ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கராத்தே மாஸ்டருக்கு உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு!
ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ள பிரபல கராத்தே மாஸ்டரும், நடிகருமான ஷிகான் ஹுசைனியின் மருத்துவ சிகிச்சைக்கு தமிழக அரசு சார்பில் 5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மதுரையை பூர்வீகமாகக் கொண்ட கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி கே.பாலசந்தர் மூலம் 'புன்னகை மன்னன்' திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து, வேலைக்காரன், மூங்கில் கோட்டை, உன்னை சொல்லி குற்றமில்லை என சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் ரஜினிகாந்த் நடித்த ப்ளட் ஸ்டோன் என்ற ஹாலிவுட் படத்திலும் ஹுசைனி வேலை செய்துள்ளார். விஜய்யின் பத்ரி படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த ஹுசைனி விஜய்க்கு உடற்பயிற்சி பயிற்சியாளராக நடித்திருந்தார்.மேலும் பலருக்கு வில் வித்தை பயிற்சியையும் அவர் அளித்துள்ளார்.
இந்நிலையில் தான் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், தனக்கு ரத்த புற்றுநோய் வந்திருக்கிறது என்றும் 4 வது நிலையை அடைந்துவிட்டதாகவும், இதற்கு மொத்தம் மூன்று காரணங்கள் சொல்வதாகவும் தெரிவித்தார். தான் ஒருநாள் வாழ்வதற்கு 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளேட்லெட்ஸ் வேண்டும் என்றும் இன்னும் கொஞ்ச நாள்தான் உயிரோடு இருப்பேன் எனவும் கூறிமார்.
இதையும் படிங்க: பிரபல ரவுடி படப்பை குணா மீது 5வது முறையாக பாய்ந்தது குண்டாஸ்!
இதனையடுத்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடியோ காலில் அழைத்து ஷிகான் ஹூசைனிக்கு ஆறுதல் கூறினார். மேலும், ஷிகான் ஹுசைனி துணை முதலமைச்சரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறிவுறுத்தல் படி ஷிகான் ஹுசைனியின் மருத்துவ சிகிச்சைக்காக 5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி வில்வித்தை பயிற்சியாளர் டாக்டர் ஷிஹான் ஹுசைனி அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் நவீன வில்வித்தை வீரர்களை உருவாக்கி டாக்டர் ஷிஹான் ஹுசைனி அவர்கள் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் வில்வித்தைக்கு பெறும் பங்களிப்பு செய்து வருகிறார். இவர் 400க்கு மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்தும், தமிழ்நாட்டில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாக இருந்து ரீகர்வ் வில் (1979) மற்றும் காம்பவுண்ட் வில் (1980) ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். நவீன வில்வித்தை பயிற்சி பாடத்திட்டத்தை வடிவமைத்து, மேம்பாட்டிற்கான தரங்களை வடிவமைத்தார்.
இந்தியாவின் முன்னணி வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். தற்போது ஹுசைனியின் நேரடி பயிற்சியின் கீழ் மொத்தம் 100 வில்வித்தை வீரர்கள் மற்றும் 300 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். ஹுசைனியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாசாணி அம்மன் கோயில் நிதியில் இருந்து ஊட்டியில் ரிசார்ட் கட்டப்பட மாட்டாது.. நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்..!