’சிலர் கட்சியை மீறி தனது லாபத்துக்காக செயல்படுகிறார்கள்’.. அண்ணாமலையை வைத்துக்கொண்டே கலாய்த்த குருமூர்த்தி
துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் பேசிய குருமூர்த்தி ‘அதிமுக பாஜக கூட்டணி கட்டாயம் அமைய வேண்டும். ஆனால் சிலர் பாஜகவுக்கு லாபம் என்று பார்க்காமல் சுய நலத்துடன் இருக்கிறார்கள்’ என்று அண்ணாமலையை வைத்துக்கொண்டு நேரடியாக விமர்சனம் செய்தார் குருமூர்த்தி.
தமிழகத்தில் காங்கிரஸ் அதிமுக இரண்டு தேசிய கட்சிகள் இங்குள்ள திமுக, அதிமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்து ஆட்சியில் அமர்ந்தன. ஒரு கட்டத்தில் பாஜகவுடன் உறவில்லை என திமுகவும், அதிமுகவும் முடிவெடுத்தன. ஒவ்வொரு தேர்தலிலும் பாஜக தனித்து விடப்பட்டது. 2014 ஆம் ஆண்டு முதன்முறையாக என்டிஏ கூட்டணி அமைந்தது. அதிமுக 37 இடங்களிலும் என்.டி.ஏ இரண்டு இடங்களையும் வென்றது. திமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.
ஜெயலலிதா அதன் பின்னர் 2016 லும் தனித்து போட்டியிட்டார். 2016-ல் திமுக, காங்கிரஸ் அணி தனியாகவும், மக்கள் நலக்கூட்டணி ஒரு அணியாகவும், பாஜக ஒரு அணியாகவும் போட்டியிட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் பாஜக அதிமுகவுக்குள் உள்ள குழப்பத்தை பயன்படுத்தி ஓபிஎஸ் சை வலுக்கட்டாயமாக உள்ளே திணித்து ஆதிக்கம் செலுத்தியது. 4 ஆண்டு ஆட்சிக்காக பாஜகவின் நட்பை ஏற்றதால் அதிமுக தன் வழக்கமான வாக்குகளை இழக்க தொடங்கியது.
அதிமுக பாஜகவுக்கு எதிராக 2018 க்கு பிறகு மக்கள் நலக்கூட்டணி -திமுக அணி இணைந்தது. இதனால் தமிழகத்தில் இரண்டு அணிகள் ஆதிக்கம் மீண்டும் வந்தது. 2021-ல் அதிமுக தலைமையில் பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட அணிகளும், திமுக தலைமையில் ஒரு அணியும் தேர்தலை சந்தித்தன. திமுக ஆட்சியை பிடித்தாலும் அதிமுகவுக்கு அது ஒன்றும் பெரிய தோல்வி இல்லை. டிடிவி தினகரனுடன் கூட்டணி வைத்திருந்தால் கூடுதலாக 20 தொகுதிகளை வென்றிருக்கும். ஆனாலும் அதை தவறவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
ஆனாலும் அதன் பின்னர் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக தனது இமேஜை இழக்க ஆரம்பித்தது. ஓபிஎஸ் மூலம் கட்சிக்குள் கலக வேலைகள் நடக்க தொடங்கியது. தொடர்ச்சியாக ஓபிஎஸ்சை அதிமுகவின் முக்கிய தலைவர்போல் காட்டி பிரித்தாளும் வேலையை பாஜக செய்தது. இந்த நேரத்தில் பாஜக தலைவராக வந்த அண்ணாமலியும் தன் பங்குக்கு அதிமுக உள் விவகாரங்களை பேச ஆரம்பித்தார். ஓபிஎஸ் குழப்பத்தை சமாளிக்க எடப்பாடி உள்ளிட்டோர் முயற்சி எடுக்கும் கேப்பில் அண்ணாமலை தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். கூடவே அதிமுகவையும் அட்டாக் செய்ய ஆரம்பித்தார்.
இது அதிமுக தலைவர்களுக்கு கோபத்தை தந்தாலும் பாஜக மேலிட தலைவர்கள் நட்பு காரணமாக பொறுத்து போனார்கள். ஆனாலும் அண்ணாமலை திமுகவை விமர்சிப்பதைவிட அதிமுகவை, மறைந்த தலைவர்களை விமர்சிக்க ஆரம்பித்தது பிளவை அதிகப்படுத்தியது. அண்ணாமலையை மாற்றாவிட்டால் கூட்டணி முறியும் என்பதை வலியுறுத்தியும் பாஜக தலைமை அண்ணாமலை பக்கம் நின்றதால் கூட்டணி முறிந்தது.
இதில் பாஜகவின் மூத்த தலைவர்களுக்கு அதிருப்தி. அதிமுகவால் பாஜகவுக்கு தமிழகத்தில் 4 எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர். பாஜகவுக்கு அதிமுகவை விட நம்பகமான நட்பு கட்சி கிடைப்பது கடினம் ஆனால் அண்ணாமலையின் தனிப்பட்ட செயல்பாட்டால் கூட்டணி முறிந்தது இது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என சொல்லிப்பார்த்தும் டெல்லி தலைமை அண்ணாமலைக்கு ஆதரவாக நின்றதால் கூட்டணி முறிந்தது. இந்நிலையில் 2024 மக்களவை தேர்தலில் அண்ணாமலையின் பேச்சைக்கேட்டு பாமகவுடன் சேர்ந்து அதிமுக இல்லாமல் தனித்து போட்டியிட்டது பாஜக.
இதனால் 12 முதல் 15 தொகுதிகள் என்.டி.ஏவுக்கு கிடைக்காமல் போனது திமுக கூட்டணி 100% வெற்றி பெற்றது. இதன் பின்னர் அண்ணாமலை மாற்றப்படுவார் என மூத்த நிர்வாகிகள் நம்பினர். அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்பு கிடைத்தால் அதற்கு அண்ணாமலை மட்டுமே தடை என மூத்த தலைவர்கள் எண்ணினர். துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் எண்ணமும் அதுவாகத்தான் இருந்தது.
அடுத்து 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமையும் அது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியாக இருக்கும் அல்லது தவெகவுடன் இணைந்து கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளது. பாஜக தங்களை நடத்தியதற்கும் அண்ணாமலையின் தனித்த செயல்பாட்டுக்காகவும் பாஜகவுடன் கூட்டணி பற்றிய நினைப்பே இல்லாமல் இருக்கிறது அதிமுக.
இதையும் படிங்க: “ஆளுநருக்கு எச்சரிக்கை... அண்ணாமலைக்கு நன்றி”... தனது பாணியில் பதிலடி கொடுத்த அமைச்சர் துரைமுருகன்!
ஆனால் அதிமுக கூட்டணி இல்லாவிட்டால் தனித்து விடப்படுவோம், ஒரு எம்.எல்.ஏ கூட வெல்ல முடியாது, 6% வாக்கு கிடைப்பது கூட சிக்கல் என்று பாஜக தலைவர்கள் கருதுகின்றனர். இதே எண்ணம் நேற்று துக்ளக் விழாவிலும் குருமூர்த்தியின் பேச்சி எதிரொலித்தது. கடந்தமுறை மேடையில் அமரவைக்கப்பட்ட அண்ணாமலை இம்முறை மேடையில் ஏற்றப்பட்டவில்லை. அதேபோல் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தே தீரவேண்டும், ஆனால் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடியை நினைத்தால் தான் என்று பேசிய குருமூர்த்தி அண்ணாமலையையும் மறைமுகமாக ஒரு பிடிபிடித்தார்.
திமுகவை வீழ்த்த வேண்டும் என்று எம்ஜிஆர், ஜெயலலிதா எந்தளவுக்கு உறுதியாக இருந்தார்கள், கட்சி அரசியல் என்பதே இப்போது இல்லாமல் போய்விட்டது. கட்சிக்கு கட்சி இதுபோன்ற ஆட்கள் இருக்கிறார்கள், கட்சி நலனை விட கட்சிக்கு லாபம் என்பதை பார்ப்பதைவிட சிலர் சுயநலமாக இயங்குகிறார்கள் இதனால் கட்சிக்கு நஷ்டம் என்ற அவரது பேச்சில், ”கூட்டணி அமைவதில் சுயலாபத்தை பார்ப்பவர்கள் இருக்கிறார்கள், எதையும் எதிர்பாராத கட்சி என்றால் பாஜகவை சொல்லலாம் கட்சி, கொள்கை, நாடு என்று பிடித்தம் இருக்கும், ஆனால் பாஜகவுக்குள்ளும் சில பேர் இவர்களுடன் போனால் நமக்கு லாபமோ என்று பார்க்கிறார்கள், கட்சிக்கு என்ன லாபம் என்று யோசனை செய்ய மாட்டார்கள். இப்படிப்பட்ட சிலரையும் பாஜகவில் பார்க்கிறேன். இது நாட்டுக்கு நல்லதல்ல, கட்சிக்கு நல்லதல்ல, தமிழகத்துக்கு நல்லதல்ல. இது மாறவேண்டும்” . என்று பேசி சூசகமாக அண்ணாமலையை முன்னால் அமரவைத்துக்கொண்டே குருமூர்த்தி விமர்சனம் செய்தார்.