மது கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கப்பிரிவுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி
மதுபானக் கொள்கை விவகாரத்தில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதையடுத்து, டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குத் தொடர அமலாக்கப்பிரிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டபின், டெல்லியில் உள்ள பிஎம்எல்ஏ நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிகையை தாக்கதல் செய்தது. அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரிக்கவும், வழக்குப்பதிவு செய்யவும் டெல்லி துணை நிலை ஆளுநர் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில் இப்போது உள்துறை அமைச்சகமும் அனுமதியளித்துள்ளது.
பிப்ரவரி மாதம் 5ம் தேதி டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கப்பிரிவு விசாரணையைத் தொடங்க இருக்கிறது.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால்தான் முக்கியக் குற்றவாளி, சதித்திட்டம் தீட்டியவர் என்று அமலாக்கப்பிரிவு குற்றம்சாட்டியிருந்தது. தனிப்பட்ட ரீதியிலும், கட்சிரீதியாகவும் அவர் குற்றம்சாட்டப்பட்டவராக அமலாக்கப்பிரிவு குறிப்பிட்டிருந்தது
அமாக்கப்பிரிவு முன்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கையில் “ ஆம் ஆத்மி ஒரு அரசியல்கட்சி என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்டம் 70ன் கீழ் நிறுவனமாக வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்கு பொறுப்புள்ளவராக கெஜ்ரிவால் இருக்கிறார்.
மதுபானக் கொள்கை குற்றச் செயல் நடந்த நேரத்தில், கெஜ்ரிவாலும், அவரின் கட்சியும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் குற்றம்செய்தவர்கள் ஆதலால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.
டெல்லி அரசால் 2021-22ம் ஆண்டு மதுபானக் கொள்கை உருவாக்கப்பட்டது. ஆனால் அதில் சட்டவிரோதப்பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், ஊழல் நடந்துள்ளாகவும் குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, அந்தக் கொள்கை ரத்து செய்யப்பட்டது.
இதையும் படிங்க: இந்தியா கூட்டணிக்கு "அடிமேல் அடி": டெல்லி தேர்தலில் தனித்து விடப்பட்ட காங்கிரஸ்; அகிலேஷ் யாதவுடன் மம்தாவும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு
அப்போது டெல்லி துணை நிலை ஆளுநராக இருந்த வி.கே.சக்சேனா சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்தார், அமலாக்கப்பிரிவும் சட்டவிரோதப்பணப்பரிமாற்றத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து, 2022, ஆகஸ்ட் 17ம் தேதி சிபிஐ முதல் தகவல் அறிக்கையும், அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 22ம் தேதி அமலாக்கப்பிரிவும் வழக்குப்பதிவு செய்தது.
டெல்லி மாநிலத்தில் தொடர்ந்து 2 முறை ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றி 3வது முறையாக ஆட்சியில் அமர முயற்சி செய்கிறது. ஆனால், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் ஆட்சியைப் பறிகொடுத்த பாஜகவால் மீண்டும் டெல்லியைக் கைப்பற்ற முடியவில்லை. மத்தியில் ஆட்சியில் பாஜக இருந்தபோதிலும் டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியை வெல்ல முடியவில்லை.
இதையடுத்து, மீண்டும் டெல்லி மதுபான கொள்கை வழக்கை பாஜக கையில் எடுத்து, அமலாக்கப்பிரிவுக்கு வழக்குப்பதிவு செய்யவும், கைது செய்யவும் அனுமதியளித்துள்ளது. இந்த வழக்கில் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையாகிய நிலையில் மீண்டும் கைதாகும் நிலைஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் களம்... ஆம் ஆத்மி-யின் அதிஷி வேட்புமனு தாக்கல்...