கி.வீரமணியை கண்டிக்கும் விசிக...பெரியாரை விமர்சிக்கும் சீமானை கண்டிக்காமல், வேங்கை வயல் விவகாரத்தில் அரசை ஆதரிப்பதா? என கேள்வி
தி.க தலைவர் வீரமணி வேங்கை வயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு ஆதரவாக நிற்காமல் போலீஸ் பக்கம் கருத்து தெரிவிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது, பெரியாரை விமர்சித்த சீமானை கண்டிக்கவில்லை என விசிக விமர்சித்துள்ளது.
வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட பின்னரும் புகாரை சரிவர விசாரிக்காமல் காலம் தாழ்த்தி பின்னர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. நீதிமன்றம் பலமுறை தலையிட்டு, எதிர்க்கட்சிகள் கண்டித்தும் குற்றவாளிகளை அடையாளம் காணப்படுவதில் சுணக்கம் காணப்பட்டது. இந்நிலையில் திடீரென வேங்கை வயல் விவகாரத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
அதில் அதே கிராமத்தை சேர்ந்த 3 பேர் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது கூட்டணியில் உள்ள விசிக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் ஏற்க மறுத்து உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க கேட்டுக்கொண்டனர். பா.ரஞ்சித், ஆதவ் அர்ஜுனா போன்றோரும் கண்டித்திருந்தனர். இந்நிலையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி போலீஸ் சார்ஜ் ஷீட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பதை விசிக கண்டித்துள்ளது.
இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய வேங்கைவயல் சம்பவம்; சந்தேகத்தை கிளப்பும் திருமா...!
வீரமணி அரசுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் கு.கா.பாவலன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில்...
”நாம் தமிழர் கட்சியின் சீமான் தொடர்ந்து தந்தை பெரியாரை இழிவு படுத்தி, அவரது அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் கொச்சைப்படுத்தி வருகின்ற வேளையில், சான்றுகளோடு ஆதாரத்தை எடுத்துரைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு தந்தை பெரியார் அவர்களைப்பற்றி தெளிவுபடுத்த வேண்டிய இடத்திலிருக்கும் வீரமணி அவர்கள், அதைச் செய்யாமல், அமைதிகாத்து வந்த நிலையில்,
தற்போது வெந்த புண்ணில் வேல் பாய்வது போல் வேங்கைவயல் கொடுமைக்கு ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் தான் காரணமெனும் சிபிசிஐடி அறிக்கையை நியாயப்படுத்தி பேசியிருக்கிறார். சிபிசிஐடி அறிக்கை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் கொடுமையிலும் கொடுமையை திணித்ததாகவே கருதும்படி இருக்கிறது.
நிலைமை அவ்வாறு இருக்கின்ற வேளையில், கி.ரமணி அவர்களின் அக்கருத்தானது, வேங்கைவயல் கொடூரத்திற்கு உண்மை வேண்டி உரத்து குரல்கொடுப்போரின் கருத்துகளை நெரிப்பதாக இருக்கிறது. அவரது ஆழமான பார்வையை சிபிசிஐடி அறிக்கைக்கு ஆதரவாக திருப்பாமல், சீமான் உள்ளிட்ட தந்தை பெரியாரை கலங்கப்படுத்துவோருக்கு எதிராக திருப்புவதுதான் அவர் கடந்து வந்த பாதைக்கு பொருத்தமானதாக இருக்கும்”. இவ்வாறு விசிக விமர்சித்துள்ளது.
இதையும் படிங்க: “ஒரு அடி கூட உள்ள வர முடியாது” - திருமாவுக்கு நேரடி சவால்; போலீஸ் வளையத்திற்குள் வேங்கைவயல்!