திருமணத்திற்கு முன்பே பிறந்த குழந்தை.. கைவிட்ட காதலர்கள்.. தேடிப்பிடித்து குழந்தையை ஒப்படைத்த போலீசார்..!
சென்னையில் திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்ற நிலையில், பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்காததால் குழந்தையை தவிக்க விட்டுச் சென்ற காதலர்களை போலீசார் தேடிப்பிடித்து குழந்தையை ஒப்படைத்தனர்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இருந்து புளியந்தோப்பு போலீசாருக்கு நேற்று ஒரு அழைப்பு வந்தது. அதில் பிறந்து 26 நாட்களே ஆன ஆண் குழந்தை, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழந்தையை சாய்ரா பானு என்பவர் கொண்டு வந்து சேர்த்துள்ளார். அவரது பேச்சில் முன்னுக்கு பின் முரண் தெரிகிறது. குழந்தை யாருடையது என சந்தேகம் உள்ளது.
எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு புகார் சென்றது. புகாரை அடுத்து புளியந்தோப்பு போலீசார் மருத்துவமனைக்கு சென்றனர். மருத்துவமனையில் காத்திருந்த புளியந்தோப்பு வ.உ.சி.நகர் பகுதியைச் சேர்ந்த சாய்ரா பானு (வயது 36) என்ற பெண்ணிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த குழந்தை சாய்ரா பானுவின் குழந்தை இல்லை என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாய்ரா பானு தனது தங்கை முபாரக் நிஷா கருவுற்று இருந்ததால் அவரை புளியந்தோப்பு திருவேங்கடம் தெருவில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது குமரன் மற்றும் பிரியங்கா ஆகிய இருவர் கணவன் மனைவி என அறிமுகப்படுத்திக் கொண்டு சாய்ரா பானுவுக்கு பழக்கமாகியுள்ளனர். தொடர்ந்து இருவரும் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு சிகிச்சைக்கு செல்லும் போதெல்லாம் பேசி வந்துள்ளனர்.
இதையும் படிங்க: சவாரி ஏற்றுவதில் மோதல்.. கத்தியுடன் சுற்றித்திரிந்த ஆட்டோ டிரைவர்கள்.. 9 பேர் கைது, 4 பேருக்கு மாவுக்கட்டு..!
அதன் பிறகு சாய்ரா பானு தங்கை முபாரக் நிசாவிற்கு கரு சிதைவு ஏற்பட்ட காரணத்தினால் மருத்துவமனைக்கு செல்வதை நிறுத்திவிட்டனர். அதன் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் சாய்ரா பானுவை தொடர்பு கொண்ட குமரன், தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், எனது மனைவி பிரியங்கா என்னிடம் சண்டை போட்டுக்கொண்டு பிரிந்து சென்று விட்டார் எனவும், அவரை தேடி கண்டுபிடித்து அழைத்து வந்து குழந்தையை உங்களிடம் இருந்து பெற்றுக் கொள்கிறேன் எனவும் கூறி உள்ளார். அதுவரை குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறி குழந்தையை கொடுத்துள்ளார்.
சாய்ரா பானுவும் இதற்கு சம்மதம் தெரிவித்து கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் குழந்தையை தனது வீட்டில் வைத்து பார்த்து வந்துள்ளார். அதன் பிறகு குமரனை தொடர்பு கொண்ட சாய்ரா பானு குழந்தையை எப்போது வீட்டிற்கு எடுத்துச் செல்கிறீர்கள் எனக் கேட்ட போது, அவர் உரிய பதிலளிக்கவில்லை. சில நாட்கள் கழித்து தனது மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.
இதனை அடுத்து குமரன் மற்றும் பிரியங்கா யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று மருத்துவமனையில் பிரியங்கா மற்றும் குமரன் கொடுத்த ஆதார் கார்டு மற்றும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் குமரன் மற்றும் பிரியங்கா யார் என்பது குறித்து தகவல்களை எடுத்தனர்.
இதனை அடுத்து குமரன் கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் பிரியங்கா ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. நேற்று அவர்கள் இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் இருவரும் காதலித்து வந்ததாகவும் திருமணத்திற்கு முன்பே பிரியங்கா கருவுற்றதால் இரு குடும்பத்தினரும் திருமணத்திற்கு சம்மதிக்காத காரணத்தினால் தனியாக செங்குன்றம் பகுதியில் வீடு எடுத்து தங்கி குழந்தையை பெற்றதாகவும் தற்போது குழந்தை பிறந்த விவரம் இரண்டு குடும்பத்திற்கும் தெரியாது எனவும் கூறி உள்ளனர்.
அதனால் சாய்ரா பானுவிடம் குழந்தையை கொடுத்துவிட்டு சென்றதும் தெரிய வந்தது. குமரனின் தந்தை முனுசாமி இருவரையும் குழந்தையுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியதன் அடிப்படையில் போலீசார் குழந்தையை குமரன் மற்றும் பிரியங்காவிடம் ஒப்படைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்
இதையும் படிங்க: சென்னையில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்.. 2 ரவுடிகள் வெட்டிக்கொலை.. தீர்த்துக்கட்ட திட்டம் போட்டவனை குளோஸ் செய்த கும்பல்..!