×
 

பெண் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக அவதூறு…எஸ்.வி.சேகர் சிறைத்தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

சமூக வலைத்தளங்களில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்ட வழக்கில் பாஜக-விலிருந்து விலகி திமுக சார்பாளர் அவதாரம் எடுத்துள்ள நடிகர் எஸ்.வி.சேகர்...

சிறப்பு நீதிமன்றம் விதித்த ஒரு மாத சிறை  தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள்  குறித்து தரக்குறைவாக விமர்சித்து பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவரது சர்ச்சைக்கருத்துக்கு பல்வேறு பத்திரிக்கையாளர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.  இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு  பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவினர்,   இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதத்தில், ”குற்றவாளி எஸ்.வி.சேகர் சாதாரண நபர் அல்ல, ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளர், கல்வியறிவு பெற்றவர் தன் பதிவால் என்ன விளைவுகள் ஏற்படும் என நன்றாக தெரியும், தனிப்பட்ட ஒரு பெண்ணுக்கு எதிராக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பெண் பத்திரிகையாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அவருடைய அந்த பதிவு அமைந்திருந்தது” என வாதிட்டார்.

எஸ்.வி.சேகர் தரப்பில் அந்த பதிவு உடனடியாக நீக்கப்பட்டதாகவும், தவறுதலாக நடைபெற்றதற்காக வருத்தம் தெரிவித்ததாகவும், தான் தான் பதிவு பதிவுசெய்தேன் என்பதற்கான ஆதாரங்களை காவல்துறை தரப்பில் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்பதால் தீர்ப்பை ரத்து செய்து, விடுதலை செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. 

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிபதி வேல்முருகன் இன்று தீர்ப்பளித்தார். அதில் எஸ்.வி.சேகருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த ஒரு மாத சிறை தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பளித்தார்.  இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் எஸ்.வி. சேகர் தரப்பில் மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி, மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கி, ஒரு மாத சிறை தண்டனையை அமல்படுத்துவதில் 90 நாட்களுக்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டார்.


 

இதையும் படிங்க: இந்த பக்கம் இவங்க, அந்த பக்கம் அவங்க... நடைபேரணி போராட்டத்தை கையில் எடுக்கும் காங்கிரஸ், பாஜக...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share