இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்த இயக்குநர்கள்.. தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்து விட்டதாக புகழாரம்..!
இசைஞானி இளையராஜாவை தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சிம்பொனி இசையமைத்து சர்வதேச இசையரங்கில் தனது பெயரையும், தமிழ் நிலத்தின் பெயரையும் சேர்த்து பொறித்து பெருமை சேர்த்த இசைஞானி இளையராஜாவை, தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினர் நேரில் சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கடந்த 8-ந் தேதி லண்டனில் உள்ள ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து வல்லமை (Valient) என்ற பெயர் கொண்ட சிம்பொனி இசைக்கோர்வையை இசைத்து புதிய சாதனை படைத்தார் இசைஞானி இளையராஜா. இதன்மூலம் மொசார்ட், பீத்தோவன், பாஹ், சாய்கோவ்ஸ்கி ஆகியோர் வரிசையில் சிம்பொனி உருவாக்கிய படைப்பாளியாக இளையராஜாவும் இணைந்துள்ளார். ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனி எழுதிய முதலாவது திரையிசைக் கலைஞர் என்ற பெருமையையும் இளைராஜா அடைந்துள்ளார்.
இதையும் படிங்க: 100 கோடியில் வீடு... பணத் திமிரு; ஸ்டேட்டஸ் அரிப்பு... நயனை கிழித்தெடுத்த பத்திரிக்கையாளர்!!
புகழ் மகுடம் சூடிய நிலையில் தாயகம் திரும்பிய அவரை தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் நேரில் வரவேற்றனர். இதன் பின்னர் திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் இளையராஜாவை சந்தித்து வாழ்த்துக் கூறி வந்தனர்.
உச்சக்கட்டமாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் குடியரசுத் துணைத்தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான ஜெக்தீப் தன்கர், இளையாராஜா அவையில் இருக்கும்போது அவருக்கு புகழ்மாலை சூட்டினார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை, இளையாராஜா நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்..
திரும்பிய திசையெல்லாம் புகழும், வாழ்த்துகளும் இளையராஜாவுக்கு வந்து குவியும் வேளையில், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பிலும் மரியாதை செய்யப்பட்டுள்ளது. இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரச, நிர்வாகிகள் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், பெப்சி சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் இன்று இளையராஜாவை நேரில் சந்தித்தனர். ஆளுயர மாலை அணிவித்து தங்கள் அன்பை அவர்கள் வெளிப்படுத்தினர்.
வெறும் 34 நாட்களில் சிம்பொனியை எழுதி அதனை 80-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களை இசைக்கவைத்து உலக அரங்கையே பிரமிக்க வைத்த பச்சைத் தமிழன் என்று அவர்கள் இளையராஜாவை உச்சிமுகர்ந்தனர்.
சிம்பொனி முடிந்த கையோடு அதே லண்டன் மேடையில், மேற்கத்திய இசைக்கலைஞர்களால் தனது புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட பாடல்களை இசைவித்தார் இளையராஜா. அதுபற்றி நெகிழ்ந்து குறிப்பிட்ட இயக்குநர்கள், உங்களால் தமிழும், தமிழ்நாடும் பெருமை கொள்வதாக கூறினர்.
இதையும் படிங்க: டில்லி ரிட்டர்ன்ஸ்... 'கைதி 2' பட அறிவிப்பை வெளியிட்ட நடிகர் கார்த்தி..!!