செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு மாபெரும் சிக்கல்: உச்சநீதிமன்றம் 10 நாள் கெடு..!
அமைச்சராக தொடர விரும்புகிறீர்களா? என்பதை தெரிவிக்கும்படி கூறியிருந்தோம். காலம் தாழ்த்துவது சரியான நடைமுறை அல்ல
ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனுவில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய 10 நாட்கள் காலக்கெடு விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார் அமைச்சர் செந்தில்பாலாஜி. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். அடுத்த சில நாட்களில் மின்துறை அமைச்சர் பொறுப்பு மீண்டும் அவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் அமர்வு, "இந்த விவகாரத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல் என்ன ஆனது?" என்று கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி தரப்பு, "இந்த விவகாரத்தை பொறுத்தவரை அமைச்சராக பதவி ஏற்கக்கூடாது என குறிப்பிட்ட உத்தரவு இல்லை. இதுதொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்கிறோம். அதற்கு அவகாசம் வழங்குங்கள்" என்று கேட்டுக் கொண்டனர்.
அதற்கு நீதிபதிகள் அமர்வு, ''தங்களுக்கு ஜாமின் மனு ரத்து தொடர்பான எந்த நோட்டீசையும் அனுப்பவில்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு கூறுவது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இது போன்ற வாதத்தை முன்வைக்க கூடாது. வழக்கு விசாரணை எத்தனை நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது? இந்த நேரத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் பதில் மனுவை தாக்கல் செய்வதற்கு அவர்கள் தயாராக வைத்திருக்க வேண்டும். செந்தில் பாலாஜி தரப்பில் நியாயமற்ற ஒரு நிலைப்பாடு எடுத்திருந்தாலும் கூட செந்தில் பாலாஜி தரப்புக்கு பதில் மனு தாக்கல் செய்வதற்கு பத்து நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதற்குமேல் அவகாசம் வழங்க முடியாது. நீங்கள் கூறியதை பதிவு செய்கிறோம்.
இந்த விவகாரத்தில் அமைச்சராக தொடர விரும்புகிறாரா என்பதை கேட்டு தெரிவிக்க கூறி இருந்தோம்? ஆனால் அதனை செந்தில் பாலாஜி தரப்பு முறையாக பின்பற்றவில்லை. அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். கடந்த முறை நோட்டீஸ் எதுவும் பிறப்பிக்கவில்லை. அதற்காக நீங்கள் அதனை அனுகூலமாக எடுத்துக்கொள்வீர்களா? இது சரியான நடைமுறை அல்ல. இப்படி தொடர்ச்சியாக காலம் தாழ்த்துவது ஒருவரின் நிலைப்பாட்டையே காட்டுகிறது. எனவே இந்த விவகாரத்தில் கால அவகாசம் வழங்க முடியாது" என்று கூறினர்.
இதனைத்தொடர்ந்து 10 நாட்களுக்குள் செந்தில் பாலாஜி பதிலளிக்க உத்தரவிட்டு, மேற்கொண்டு கால அவகாசம் வழங்கப்படாது என்றும் நீதிபதிகள் அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 1000 ஆடுகளை அறுத்தால் பக்ரீத்.. ஒரே ஒரு ஆட்டை அறுத்தால் தேர்தல்… அண்ணாமலையை வம்பிழுக்கும் செந்தில் பாலாஜி..!