சேட்டன்கள் எப்படிதான் இப்படி படம் எடுக்குறாங்களோ.. இணையத்தைக் கலக்கும் ஆசிப் அலியின் ரேகாசித்ரம்..!
மலையாள ஹீரோ ஆசிப் அலியின் ரேகாசித்ரம் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வித்தியாசமான கதைக்களங்களுக்கு குறிப்பாக க்ரைம் த்ரில்லர் படங்களுக்கு மலையாளிகள் பேர் போனவர்கள். மம்முட்டிக்கு சிபிஐ சேதுராம ஐயர் படங்கள் என்றால், மோகன்லாலுக்கு த்ரிஷ்யம் என்று கிளாசிக் ஹிட் படங்களின் லிஸ்ட் உண்டு. இதுமட்டுமல்லாமல் வருடத்திற்கு 100 படங்களாவது போலீஸ் இன்வெஸ்டிகேஷன் பாணியில் அங்கு படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கூட ஒவ்வொரு போலீஸ் துப்பறியும் படமும் அட வித்தியாசமா இருக்கே என்று வியப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கும் படம் தான் ரேகாசித்ரம்..
தொட்டதெல்லாம் ஹிட் அடிக்கும் நேரம் வாய்த்திருக்கிறது மலையாள ஹீரோ ஆசிப் அலிக்கு.. கிஷ்கிந்தா காண்டம், தலைவன் என்று அடுத்தடுத்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து வருகிறார். இப்போது அந்த வரிசையில் இணைந்திருக்கும் அவரது புதிய படம் தான் ரேகாசித்ரம். வெறும் 6 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு 60 கோடி ரூபாய் வரை வசூலித்து இந்த ஆண்டின் அதிக வசூல் படம் என்று வாய்பிளக்க வைத்திருக்கிறது.
இதையும் படிங்க: தயாராகிறது த்ரிஷ்யம் மூன்றாம் பாகம்..! உறுதி செய்த மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்...!
அப்படி என்ன விசேஷம் ரேகாசித்ரத்தில் என்று பார்த்தால்.. ஆமாங்க நெஜமாலுமே விசேஷம் தான். கதைக்குள் கதை, அதற்குள் ஒரு கதை என்று நம் மூளைக்கு வேலை கொடுத்திருக்கிறார் கதாசிரியரும், திரைக்கதையாசிரியருமான ராமு சுனில்.
அதாவது 1985-ல் மம்முட்டி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் காதோடு காதோரம். இந்த படத்தில் ஒரு பாடல்காட்சி உண்டு. தேவதூதர் பாடி என்று அந்த பாடல் வரும். அந்த காட்சியில் நடித்த துணைநடிகைகளில் ஒருவராக ஒரு கற்பனை கதாபாத்திரத்தை சேர்த்துள்ளனர். அதுதான் ரேகா. இது முதல் ட்விஸ்ட்.
அதே 1985-ல் முகேஷ் நடிப்பில் வெளிவந்த முத்தாரம்குன்னு போஸ்ட் ஆபிஎஸ் என்ற படத்தின் கதைக்கரு.. இது இரண்டாவது ட்விஸ்ட்..
இந்த இரண்டு உண்மை படங்களை வைத்துக் கொண்டு கற்பனையில் ஒரு பாத்திரத்தை உருவாக்கி இரண்டுக்கும் முடிச்சுப் போட்டு அதனை லாவகமாக அவிழ்ப்பதே ரேகாசித்ரம்.
ஒருவரியில் சொல்வதென்றால் 30 வருடங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட ஒரு இளம்பெண்ணின் எலும்புக்கூடு கிடைக்கிறது. அதனை காவல்துறை அதிகாரியான ஆசிப் அலி எவ்வாறு துப்பு துலக்குகிறார் என்பதே.. ஆனால் இந்த சிறிய ஒன்லைக்குள் இயக்குநர் ஜாபின் டி.சாக்கோ புகுந்து விளையாடி உள்ளார்.
படத்திற்கு மிகப்பெரிய பலம் ஆசிப் அலியின் அண்டர்ப்ளே நடிப்பும், திரைக்கதையும் தான். அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று நம்மை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்து விடுகிறார்கள்... வெள்ளித்திரையையும் தாண்டி சோனி லிவ் ஓடிடி தளத்தில் இந்த படம் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. தமிழில் இதுபோன்றதொரு க்ரைம் த்ரில்லர் வந்து வெகுநாளாகிறது என்பதே உண்மை.
இதையும் படிங்க: பிரதீப் ரங்கநாதனுக்கு சீமான் அப்பாவா..? விக்னேஷ் சிவனால் சூடுப்பிடித்த இணையதளம்!!