தெலுங்கானாவில் கோர விபத்து... இடிந்து விழுந்த சுரங்கப்பாதை...! சிக்கிய தொழிலாளர்களின் கதி என்ன?
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் சுரங்கப்பாதையின் கூரை இடிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
அந்த மாநிலத்தின் நாகர் கர்னூல் மாவட்டத்தின் டோமல பெண்டா அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் சுரங்கப் பாதையில் ஒரு பகுதி இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. உள்ளே வேலை செய்த தொழிலாளர்கள் தங்களை காப்பாற்றும் படி குரல் எழுப்பினார்கள். சுரங்க பாதையின் மேல் தளத்தில் சுமார் மூன்று மீட்டர் அளவுக்கு இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நான்கு நாட்களுக்கு முன்பு தான் இந்த சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கியதாகவும் அவர்கள் கூறினார்கள்.
நீர்ப்பாசன திட்டத்தை கையாளும் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு மீட்பு குழுக்கள் நிலைமையை மதிப்பிடுவதற்காக சுரங்கப்பாதைக்குள் நுழைந்து சென்றிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வைபவ் கைகோர்ட் கூறினார்.
இதையும் படிங்க: KCRக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியவர் கொலை..! தெலுங்கானாவில் அட்ராசிட்டி..!
சுரங்கப்பாதையில் உள்புறம் சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் விபத்து நடந்த இந்த இடம் உள்ளது. மீட்பு குழுவினர் திரும்பி வந்த பிறகுதான் நிலைமையின் முழு விவரமும் தெரியும் என்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
மேல்தளம் இடிந்து விழுந்த போது அந்த இடத்தில் 50 தொழிலாளர்கள் இருந்தனர். மேலும் 43 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் மற்றொரு அதிகாரி தெரிவித்தார். காலை 10 மணி அளவில் அந்தப் பகுதி இடிந்துவிழுந்தது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தனதுஅதிர்ச்சியை வெளிப்படுத்தினார். "இதில் பலர் காயம் அடைந்து இருக்கலாம்" என்று கூறிய அவர், உறுதியான தகவல் எதுவும் இதுவரை வரவில்லை என்றும் தெரிவித்தார்.
முதலமைச்சருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து உடனடியாக அவர் மாவட்ட உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிவாரண நடவடிக்கைகளை துரிதமாக தொடங்கும்படி உத்தரவிட்டார்.
இதற்கிடையில் கட்டுமான பணிகள் விஷயத்தில் அரசு நிர்வாகம், காண்ட்ராக்டர்களுடன் சமரசம் செய்து கொள்வதால் பணிகளின் தரத்தை புறக்கணித்ததாக பி ஆர் எஸ் கட்சி தலைவர் கே டி ராமராவ் குற்றம் சாட்டி இருக்கிறார்.
இதையும் படிங்க: 21 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த 'அந்த' பொருள்! ஸ்கேன் செய்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி..!!