்வாறு இருப்பது பெரிய விஷயம் அல்ல.
அது யாரையும் பாதிக்காது காரணம், விஜய் மக்கள் மன்றம் என்றது விஜய்யும் அவரது ரசிகர்களையும் சார்ந்த ஒன்று. இதில் புஸ்ஸி ஆனந்த் தன்னிச்சையாக முடிவெடுத்தாலும் அது அவர்கள் மன்றத்தை மட்டுமே பாதிக்கும். ஆனால் தவெக என்ற அரசியல் கட்சி உருவான பின்னர் அதன் வளர்ச்சிக்கு ஒரு ஜனநாயக தன்மை வேண்டும். ஜனநாயக எண்ணம் உள்ள தலைமை வேண்டும். எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டும். புதுப்புது கேடர்களை உருவாக்க வேண்டும். கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும், மாற்று கட்சியிலிருந்து வருகின்ற திறமையானவர்களை அரவணைத்து அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்.
இதுவெல்லாம் ஒரு அரசியல் கட்சிக்கு கட்சி தலைமைக்கு முக்கியமான பண்புகள் ஆகும். ஆனால் இவை எதையும் புஸ்ஸி ஆனந்த் செய்யவில்லை என்பதும் அவர்கள் கட்சியில் உள்ள மற்ற நிர்வாகிகளால் குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது. கட்சியை வெளியில் இருந்து பார்க்கின்ற அரசியல் விமர்சகர்களும் இதே குற்றச்சாட்டை வைக்கின்றனர். இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் தன் மீதுள்ள செயல்பாடின்மை என்கின்ற புகாரை தகர்க்க திடீரென களத்தில் குதித்தார். சென்னை முழுவதும் சாலையோர வியாபாரிகளுக்கு தவெக மூலம் குடை வழங்கும் திட்டத்தை அவரே நேரில் போய் வழங்கினார்.
இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் தானே ஓட்டிச் சென்று ஆங்காங்கே குடைகளை வழங்கினார். இதை பார்த்த இவரது இந்த செயல் ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் தடைகளை உடைக்கிறேன் என்கிற போர்வையில் மீண்டும் மன்ற தலைவர் போன்று தன்னுடைய செயல்பாடுகளை அமைத்துக் கொள்கிறார், இது அல்ல அரசியல் கட்சியின் செயல்பாடு என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. மன்றத்தின் தலைவராக இருந்த புஸ்ஸி ஆனந்த் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டாலும் மனதளவில் அவர் இன்னும் மாறவில்லை என்பதே அவர் செயல்பாடுகள் மூலம் தெரிய வருகிறது. மாறுவாரா புஸ்ஸி ஆனந்த் பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: மார்ச் மாதத்தில் சுற்றுப்பயணம் கிளம்பும் விஜய்... இனி அதிரடிதான்...