×
 

இந்தியர்களுக்கு கை விலங்கு..,! உடனடி விவாதம் வேண்டும்.. எதிர்க்கட்சிகள் போர்க்கொடி

இந்தியர்களுக்கு விலங்குபூட்டப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாக் கூறி நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் 104 இந்தியர்கள் கைவிலங்கிட்டு அனுப்பப்பட்ட விவகாரம், மனிதநேயமற்று நடத்தப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தின் பிரதான வாயிலின்  வெளிப்புறம் நின்று பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். அந்த பதாகைகளில் “ மனிதர்கள், கைதிகள் அல்ல” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் 2வது முறையாக பதவி ஏற்றபின், எல்லைக் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தியுள்ளார். அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை அவர்களின் நாட்டுக்கு திருப்பி அனுப்பும் பணியை தீவிரமாக்கியுள்ளார்.

அதில் முதலாவதாக இந்தியாவைச் சேர்ந்த 106 பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்தன். அவர்களை கைது செய்து, ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்து சேர்ந்த இந்தியர்கள் விமானத்தில் கைவிலங்கிட்டு அழைத்துவந்ததாகத் தெரிவித்தனர். 

இதையும் படிங்க: வக்ஃபு திருத்த மசோதா: வரைவு அறிக்கைக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல்

இந்த சம்பவம் குறித்து அறிந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற விதி 267ன் கீழ் அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, இந்தியர்களை மனிதநேயற்று அழைத்து வந்த அமெரிக்க அரசின் செயல் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டதையடுத்து, நண்பகல் வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால், எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸ் அனைத்தையும், மாநிலங்களவை துணைத்த லைவர் ஹரிவன்ஸ் நாராயன் சிங் நிராகரித்தார். இதனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் இருக்கையின் மீது ஏறி நின்று கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

மக்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இதேபோன்று கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இந்தியர்களை நடத்திய விதம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா “ ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமான விதிகள் இருக்கும், அதன்படி அந்நாடு நடக்கிறது” எனக் கூறி அவையை ஒத்திவைத்தார்.

காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி பேசுகையில் “ 40 மணிநேரம் இந்தியர்களை கைவிலங்கிட்டு விமானத்தில் அழைத்து வந்துள்ளனர். கழிவறைக்குச் செல்லக்கூட கைவிலங்கோடு சென்றனர்” எனத் தெரிவி்த்தார். காங்கிரஸ் எம்பி. மாணிக்கம் தாகூர் பேசுகையில் “ மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளி்க்க வேண்டும், மத்திய அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும், என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதையும் அவையில் தெரிவிக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.

சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில் “ பெண்களையும், குழந்தைகளையும் அவமரியாதையுடன் நடத்துவதில் இருந்து பாதுகாக்க மத்திய வெளியுறவுத்துறை தவறிவிட்டது. இதற்கு அரசின் பதில் தேவை” எனத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி வரும் 12ம் தேதி அமெரிக்காவுக்கு செல்ல இருக்கும் நிலையில் இந்தியர்களை அந்நாட்டு அரசு நாடுகடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் 2வது முறையாக பதவி ஏற்றபின் முதல்முறையாக பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.

இதையும் படிங்க: கலாட்டா, கூச்சல், குழப்பம்! வக்ஃபு திருத்த மசோதா குறித்த நாடாளுமன்றக் கூட்டுக்குழு கூட்டம் ரத்து

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share