×
 

தங்க நகையை ரயிலில் தவறவிட்ட பெண்.. திருடிவிட்டு நாடகமாடிய ஊழியர் கைது..!

கும்பகோணம் அருகே ரயிலில் பெண் தவறவிட்ட தங்கநகைகளை மீட்ட போலீசார், திருட்டில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியரை கைது செய்தனர்.

கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை பகுதியை சோந்தவர் ஸ்ரீகாந்த். சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவருடைய மனைவி சரஸ்வதி. வயது 59. இவர்  சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனங்களுக்கு ஆடிட்டிங் பார்த்து வருகிறார்.  சரஸ்வதி நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு உழவன் ரயிலில் ஏசி கோச்சில் வந்துள்ளார். ரயில் பயணத்தின் போது தன்னுடைய 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள பன்னிரெண்டே முக்கால் பவுன் நகைகளை பணப்பையில் வைத்து அதனை மற்றொரு பையின் உள்ளே வைத்து விட்டு தூங்கியுள்ளார். 

அதிகாலையில் ரயில் கும்பகோணத்திற்கு வந்தவுடன் ரயிலில் இருந்த சரஸ்வதி அவசர அவசரமாக இறங்கியுள்ளார். பின்னர் ரயில் புறப்பட்டு சென்ற பின்னர், தனது உடமைகளை சரிபார்த்துள்ளார்.  அப்போது நகை இருந்த பை உள்பட 2 பைகளை ரயிலில் தனது இருக்கையில் மறந்து வைத்துவிட்டு இறங்கியது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி கும்பகோணம் ரயில் நிலையத்தில் நடைமேடையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் பாபநாசம் ரயில் நிலையத்தில் பணியில் இருந்த ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி ரயில் பாபநாசம் ரயில் நிலையத்திற்கு சென்றவுடன் சம்பந்தபட்ட ரயில் பெட்டியில் சென்று போலீசார் பார்த்தனர். 

இதையும் படிங்க: கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி..! தகாத உறவால் ஆத்திரம்!

அங்கு சரஸ்வதி சொன்ன அடையாளங்களுடன் பைகள் கிடந்தன. அதனை மீட்ட போலீசார் கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அதனை சரஸ்வதி சோதித்து பார்த்த போது, அதில் நகை இருந்த பை மட்டும் காணாமல் போயிருப்பது தெரிந்தது. இதனையடுத்து தன்னுடைய நகைப்பையை மர்மநபர்கள் திருடி சென்று விட்டதாக கும்பகோணம் ரயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் போில் தஞ்சை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், தனிப்படை காவலர் அய்யப்பன் ஆகியோர் ரயில் பெட்டியில் வேலை பார்க்கும் ஒப்பந்த பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். 

அதில் ஏசி கோச்சில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்த திருச்சி ஸ்ரீரங்கம் இனாம்குளத்தூர் பகுதியை சேர்ந்த 31 வயதான மகேந்திரன் என்பவர் போர்வைகளை எடுத்துவைக்கும் போது நகைப்பையை பார்த்ததும், அதனை எடுத்து வைத்துக்கொண்டதும் தெரியவந்தது. மகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: வாரணாசியில் சிக்கி தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்கள்... கும்பமேளா கூட்டத்தால் ரயிலில் ஏற முடியாமல் தவிப்பு..! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share